PulseNews
தொழில்நுட்பம்

-70 டிகிரி குளிர், 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பூமி: விண்வெளி அறிவியலில் திருப்பம் ஏற்படுத்திய புதிய கிரகம்

வானியலாளர்கள் பூமியை போன்றே சுற்றுப்பாதையையும், சூரியனைப் போன்றே ஒரு நட்சத்திரத்தையும் கொண்ட ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளனர். ஹெச்.டி 137010 b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், மனிதகுலத்தின் அடுத்தகட்ட விண்வெளித் தேடலில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. இது ஒரு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அல்லாமல், "பிளானட் ஹண்டர்ஸ்" என்ற குடிமக்கள் அறிவியல் திட்டத்தில் (Citizen Science Project) பணியாற்றும் சாதாரண ஆர்வலர்களால் கண்டறியப்பட்டது. 2009 முதல் 2018 வரை 'கெப்லர்' விண்வெளி தொலைநோக்கி சேகரித்த பழைய தரவுகளை ஆய்வு செய்தனர். 2017-ல் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஒளி சுமார் 10 மணிநேரம் மட்டும் மங்கியதை இவர்கள் கவனித்தனர். பொதுவாக ஒரு கிரகத்தை உறுதி செய்யப் பலமுறை ஒளி மங்குவதைக் கவனிக்க வேண்டும். ஆனால், அந்த ஒரு சிக்னலின் ஆழம் மற்றும் கால அளவை வைத்து, இது ஒரு கிரகம் தான் என்பதையும் அதன் அளவையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தக் கிரகம் நமது பூமியுடன் பல ஆச்சரியமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையை விட இது வெறும் 6% மட்டுமே பெரியது. பூமி சூரியனைச் சுற்ற 365 நாட்கள் ஆவது போல, இந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தைச் சுற்ற 355 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் தாய் நட்சத்திரம் நமது சூரியனைப் போன்றதே, ஆனால் சூரியனை விட 1,000 டிகிரி வெப்பம் குறைவானது. இருப்பினும், இக்கிரகம் சூரியனிடம் இருந்து பூமி பெறுவதில் 3-ல் ஒரு பங்கு ஆற்றலை மட்டுமே பெறுகிறது. இதனால் இதன் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 68 முதல் மைனஸ் 70 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். இது பூமியை விட செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலைக்கு நெருக்கமாக உள்ளது. இந்தக் கிரகம் ஒரு நட்சத்திரத்தின் "உயிர்வாழத் தகுதியான மண்டலத்தின்" (Habitable Zone) வெளி விளிம்பில் அமைந்துள்ளது. இந்தக் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த அடர்த்தியான வளிமண்டலம் இருந்தால், 'பசுமை இல்ல விளைவு' (Greenhouse effect) மூலம் வெப்பம் அதிகரித்து, அங்கு நீர் திரவ நிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வருங்காலத்தில் இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அல்லது மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இவை இருந்தால் அங்கு உயிர் இருப்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படும். இந்தக் கிரகம் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி நாம் அங்குச் சென்றடைய வேண்டும் என்றால் பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
-70 டிகிரி குளிர், 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பூமி: விண்வெளி அறிவியலில் திருப்பம் ஏற்படுத்திய புதிய கிரகம்
PulseNews சுருக்கம்

பூமி போன்றே ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் புதிய கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஹெச்.டி 137010 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதுடன், அங்கு மைனஸ் 70 டிகிரி குளிர் நிலவுகிறது.

விண்வெளி ஆய்வில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் இந்த கண்டுபிடிப்பு, பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, 'பிளானட் ஹண்டர்ஸ்' என்ற குடிமக்கள் அறிவியல் திட்டத்தில் பணியாற்றும் சாதாரண ஆர்வலர்களால் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology