3,000+ இனங்கள், ஆனா வெறும் 8 ஒலிகள்: பறவைகளின் குரல் ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்
காலை வேளையில் கேட்கும் பறவைகளின் கீச்சொலிகள் நம் மனதை மயக்கும் தனித்துவமான இசை. உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பறவை இனங்கள் எண்ணற்ற மாறுபட்ட ராகங்களில் பாடினாலும், அவற்றின் இந்த பிரமாண்ட இசைக்கு பின்னால் இருப்பது வெறும் 8 அடிப்படை ஒலி வடிவங்கள் மட்டுமே என்ற ஆச்சரியமான தகவல் புதிய சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் செயின்ட்-எட்டியென் பல்கலைக்கழகம் மற்றும் Ecole Pratique des Hautes Etudes-PSL விஞ்ஞானிகள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த மெகா ஆய்வில் 3,160 பாடும் பறவை இனங்களின் (Passerines) 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட குரல் பதிவுகள் அலசி ஆராயப்பட்டன. ஜூலை 23 அன்று பிரபல 'சயின்ஸ்' இதழில் வெளியான இந்த ஆய்வு பறவைகளின் உலகம் குறித்த சுவாரசிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. பறவைகளின் ஒலிகள் எவ்வாறு ஒலிக்கின்றன, அவற்றின் சுருதி (Pitch) மற்றும் வேகம் எப்படி மாறுகிறது என்பதை வைத்து விஞ்ஞானிகள் இந்த 8 அடிப்படை ஒலி வடிவங்களைப் பட்டியலிட்டுள்ளனர். மெதுவான நடுக்க ஒலிகள் (Slow trills) வேகமான நடுக்க ஒலிகள் (Fast trills) அதிவேக நடுக்க ஒலிகள் (Ultrafast trills) தட்டையான சீழ்க்கை ஒலிகள் (Flat whistles) மெதுவாக மாற்றமடையும் சீழ்க்கை (Slow-modulated whistles) வேகமாக மாற்றமடையும் சீழ்க்கை (Fast-modulated whistles) சீரான அடுக்கு ஒலிகள் (Harmonic stacks) ஒழுங்கற்ற ஒலிக் குறிப்புகள் (Chaotic notes) பெரும்பாலான பறவைகள் இந்த ஒலிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பாடுவதில்லை; சராசரியாக ஒருபறவை இனம் 8 கூறுகளில் 5 கூறுகள் பயன்படுத்துகிறது. நாம் ஆய்வு செய்த பல பாடல்கள் இவற்றின் கலவையாகவே உள்ளன. நாம் சில அடிப்படை ஸ்வரங்களை வைத்துப் புதிய பாடல்களை உருவாக்குவது போல, பறவைகளும் இந்த 8 அடிப்படை ஒலிகளை வைத்தே தங்களின் எண்ணற்ற மெல்லிசைகளை உருவாக்குகின்றன. மழைக்காட்டுப் பறவைகள் ஏன் எளிமையான ஒலிகளைத் தேர்வு செய்கின்றன? பறவைகளின் பாடலை அவை வாழும் சூழலே தீர்மானிக்கிறது. அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் உள்ள அடர்த்தியான மரங்களும் இலைகளும் ஒலியை எளிதில் கடந்து செல்ல விடுவதில்லை. சிக்கலான ஒலிகளை எழுப்பினால், அவை தூரம் செல்லச் செல்லக் கலைந்துவிடும். இதனால், மழைக்காட்டுப் பறவைகள் தொலைதூரம் தெளிவாகக் கேட்கக்கூடிய 'தட்டையான சீழ்க்கை' மற்றும் 'மெதுவான நடுக்க' ஒலிகளையே பெரும்பாலும் பாடுகின்றன. உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு மழைக்காடுகளில் வாழும் பறவைகளிடையே இந்த ஒற்றுமை காணப்படுகிறது. குளிர் மற்றும் மிதமான பகுதிகளில் (Temperate regions) வாழும் பறவைகள் அதிவேக நடுக்க