PulseNews
தொழில்நுட்பம்

தெரியாம கூட வாங்கிடாதீங்க: ஆன்லைனில் ஊமத்தை விற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் சிக்கியது எப்படி?

இ-காமர்ஸ் தளங்களில் நச்சுத்தன்மை கொண்ட தாவரமான 'ஊமத்தை' (Datura) விற்பனைக்குக் வைக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி ஆன்லைனில் ஊமத்தை காய்களும் விதைகளும் விற்பனை செய்யப்பட்டதால், முன்னணி வணிக நிறுவனங்கள் மீது மாநில உணவு பாதுகாப்புத்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கர்நாடகாவில் நடந்தது என்ன? அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற பிரபல மின்னணு வர்த்தக (e-commerce) தளங்களில் 'ஊமத்தை' (Datura) தாவரத்தின் காய்கள் மற்றும் விதைகள் உணவுப் பொருட்களாகவோ அல்லது மனித நுகர்வுக்காகவோ பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் 2006-ன் கீழ் கடுமையான விதிமீறலாகும். விஷத்தன்மை வாய்ந்த ஒரு தாவரத்தை உணவுப் பொருளாக விற்றதை அடுத்து, கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உணவு உரிமங்களை (Food Licences) தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இவற்றை விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களையும் ரத்து செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஊமத்தை (Datura) என்றால் என்ன? தமிழில் 'ஊமத்தை' என்றும், ஆங்கிலத்தில் தோர்ன் ஆப்பிள் (Thorn Apple) அல்லது ஜிம்ஸன் வீட் (Jimson Weed) என்றும் அழைக்கப்படும் இந்தத் தாவரம் சோலன்சியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நச்சுத் தாவரமாகும். அகலமான இலைகள், பெரிய புனல் (Trumpet) வடிவ வெள்ளையான அல்லது ஊதா நிறப் பூக்கள் மற்றும் வெளிப்புறத்தில் கூர்மையான முட்கள் நிறைந்த உருண்டை வடிவக் காய்களைக் கொண்டிருக்கும். இதில் அட்ரோபின் (Atropine), ஸ்கோபோலமைன் (Scopolamine) மற்றும் ஹைோஸமைன் (Hyoscyamine) போன்ற சக்திவாய்ந்த ஆல்கலாய்டுகள் (Tropane Alkaloids) நிறைந்துள்ளன. ஏன் இது ஆபத்தானது? ஊமத்தையின் அனைத்துப் பகுதிகளும்—குறிப்பாக அதன் விதைகளும் காய்களும்—மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதைத் தவறுதலாகவோ அல்லது நேரடியாகவோ உட்கொள்ளும் போது உடலின் நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும். தீவிர பார்வைக் கோளாறு, வாய் வறட்சி, இதயத் துடிப்பு அதிகரித்தல், மயக்கம், மாயத்தோற்றம் (Hallucinations) மற்றும் மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அதிகளவில் உட்கொண்டால் நரம்பு மண்டலம் முடங்கி, கோமா நிலைக்கோ அல்லது உயிரிழப்பிற்கோ வழிவகுக்கும். பாரம்பரியப் பயன்பாடும் எச்சரிக்கையும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையில் ஊமத்தை சில குறிப்பிட்ட நோய்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட முறையில் சிறிய அளவில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது தகுந்த மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும். எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி திறந்த சந்தையிலோ அல்லது ஆன்லைனிலோ உணவாகவோ அல்லது மூலிகையாகவோ இதை நேரடியாக விற்பனை செய்வது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தானது என்பதால் தான் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தெரியாம கூட வாங்கிடாதீங்க: ஆன்லைனில் ஊமத்தை விற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் சிக்கியது எப்படி?
PulseNews சுருக்கம்

கர்நாடகாவில் அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தை தாவரத்தின் விதைகள் மற்றும் காய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அந்த நிறுவனங்கள் மீது மாநில உணவு பாதுகாப்புத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology