விண்ணில் பாய்ந்த EOS-05: இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பெருமிதம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ ஜிஎஸ்எல்வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ ஜிஎஸ்எல்வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.55 மணிக்கு இந்த ஏவுதல் நடைபெற்றது. நள்ளிரவில் மழை பெய்த போதிலும், திரளான மக்கள் குடைகளுடன் வந்து இந்த வரலாற்று நிகழ்வை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
2,367 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் முதல் அதிக எடை கொண்ட மற்றும் பிரத்யேக படமெடுக்கும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாகக் கருதப்படுகிறது. திட்டமிட்டபடி ஏவப்பட்ட 18 நிமிடங்களுக்குப் பிறகு, இது பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடைந்துள்ள இந்த செயற்கைக்கோள் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரோவின் இந்த புதிய மைல்கல் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விண்வெளித் துறையின் சிறப்பான செயல்பாடுகள், புத்தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் திறன்களுக்கு இந்த ராக்கெட் ஏவுதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், இந்த முன்னேற்றங்கள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இஸ்ரோவின் இந்த வெற்றிப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.