புவி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்தது இ.ஓ.எஸ்-05: ஜி.எஸ்.எல்.வி. எஃப்-17 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி. எஃப்-17 ராக்கெட் மூலம் அதிநவீன இ.ஓ.எஸ்-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹ…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி. எஃப்-17 ராக்கெட் மூலம் அதிநவீன இ.ஓ.எஸ்-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, திட்டமிட்டபடி சரியாக அதிகாலை 2.55 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
சுமார் 2,367 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு மற்றும் இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏவப்பட்டுள்ளது. விண்வெளியிலிருந்து பூமியைத் தொடர்ந்து கண்காணிக்கும் திறன் கொண்டதால், இது 'வானத்தின் கண்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏவப்பட்ட ராக்கெட் தனது பயணத்தை தடையின்றி வெற்றிகரமாக நிறைவு செய்து, பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவிசார் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டிடிவி தினகரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.