2030-க்குள் மனித இனத்திற்கு ஆபத்து: ஏஐ ஆராய்ச்சியாளரின் அதிரடி எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த ஜேக்கப் காக்சன், தனது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, இந்தத் தொழில்நு…

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த ஜேக்கப் காக்சன், தனது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து பகிரங்கமான எச்சரிக்கை விடுத்துள்ளார். 2030-ஆம் ஆண்டுக்குள் 'சூப்பர் இண்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பம் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அழித்துவிடக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ள கருத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஜேக்கப் காக்சன், நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய நிறுவனங்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகவும், கட்டுக்கடங்காத 'சூப்பர் இண்டெலிஜென்ஸ்' திறனை அடைவதற்காக கண்மூடித்தனமாகப் போட்டியிட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் ஆபத்தான நிலையை எட்டுவதற்கு முன்னதாக, அதன் ஆராய்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆராய்ச்சியாளர்கள் பொதுவெளியில் ஏஐ குறித்து சாதாரணமாகப் பேசினாலும், அதன் அபரிமிதமான வளர்ச்சி குறித்து தனிப்பட்ட முறையில் கடும் அச்சத்தில் இருப்பதாக ஜேக்கப் காக்சன் சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனித இனம் எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதால், இது தொடர்பான விவாதங்கள் தற்போது உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.