பள்ளியில் இஸ்ரோ மாதிரி கண்காட்சி: மாணவர்களின் கவுண்ட் டவுனில் விண்ணில் பாய்ந்த மாதிரி ராக்கெட்
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்ட விண்வெளி கண்காட்சியில், பள்ளி மைதானமே ராக்கெட் ஏவுதளம்போல் மாறி, மாணவர்களின் உற்சாகக் கவுண்ட் டவுனுக்கு இடையே மாதிரி ராக்கெட் வானில் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. கோவை கவுண்டர் மில் பகுதியில் செயல்பட்டு வரும் வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் பிரம்மாண்ட விண்வெளி கண்காட்சி நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) பல்வேறு விண்வெளி திட்டங்கள், செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் சந்திரயான் திட்டங்களின் மாதிரிகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விண்வெளித் துறை விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு, விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட்டுகளின் செயல்பாடுகள் மற்றும் இத்துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தனர். இந்தக் கண்காட்சியின் உச்சக்கட்ட நிகழ்வாக மாதிரி ராக்கெட் ஏவுதல் நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் கூடியிருந்த மாணவர்கள் உற்சாகமாகக் கவுண்ட் டவுன் சொல்ல, மாதிரி ராக்கெட் தத்ரூபமாக வானை நோக்கி சீறிப்பாய்ந்தது. இந்தக் காட்சியை மாணவர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த வியப்புடன் கண்டு ரசித்தனர். பாடப்புத்தகங்களில் படிக்கும் விண்வெளி அறிவியலை வெறும் தியரியாக மட்டுமின்றி, நேரடி மாதிரிகள் மற்றும் செயல்விளக்கங்கள் வழியாகக் கற்றுக்கொடுக்கவும், எதிர்காலத்தில் விண்வெளி, செயற்கைக்கோள் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இக்கண்காட்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. செய்தி: பி. ரஹ்மான், கோவை

கோவையில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரம்மாண்ட விண்வெளி கண்காட்சி நடைபெற்றது. இதில் இஸ்ரோ அமைப்பின் மாதிரிகளைப் பின்பற்றி விண்வெளி சார்ந்த படைப்புகள் இடம்பெற்றன.
பள்ளி மைதானமே ராக்கெட் ஏவுதளமாக மாற்றப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் கவுண்ட் டவுன் சொல்ல, மாதிரி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது.