PulseNews
தொழில்நுட்பம்

சூரியனின் பாதுகாப்புக் கவசத்தை இழந்ததா பூமி? விஞ்ஞானிகள் சொல்வது என்ன? நாசா பகிர்ந்த வியப்பூட்டும் தகவல்கள்

பூமியின் கடந்தகால பருவநிலை மாற்றங்களின் வரலாற்றில் சூரியனின் பங்கு நாம் நினைத்ததை விட மிக அதிகமாக இருந்துள்ளது என்பதை நாசாவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இளம் சூரியனின் மாற்றங்களும், அதன் விண்வெளிப் பயணமும் பூமியின் பருவநிலையை எவ்வாறு வடிவமைத்தன என்பது குறித்து அண்மையில் வெளியான இரண்டு ஆய்வுகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளன. சூரியன் தோன்றி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், நெடிய காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன், இளம் பருவத்தில் இருந்த சூரியன் இன்றைய அளவை விட மிகவும் மங்கலாகவே (குறைந்த வெப்பத்துடன்) ஒளிர்ந்தது. இருப்பினும், அந்த காலகட்டத்திலும் பூமி திரவ வடிவிலான தண்ணீரைக் கொண்டிருக்கும் அளவுக்குப் போதுமான வெப்பத்துடன் இருந்தது. அறிவியலில் நீண்டகாலமாகப் புதிராக இருக்கும் இந்த நிகழ்வு ‘மங்கலான இளம் சூரியன் புதிர்’ (Faint Young Sun Paradox) என்றழைக்கப்படுகிறது. பூமியின் தொடக்க கால வளிமண்டலத்தில் இருந்த பசுமைக்குடில் வாயுக்களே பலவீனமான சூரிய ஒளியை ஈடுசெய்து பூமியை கதகதப்பாக வைத்திருக்க உதவியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சூரியக் காற்றால் உருவாக்கப்படும் ‘ஹீலியோஸ்பியர்’ (Heliosphere) என்ற பிரம்மாண்ட காந்தக் குமிழி ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் ஒரு பாதுகாப்புக் கவசம்போல சூழ்ந்துள்ளது. பால்வெளி மண்டலத்தில் (Milky Way) பல மில்லியன் ஆண்டுகளாக இந்த பாதுகாப்புக் கவசம் எவ்வாறு நகர்ந்து சென்றது என்பதை நாசாவின் 'ஷீல்ட்' (SHIELD) மைய ஆராய்ச்சியாளர்கள் கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் விண்வெளியில் உள்ள மிகக் கடுமையான குளிரான வாயு மற்றும் தூசு மேகங்களைக் (Interstellar Clouds) கடந்து சென்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த அடர்ந்த மேகங்கள் சூரியனின் 'ஹீலியோஸ்பியர்' கவசத்தைச் சுருக்கியதால், பூமி தற்காலிகமாகச் சூரியனின் வழக்கமான பாதுகாப்புக் கவசத்தை இழந்து வெளிப்புற விண்வெளிச் சூழலுக்கு ஆளாகியிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பூமி தனது வரலாற்றில் தொடர்ச்சியான பனி யுகங்கள் (Ice Ages) உட்பட பல பெரிய பருவநிலை மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள், பூமியின் சுழற்சிப் பாதை மற்றும் பனி அடுக்குகள் ஆகியவையே இதற்குக் காரணம் என இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில், பால்வெளி மண்டலத்தில் சூரியன் மேற்கொண்ட பயணமும் பூமியின் பருவநிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நாசாவின் நிதியுதவியுடன் நடைபெற்ற 2-வது ஆய்வில், மங்கலாக இருந்த இளம் சூரியன் எவ்வாறு தொடக்கக் கால பூமியை வெப்பமாக வைத்து இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் சூரியனில் ஏற்பட்ட அதீத, சக்திவாய்ந்த செயல்பாடுகள் (Solar Activity), பூமியின் வளிமண்டலத்தில் வேதியியல் வினைகளை தூண்டி பசுமைக்குடில் வாயுக்கள் அதிகளவில் உருவாக்க உதவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வாயுக்களே அக்காலத்தில் திரவ வடிவிலான தண்ணீர் உறைந்துவிடாமல் பூமியை மிதமான வெப்பத்துடன் பராமரிக்க உதவியுள்ளன.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சூரியனின் பாதுகாப்புக் கவசத்தை இழந்ததா பூமி? விஞ்ஞானிகள் சொல்வது என்ன? நாசா பகிர்ந்த வியப்பூட்டும் தகவல்கள்
PulseNews சுருக்கம்

பூமியின் நீண்டகால பருவநிலை மாற்றங்களில் சூரியனின் தாக்கம் நாம் கருதியதை விட மிக அதிக அளவில் இருந்துள்ளது என்பதை நாசாவின் புதிய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியனின் தொடக்க கால மாற்றங்கள் மற்றும் விண்வெளிப் பயணங்கள் எவ்வாறு பூமியின் தட்பவெப்ப நிலையை தீர்மானித்தன என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரியனின் செயல்பாடுகள் அதன் நீண்ட வரலாற்றில் எப்போதும் சீராக இருந்ததில்லை என்பதை சமீபத்திய இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சூரியனின் இந்த மாறுபட்ட செயல்பாடுகள் பூமியின் சூழலை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology