தாம்பரம் - செங்கல்பட்டு சாலையில் 4 புதிய நடைமேம்பாலங்கள்: ரூ.11.38 கோடியில் லிப்ட், சிசிடிவி வசதிகளுடன் என்.எச்.ஏ.ஐ திட்டம்
சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 32-ல் (NH-32) பாதசாரிகள் சாலையைக் கடப்பதை எளிதாக்கவும் பாதுகாப்பாக்கவும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) லிப்ட் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 4 புதிய நடைமேம்பாலங்களை (FOB) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களாக (Black spots) கண்டறியப்பட்ட ஊரப்பாக்கம் (சிவன் கோயில் அருகில்), கூடுவாஞ்சேரி (மின்வாரிய அலுவலகம் அருகில்), கூடுவாஞ்சேரி (ரயில் நிலையம் அருகில்), மறைமலை நகர் / எம்.எம். நகர் (ஃபோர்டு சந்திப்பு அருகில்) ஆகிய 4 முக்கியப் பகுதிகளில் இந்த நடைமேம்பாலங்கள் அமையவுள்ளன: குறிப்பாக கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே அமையவுள்ள நடைமேம்பாலம், தினசரி ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும். திட்டத்தின் சிறப்பம்சங்கள் (மதிப்பு ரூ.11.38 கோடி) சாலையின் இருபுறமும் தலா 16 பேர் வரை செல்லும் வசதியுள்ள மின்தூக்கிகள் (Lifts) அமைக்கப்படும். இது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பெரிதும் உதவும். 4 நடைமேம்பாலங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, NH-32 சுங்கச்சாவடியில் உள்ள மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புடன் (ATMS) இணைக்கப்பட்டு தொலைவிலிருந்து கண்காணிக்கப்படும். நடைமேம்பாலம், படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் பகுதிகளில் முழுமையான விளக்கு வசதிகள் செய்யப்படும். மேலும், நடைமேம்பாலங்களின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் தகடுகள் (Solar Panels) பொருத்தப்பட உள்ளன. நெடுஞ்சாலையிலிருந்து குறைந்தபட்சம் 5.5 மீட்டர் உயரத்தில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படும். தடுப்புக் கம்பிகள் (Guard rails), பிரதிபலிப்பான்கள் (Road studs), எச்சரிக்கைப் பலகைகள் உள்ளிட்ட விரிவான சாலைப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே அமைக்கப்பட்ட நடைமேம்பாலங்கள் இதே வழித்தடத்தில் கடந்த 2024-ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பல இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. பெருங்களத்தூர் (இரணியம்மன் கோயில் அருகில்), வண்டலூர் (ரயில் நிலையம் அருகில்), தைலாவரம் (எஸ்டான்சியா டெக் பார்க் அருகில்), தைலாவரம் (வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அருகில்), காட்டாங்கொளத்தூர் சந்திப்பு, மறைமலை நகர் சந்திப்பு (டவுன்ஷிப் அருகில்), சிங்கபெருமாள் கோவில் (ரயில் நிலையம் அருகில்) லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன.

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலை 32-ல், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்காக 4 புதிய நடைமேம்பாலங்களை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ரூ.11.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலங்களில், லிப்ட் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களாகக் கண்டறியப்பட்ட ஊரப்பாக்கம் சிவன் கோயில் அருகில், கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் மற்றும் ரயில் நிலையம் அருகில், மற்றும் மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இப்பகுதிகளில் பாதசாரிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.