அரிய வகை ஹிமாலயன் தேனீ: பூட்டான், சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் கண்டுபிடிப்பு!
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் (ZSI) சேர்ந்த விஞ்ஞானிகள், இதுவரை பூட்டான் மற்றும் சீனாவில் மட்டுமே காணப்பட்ட அரிய வகை ஹிமாலயன் தேனீ ஒன்றை இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வின் போது, 'கொலெட்ஸ் பூட்டானிகஸ்' (Colletes bhutanicus) என்ற தனித்து வாழும் வகை தேனீ கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, கிழக்கு இமயமலையின் வளமான தேனீ பன்முகத்தன்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் மகரந்தச்சேர்க்கை செய்யும் உயிரினங்களை பற்றிய புரிதலையும் உயர்த்தியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கண்டுபிடிப்பை ZSI விஞ்ஞானிகளான திவ்யஜோதி கோஷ், கே. ஏ. சுப்பிரமணியன் மற்றும் திருதி பானர்ஜி ஆகியோர் பதிவு செய்துள்ளனர். கூட்டாக வாழும் சாதாரண தேன் தேனீக்களை போல் அல்லாமல், 'கொலெட்ஸ்' தேனீக்கள் தனித்து வாழும் இயல்புடையவை. இவை கூடுகளாக வாழாமல், ஒவ்வொரு தேனீயும் தனக்கென தனி கூடுகளைக் கட்டி வாழ்கின்றன. தனித்து வாழ்ந்தாலும், சுற்றுச்சூழலில் மகரந்தச்சேர்க்கைக்கு இவை முக்கிய பங்காற்றுகின்றன. பூவுக்கு பூ சென்று தேனையும் மகரந்தத்தையும் சேகரிக்கும்போது, தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், மலைப்பகுதி விவசாயப் பயிர்களின் மகசூல் அதிகரிப்பிற்கும் பெருமளவில் உதவுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 1,500 முதல் 3,800 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்ட இந்த தேனீ, கடுகு, பக்வீட் (Buckwheat), கொத்தமல்லி, பீன்ஸ், மிளகாய் மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட 25 வகையான பூக்கும் தாவரங்களில் அமர்ந்து தேன் சேகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது காட்டுத் தாவரங்களுடன் மட்டுமல்லாமல், மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் விவசாயப் பயிர்களுடனும் இணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. முன்னதாக 'சி. பூட்டானிகஸ்' (C. bhutanicus) வகை தேனீக்கள் பூட்டான் மற்றும் சீனாவின் சிசாங் (Xizang) போன்ற உயர்மலைப் பகுதிகளில் (3,800 மீட்டருக்கும் அதிகமான உயரம்) மட்டுமே காணப்பட்டதாக 2014-இல் 'ஜூடாக்ஸா' (Zootaxa) இதழில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இது கண்டறியப்பட்டதன் மூலம், இமயமலைப் பகுதியில் இத்தேனீக்களின் பரவல் எல்லை இந்தியா வரை நீண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மாறுபட்ட உயரங்கள், காலநிலை, தாவரங்களைக் கொண்டிருப்பதால், இத்தகைய அரிய கண்டுபிடிப்புகளுக்கு மிக முக்கியமான இடமாகத் திகழ்கிறது. பல தொலைதூர மலைப்பகுதிகளை ஆய்வு செய்வது கடினம் என்பதால், அங்குள்ள பல உயிரினங்கள் இன்னும் உலகிற்குத் தெரியாமலேயே உள்ளன. எனவே, அம்மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் தொடர்ந்து பல்லுயிர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இக்கண்டுபிடிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அருணாச்சல பிரதேச துணை முதலமைச்சர் சௌனா மேன் (Chowna Mein), இது அருணாச்சல பிரதேசத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும், மலைப்பகுதி விவசாயத்திற்கு நாட்டின் உள்நாட்டு மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் கூறியுள்ளார். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, இமயமலைப் பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்துகொள்ள இக்கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதுவரை பூட்டான் மற்றும் சீனாவில் மட்டுமே காணப்பட்ட 'கொலெட்ஸ் பூட்டானிகஸ்' (Colletes bhutanicus) என்ற அரிய வகை ஹிமாலயன் தேனீயை இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, தனித்து வாழும் பழக்கம் கொண்ட இந்த தேனீ இனம் அடையாளம் காணப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு கிழக்கு இமயமலையின் வளமான தேனீ பன்முகத்தன்மையை உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இப்பகுதியின் சூழலியலில் மகரந்தச்சேர்க்கை செய்யும் உயிரினங்களின் முக்கியத்துவத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.