கரண்ட் செலவே இல்ல: கடலில் மிதக்கும் ஏ.ஐ டேட்டா சென்டர்; அமெரிக்க நிறுவனத்தின் விசித்திரக் கண்டுபிடிப்பு!
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதற்கான தரவு மையங்கள் (Data Centres) முன்னெப்பாதையும் விட அதிக அளவிலான மின்சாரத்தையும் நீரையும் நுகர்ந்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வாக, அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தைச் சேர்ந்த 'பான்தலசா' (Panthalassa) என்ற தொடக்க நிறுவனம் (Startup) கடலில் மிதக்கும் ஏ.ஐ தரவு மையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. 85 மீ. நீளம் கொண்ட இந்த மிதக்கும் தரவு மையம், கடலலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், கடல் நீரை கொண்டே குளிரூட்டும் வசதியை கொண்டுள்ளது. 'ஓஷன்-2' (Ocean-2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மாதிரி அமைப்பை, வாஷிங்டன் கடற்கரையில் அந்த நிறுவனம் தற்போது சோதித்து வருகிறது. கடல் அலைகளில் இருந்து எப்படி மின்சாரம் கிடைக்கிறது? வழக்கமான டேட்டா மையங்கள் நிலப்பரப்பில் உள்ள மின் கட்டமைப்பு (Power Grids) நம்பியிருக்கின்றன. ஆனால், பான்தலசாவின் இந்தத் தளம் கடல் நீரோட்டம் மற்றும் அலைகளின் இயக்கத்திலிருந்து நேரடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அலைகளின் இயக்கத்தால் மிதக்கும் அமைப்பில் ஏற்படும் அசைவுகள் அங்குள்ள டர்பைன்களை (Turbines) இயக்கி மின்சாரத்தை உருவாக்குகின்றன. இந்த மறுசுழற்சி ஆற்றல் (Renewable Energy) மூலம் தரவு மையத்தில் உள்ள ஏ.ஐ சர்வர்கள் இயங்குகின்றன. இதில் படிம எரிபொருட்கள் (Fossil Fuels) எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. Oregon-based startup Panthalassa is developing floating AI data centers powered by wave energy. The 85-meter-long system uses seawater to cool AI chips while turbines generate electricity from ocean waves. A prototype called Ocean-2 is already being tested off the coast of... pic.twitter.com/mNBSN5VDcb — Space and Technology (@spaceandtech_) August 5, 2026 குளிரூட்டலுக்கு கடல் நீர் பயன்பாடு ஏன்? ஏ.ஐ சிப்கள் (Chips) இயங்கும்போது அதிகளவிலான வெப்பத்தை உருவாக்குகின்றன. இதனால், தரவு மையங்களின் செயல்பாட்டுச் செலவில் கணிசமான பகுதி குளிரூட்டும் அமைப்புகளுக்கே (Cooling Systems) செலவாகிறது. இந்த மிதக்கும் தளம், குளிர்ந்த கடல் நீரை உட்புகுத்தி செயலிகளைப் (Processors) பாதுகாப்பாகக் குளிரூட்டுகிறது. பின்னர் அந்த நீர் மீண்டும் கடலிலேயே விடப்படுகிறது. இதன் மூலம் வழக்கமான ஏர்-கண்டிஷனிங் அமைப்புகளுக்குத் தேவைப்படும் மின்சார நுகர்வு பெருமளவில் குறைகிறது. இணைய இணைப்பு எவ்வாறு சாத்தியமாகிறது? கடல் நடுவே அமைந்திருந்தாலும், இந்த தரவு மையத்திற்குத் தடையற்ற இணைய சேவை அவசியமாகும். இதற்காக, எலான் மாஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஸ்டார்லிங்க்' (Starlink) செயற்கைக்கோள் கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிலப்பரப்பு தகவல் தொடர்பு கட்டமைப்புகளைச் சாராமல் கடலிலேயே இதனால் இயங்க முடிகிறது. இதன் முக்கியத்துவம் என்ன? ஜெனரேடிவ் ஏ.ஐ சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் தரவு மையங்களின் மின்சார மற்றும் நீர் நுகர்வு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மிதக்கும் தரவு மையங்கள், நிலப்பரப்பு மின்சாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, குளிரூட்டும் செலவுகளையும் கட்டுப்படுத்த உதவும். கடல் அலைகளின் கரடுமுரடான சூழலில் இதன் ஆயுட்காலம், சுற்றுச்சூழலில் இது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து இன்னமும் சோதனைகள் தொடர்ந்து வருகின்றன. எனினும், இச்சோதனை வெற்றிபெற்றால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்கு இதுவே ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழல் தோழமையான தீர்வாக அமையும்.

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தைச் சேர்ந்த 'பான்தலசா' எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், கடலில் மிதக்கும் ஏ.ஐ தரவு மையத்தை உருவாக்கியுள்ளது. 'ஓஷன்-2' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 85 மீட்டர் நீளமுள்ள முன்மாதிரி தளம், தற்போது வாஷிங்டன் கடற்கரையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது கடல் அலைகளின் இயக்கத்தைப் பயன்படுத்தி டர்பைன்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், புதைபடிவ எரிபொருட்களின் தேவை இதில் இல்லை.
இந்தத் தரவு மையம் ஏ.ஐ சர்வர்களைக் குளிர்விக்கச் சுற்றியுள்ள கடல் நீரையே பயன்படுத்துகிறது, இது மின்சார நுகர்வை பெருமளவில் குறைக்கிறது. மேலும், நிலப்பரப்பு கட்டமைப்புகளைச் சாராமல் இயங்க எலான் மாஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இதற்குத் தடையற்ற இணைய வசதி வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஏ.ஐ பயன்பாட்டால் அதிகரிக்கும் மின்சாரம் மற்றும் நீர் நுகர்வுக்கான நிலையான தீர்வாக இது கருதப்படுகிறது.