ஒலிகள் போன்ற சிக்கலான வடிவங்களை பயன்படுத்துகின்றன. இந்த ஒலிகள் மிகக் குறுகிய காலத்தில் அதிக தகவல்களை மற்ற பறவைகளுக்குக் கடத்தும் வல்லமை கொண்டவை; ஆனால் அதிக தூரம் பயணிக்க முடியாது. இந்தப் பகுதிகளில் பறவைகள் அருகருகே இருந்து தகவல் தொடர்புகொள்வதாலும், துணைக்கான கடுமையான போட்டி நிலவுவதாலும், அவை விரைவாகவும் சிக்கலாகவும் பாடித் தங்கள் இருப்பை நிலைநிறுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால்: எளிய ஒலிகள் அதிக தூரம் செல்லும்; சிக்கலான ஒலிகள் குறைந்த தூரத்தில் அதிக தகவல்களைக் கடத்தும். பறவைகளின் உடல் எடை, அலகின் அளவு மற்றும் அவற்றின் குடும்பக் கட்டமைப்பு கூட அவற்றின் பாடலை வடிவமைக்கின்றன. குறிப்பாக, ஒரு ஆண் பறவை பல பெண் பறவைகளுடன் இணையும் இனங்களில் பாலியல் போட்டி அதிகம் இருக்கும். அத்தகைய பறவைகள் துணையை வசீகரிக்கவும், மற்ற ஆண் பறவைகளுடன் போட்டியிடவும் மிக நுணுக்கமான, சிக்கலான பாடல்களைப் பாடுகின்றன. ஒவ்வொரு பறவைக்கும் தனித்தனி குரல் மொழி இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த 8 ஒலி வடிவங்கள் அனைத்து பறவைகளின் குரல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவும் ஒரு பொதுவான சூத்திரமாக மாறியுள்ளது. 'நார்தர்ன் கார்டினல்' பறவை மெதுவான நடுக்க ஒலியையும், 'போஹேமியன் வேக்ஸ்விங்' அதிவேக நடுக்க ஒலியையும், 'அமெரிக்கக் காகங்கள்' சீரான அடுக்கு ஒலிகளையும் பயன்படுத்துகின்றன. மனிதக் காதுகளுக்கு இவை வெவ்வேறாகத் தெரிந்தாலும், அவற்றின் அடிப்படை மூலக்கூறு இந்த 8 ஒலிகளுக்குள்தான் அடங்கியுள்ளது. மனிதர்களின் ஆக்கிரமிப்பு, காடழிப்பு மற்றும் வாகனங்களின் இரைச்சல் பறவைகளின் வாழ்விட அமைப்பை மாற்றியமைத்து வருகின்றன. சூழல் மாறும்போது, பறவைகள் தங்களின் தொடர்பாடல் முறையை எவ்வாறு மாற்றிக்கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு பெரிதும் உதவும். எதிர்காலத்தில் தவளைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற பிற உயிரினங்களின் தகவல் தொடர்பு முறைகளையும் இதே சூத்திரத்தின் அடிப்படையில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பறவை இனங்கள் எழுப்பும் இனிமையான கீச்சொலிகள், வெறும் 8 அடிப்படை ஒலி வடிவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது புதிய சர்வதேச ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் செயின்ட்-எட்டியென் பல்கலைக்கழகம் மற்றும் எகோல் பிராக்டிக் டெஸ் ஹவுட்ஸ் எட்யூட்ஸ்-பிஎஸ்எல் (Ecole Pratique des Hautes Etudes-PSL) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
3,160 பாடும் பறவை இனங்களின் குரல்களை ஆய்வு செய்ததில், அவற்றின் பிரம்மாண்டமான மற்றும் சிக்கலான இசைக்கு பின்னால் இந்த சில அடிப்படை ஒலிகளே இருப்பது தெரியவந்துள்ளது. பறவைகளின் குரல்வளம் குறித்த இந்த வியக்கத்தக்க ரகசியம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.