PulseNews
தொழில்நுட்பம்

வைர மையப்பகுதி, கிராஃபைட் மேகங்கள்: எலுமிச்சை வடிவத்தில் விசித்திர கிரகத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப்

நமது பூமி ஒரு சரியான உருண்டை வடிவம் கிடையாது. அது சுழல்வதால் நிலநடுக்கோட்டுப் பகுதியில் லேசாகத் தடித்திருக்கும். ஆனால், சமீபத்தில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஆய்வு செய்த ஒரு விண்வெளிப் பொருள், விஞ்ஞானிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. PSR J2322-2650b என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பொருள், பார்ப்பதற்கு ஒரு எலுமிச்சை பழத்தைப் போல நீள்வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. வியாழன் கிரகத்தின் நிறையை கொண்ட இந்த கிரகம், பூமியிலிருந்து சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது ஒரு பல்சர் எனப்படும் அதிவேகமாகச் சுழலும் ஒரு இறந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இந்த கிரகம் தனது நட்சத்திரத்திற்கு மிக அருகில் (வெறும் 10 லட்சம் மைல் தொலைவில்) இருப்பதால், அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை கிரகத்தை ஒரு பக்கம் இழுக்கிறது. இதனால் இந்தக் கிரகம் உருண்டையாக இருக்க முடியாமல், சுமார் 38% அகலமாக இழுக்கப்பட்டு எலுமிச்சை வடிவில் காட்சியளிக்கிறது. "நாம் உறுதிப்படுத்திய கிரகங்களிலேயே மிகவும் நீட்டப்பட்ட கிரகம் இதுதான்" என்கிறார் சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானி மைக்கேல் ஜாங். வைரம் மற்றும் கிராஃபைட் மேகங்கள்: இந்த கிரகத்தின் வளிமண்டலம் வழக்கமான கிரகங்களைப் போல இல்லை. பொதுவாக கிரகங்களில் காணப்படும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் அல்லது நைட்ரஜன் இதில் அறவே இல்லை. மாறாக, இது முழுக்க முழுக்க ஹீலியம் மற்றும் கார்பன் துகள்களால் ஆனது. இந்த கிரகத்தின் மையப்பகுதி (Core) வைரங்களால் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் வளிமண்டலத்தில் பென்சில் முனையில் இருக்கும் 'கிராஃபைட்' துகள்களால் ஆன மேகங்கள் இருக்கலாம். கார்பன் மற்றும் கசிவு போன்ற துகள்கள் இருப்பதால், இந்தக் கிரகம் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இது கிரகமா? அல்லது நட்சத்திரத்தின் எஞ்சிய பகுதியா? இந்த விசித்திரமான பண்புகளைக் கவனிக்கும்போது, இது ஒரு சாதாரண கிரகம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு காலத்தில் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்திருக்கலாம். அந்த நட்சத்திரத்தைச் சிறியதாகத் தேய்த்து, அதன் 99.9% பகுதியை அந்த 'பல்சர்' நட்சத்திரம் விழுங்கியிருக்கலாம். இதனை விஞ்ஞானிகள் "பிளாக் விடோ" அமைப்பு என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒரு பெரிய நட்சத்திரம் தனது துணையை மெல்ல மெல்ல தின்று அழிப்பதைப் போன்ற ஒரு நிகழ்வு இது. தற்போது நாம் பார்ப்பது அந்த நட்சத்திரத்தின் கடைசி எச்சங்களாக இருக்கலாம். அல்லது இது நாம் இதுவரை அறிந்திராத ஒரு புதிய வகை விண்வெளிப் பொருளாகவும் இருக்கலாம். இது போன்ற இன்னும் பல விசித்திரமான உலகங்களைத் தேடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வைர மையப்பகுதி, கிராஃபைட் மேகங்கள்: எலுமிச்சை வடிவத்தில் விசித்திர கிரகத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப்
PulseNews சுருக்கம்

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி மூலம் PSR J2322-2650b என்ற விசித்திரமான கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. வியாழன் கிரகத்திற்கு இணையான நிறையைக் கொண்டுள்ள இந்த கிரகம், பூமியிலிருந்து சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

பொதுவாகக் கிரகங்கள் கோள வடிவில் இருக்கும் நிலையில், இது எலுமிச்சை பழத்தைப் போன்ற நீள்வட்ட வடிவத்தில் காட்சியளிப்பது விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரத்தால் ஆன மையப்பகுதியையும், கிராஃபைட் மேகங்களையும் கொண்டதாக இந்த கிரகம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology