பவளப் பாறைகள் அழியும் அபாயம்? கடலில் நிகழும் பேரழிவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
புவி வெப்பமடைதல் மற்றும் முன்னெப்போதும் இல்லாத கடல் வெப்பம் காரணமாக, உலகின் வெப்பமண்டல பவளப்பாறைகள் 2026-க்குள் மீளமுடியாத அழிவைச் சந்திக்கக்கூடும் என்று 'தி கான்வர்சேஷன்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வு எச்சரிக்கிறது. கடல் தளத்தில் வெறும் 1 % குறைவான இடத்தையே பவளப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், சுமார் 25% கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு இவைதான் ஆதாரமாக உள்ளன. 2023-24ஆம் ஆண்டுகளில் நிலவிய அதீத கடல் வெப்பம், சுமார் 83 நாடுகளில் பவளப்பாறைகள் வெளுத்துப் போவதற்கு காரணமாக அமைந்தது. வழக்கமாக ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து மீள பவளப்பாறைகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனா, அடுத்தடுத்துவரும் 'எல் நினோ' நிகழ்வுகள் அத்தகைய கால அவகாசத்தைக் கொடுக்காததே தற்போதைய அச்சத்திற்கு காரணமாகும். கடல் நீர் வெப்பமடையும்போது, பவளப்பாறைகள் அவற்றிற்கு நிறத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்கும் 'மின்னணுப் பாசிகளை' (Zooxanthellae) வெளியேற்றுகின்றன. இதனால் பவளப்பாறைகள் வெள்ளை நிறமாக மாறுகின்றன. இந்நிலை நீண்ட காலம் தொடர்ந்தால், பவளப்பாறைகள் உயிரிழக்கின்றன. அவை இறந்த பிறகு, அந்த இடத்தை சாதாரண பாசிகள் ஆக்கிரமிக்கின்றன. இதனால் அந்தப் பகுதியை நம்பி வாழும் மீன் இனங்கள் அழிகின்றன. இறுதியில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த கடல் பகுதி ஒரு 'நீருக்கடியிலான பாலைவனமாக' மாறுகிறது. இந்த இருண்ட சூழலிலும் சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படுகின்றன. அகாபா வளைகுடா (Gulf of Aqaba) மற்றும் மடகாஸ்கர் போன்ற பகுதிகளில் உள்ள சில பவளப்பாறைகள் கடும் வெப்பத்தையும் தாங்கி உயிர் பிழைத்துள்ளன. அதேபோல், கடல் மட்டத்திலிருந்து 30 முதல் 50 மீட்டர் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகள், ஆழ்கடல் குளிர்ச்சியால் ஓரளவுக்குப் பாதுகாப்பாக உள்ளன. இவை எதிர்காலப் பவளப்பாறை மறுசீரமைப்பிற்கு 'விதை வங்கிகளாக' (Seed banks) செயல்படக்கூடும். உலகளாவிய வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், உள்ளூர் அளவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நல்ல பலனை தருவதாக இந்த ஆய்வு கூறுகிறது. உதாரணமாக, மெக்ஸிகோ முதல் மத்திய அமெரிக்கா வரை பரவியுள்ள 'மெசோஅமெரிக்கன் ரீஃப்', சிறந்த மீன்பிடி மேலாண்மை காரணமாக ஓரளவுக்கு மீண்டுவந்தது. விஞ்ஞானிகள் 3 முக்கிய உத்திகளை முன்வைக்கின்றனர். கார்பன் வெளியேற்றத்தை குறைத்து கடலைக் குளிர்வித்தல், கடல் மாசுபாடு மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்துதல், வெப்பத்தை தாங்கி வளரும் பவளப்பாறை இனங்களை செயற்கையாக வளர்த்தல். 2026-ம் ஆண்டு என்பது ஒவ்வொரு பவளப்பாறையின் முடிவாக இருக்காது. ஆனால், பவளப்பாறை சூழல் அமைப்பின் நிலைத்தன்மையை இழக்கும் ஒரு அபாயகரமான ஆண்டாக இது அமையக்கூடும். நாம் இன்று எடுக்கும் நடவடிக்கைகளே நாளைய கடல் உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

புவி வெப்பமடைதல் மற்றும் கடலின் அதீத வெப்பநிலை காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்குள் உலகின் வெப்பமண்டல பவளப்பாறைகள் மீள முடியாத அழிவைச் சந்திக்கக்கூடும் என 'தி கான்வர்சேஷன்' ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடல் வெப்பம், உலகம் முழுவதும் 83 நாடுகளில் பவளப்பாறைகள் வெளுத்துப் போகும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடல் பரப்பில் வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான இடத்தையே ஆக்கிரமித்துள்ள போதிலும், கடல்வாழ் உயிரினங்களில் 25 சதவீதத்திற்கு பவளப்பாறைகளே வாழ்வாதாரமாக விளங்குகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பவளப்பாறைகள் தற்போது பெரும் பேரழிவின் விளிம்பில் இருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.