நாசாவின் ரூ.250 கோடி மீட்பு முயற்சி தோல்வி? பூமியை நோக்கி வேகமாக வரும் 1,500 கிலோ விண்வெளி தொலைநோக்கி
விண்வெளியில் இருந்து பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த வெடிப்புகளை 21 ஆண்டுகளாகக் கவனித்து வந்த நாசாவின் ‘நீல் கெஹ்ரல்ஸ் ஸ்விஃப்ட்’ விண்வெளி தொலைநோக்கியின் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த 1,500 கிலோ எடையுள்ள தொலைநோக்கியை மீட்டு, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி தோல்வியடைந்ததால், அது இந்த ஆண்டின் பிற்பகுதியில் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைய உள்ளது. நாசாவும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான 'கேடலிஸ்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ்' (Katalyst Space Technologies) நிறுவனமும் ஆகஸ்ட் 19 அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டன. ஸ்விஃப்ட் தொலைநோக்கியைப் பிடித்து அதன் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்காக அனுப்பப்பட்ட ‘லிங்க்’ (Link) விண்கலம் இனி அந்த முயற்சியைத் தொடராது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், லிங்க் விண்கலத்தால் விண்வெளியில் தனது நிலையை சரியாகக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினைதான். வேகமாக பூமியை நோக்கி இறங்கும் ஸ்விஃப்ட் ஸ்விஃப்ட் தொலைநோக்கியின் சுற்றுப்பாதை ஏற்கெனவே படிப்படியாகக் குறைந்து வந்தது. சமீபத்தில் சூரியனில் ஏற்பட்ட அதிகப்படியான செயல்பாடுகளால் பூமியின் மேல் வளிமண்டலம் வெப்பமடைந்து விரிவடைந்தது. இதனால் வளிமண்டலத்தின் உராய்வு அதிகரித்து, ஸ்விஃப்ட் இன்னும் வேகமாக உயரத்தை இழக்கத் தொடங்கியது. இந்த பிரச்சினையை சமாளிக்க, பிப்ரவரி 2026-ல் ஸ்விஃப்ட்டின் அறிவியல் பணிகள் பெருமளவில் நிறுத்தப்பட்டன. அதன் மூலம் தொலைநோக்கியின் சுற்றுப்பாதை மேலும் வேகமாகக் குறைவதைத் தடுக்கவும், அதை மீட்கத் தயாராகவும் நாசா முயன்றது. Once its robotic arms are attached to Swift, LINK can begin to slowly push Swift upward. Over the course of a few months, LINK will attempt to return Swift close to its original launch altitude. Then, LINK will detach, leaving Swift in its new orbit. pic.twitter.com/rs9ES8W3uQ — NASA Universe (@NASAUniverse) July 6, 2026 30 மில்லியன் டாலர் மீட்பு முயற்சி ஸ்விஃப்ட்டை மீட்பதற்காக 'கேடலிஸ்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ்' நிறுவனத்துக்கு நாசா 2025 செப்டம்பரில் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியது. அந்த நிறுவனத்தின் ‘லிங்க்’ விண்கலம் 2026 ஜூலை 3 அன்று விண்வெளிக்குச் சென்றது. அதன் முக்கிய பணி, ஸ்விஃப்ட் தொலைநோக்கியைச் சென்றடைந்து, அதை பிடித்து உயரமான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். ஆரம்பத்தில் எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. லிங்க் விண்கலம் ஏவப்பட்ட பிறகு ஸ்விஃப்ட்டுடன் தொடர்பை ஏற்படுத்தியது. தொடக்க சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன. ஆனால் ஜூலை இறுதியில் பிரச்சினைகள் தொடங்கின. அடுத்தடுத்து ஏற்பட்ட கோளாறுகள் லிங்க் விண்கலத்தில் இருந்த மூன்று ரியாக்ஷன் வீல்களில் இரண்டு செயலிழந்தன. மேலும், விண்கலத்தின் குளிர் வாயு உந்துவிசை அமைப்பிலும் சில செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் லிங்க் விண்கலம் கட்டுப்பாடில்லாமல் சுழலத் தொடங்கியது. அதன் காரணமாக ஸ்விஃப்ட்டுடன் தகவல் தொடர்பும் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. பொறியாளர்கள் கடுமையாக முயன்று, விண்கலத்தின் சுழற்சி வேகத்தை வினாடிக்கு சுமார் 9 டிகிரியில் இருந்து ஆகஸ்ட் தொடக்கத்தில் 1.47 டிகிரியாகக் குறைத்தனர். பின்னர் மென்பொருள் புதுப்பிப்பு மூலம் லிங்கின் மீதமிருந்த அமைப்புகளைப் பயன்படுத்தி அதன் நிலைக் கட்டுப்பாட்டுத் திறனையும் மீட்டனர். இதனால் ஸ்விஃப்ட்டை நெருங்குவதற்கான முயற்சி தொடர்ந்தது. ஆனால் அந்தத் தொழில்நுட்பத் தீர்வுகள் ஸ்விஃப்ட்டை மீட்க போதுமானதாக இல்லை. இனி என்ன நடக்கும்? ஸ்விஃப்ட்டை மீட்டு அதன் சுற்றுப்பாதையை உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டாலும், லிங்க் விண்கலம் முழுமையாகப் பணியை நிறுத்தவில்லை. இனி ஸ்விஃப்ட்டைச் சுற்றி நெருங்கிய தொலைவில் செயல்பாடுகளை மேற்கொண்டு, விண்வெளியில் இயங்கும் செயற்கைக்கோள்களை எதிர்காலத்தில் ரோபோட்டிக் முறையில் பழுதுபார்ப்பது அல்லது மீட்பது போன்ற பணிகளுக்கு உதவும் தகவல்களைச் சேகரிக்க லிங்க் முயற்சிக்கும். இதற்கிடையில், ஸ்விஃப்ட் தொடர்ந்து உயரத்தை இழக்கும். 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் அது பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையும் என்று நாசா எதிர்பார்க்கிறது. ஆனால் அது எந்தத் தேதியில் வளிமண்டலத்துக்குள் நுழையும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஸ்விஃப்ட் ஏன் இவ்வளவு முக்கியம்? ஸ்விஃப்ட் தொலைநோக்கி 2004 நவம்பர் 20 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கியப் பணி, பிரபஞ்சத்தில் ஏற்படும் ‘காமா கதிர் வெடிப்புகளை’ (Gamma-ray bursts) ஆய்வு செய்வதாகும். இவை பிரபஞ்சத்தில் நிகழும் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புகளில் சில. காமா கதிர் வெடிப்பு ஏற்பட்டவுடன் அதை விரைவாக அடையாளம் கண்டு, அந்தப் பகுதியை நோக்கி தனது கருவிகளைத் திருப்பி ஆய்வு செய்வதே ஸ்விஃப்ட்டின் மிகப்பெரிய சிறப்பாக இருந்தது. காமா கதிர்கள் மட்டுமின்றி, எக்ஸ்-கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியும் ஒளி ஆகியவற்றையும் அதன் மூன்று கருவிகள் மூலம் ஆய்வு செய்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பிரபஞ்சத்தின் மிகப் பயங்கரமான நிகழ்வுகளைப் பதிவு செய்த இந்த விண்வெளி தொலைநோக்கி, மனிதர்களுக்கு விண்வெளியைப் புரிந்துகொள்ள முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளது.

கடந்த 21 ஆண்டுகளாக விண்வெளியில் நிகழும் சக்திவாய்ந்த வெடிப்புகளை கண்காணித்து வந்த நாசாவின் 'நீல் கெஹ்ரல்ஸ் ஸ்விஃப்ட்' விண்வெளி தொலைநோக்கியின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துள்ளது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த தொலைநோக்கியின் சுற்றுப்பாதையை உயர்த்தி, அதனை மீட்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இந்தத் தோல்வியால், குறித்த தொலைநோக்கி இந்த ஆண்டின் பிற்பகுதியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைய உள்ளது. நாசா மற்றும் கேடலிஸ்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து மேற்கொண்ட இந்த மீட்பு முயற்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.