டிரைவர் தூங்குனா தட்டி எழுப்பும் ஸ்மார்ட் சீட்: சென்னை ஐ.ஐ.டி. உருவாக்கிய அசத்தல் ‘ஸ்மார்ட் சீட்’
நள்ளிரவு நேரம். சாலையில் வாகனங்கள் குறைந்துவிட்டிருக்கும். பல மணி நேரமாக வாகனம் ஓட்டிய டிரைவரின் கண்கள் மெதுவாக மூடத் தொடங்கும். தூக்கம் வருவதை அவர் உணர்வதற்குள், கவனம் சிதறி சிறிய தவறுகள் நடக்கத் தொடங்கிவிடும். இதுபோன்ற நேரத்தில் ஒரு சில விநாடிகளின் கவனக்குறைவு கூட மிகப்பெரிய விபத்துக்கு காரணமாகிவிடலாம். இந்த ஆபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து டிரைவரை எச்சரிக்கும் வகையில், ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் ஒரு ‘ஸ்மார்ட்’ கார் சீட்டை உருவாக்கியுள்ளனர். இதற்கு IntelliSeat என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு (Rehabilitation Bioengineering Group), வாகன இருக்கை தயாரிப்பு நிறுவனமான ஹரிடா (Harita) உடன் இணைந்து இதை உருவாக்கியுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது இன்டெலிசீட் (IntelliSeat) ஒரு சாதாரண டிரைவர் சீட் போலத்தான் இருக்கும். ஆனால் அதன் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள்தான் இதன் சிறப்பு. டிரைவருக்கு தூக்கம் வருவதை சீட் எப்படி கண்டுபிடிக்கும்? பொதுவாக டிரைவருக்கு தூக்கம் வருகிறதா என்பதை கண்டுபிடிக்க முகத்தை கேமராவில் கண்காணிப்பது, தலையில் கருவி பொருத்துவது அல்லது உடலில் மின்முனைகள் பொருத்துவது போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்டெலிசீட்-க்கு அப்படிப்பட்ட எதுவும் தேவையில்லை. டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்கும் விதத்தையே இது கவனிக்கும். சீட்டின் பின்புறம் மற்றும் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் டிரைவரின் உடல் இருப்பு, உட்காரும் நிலை, உடல் அசைவுகள் மற்றும் சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. அதாவது, டிரைவர் தனியாக எந்த கருவியையும் அணிய வேண்டியதில்லை. சீட்டில் உட்கார்ந்தாலே போதும். “சென்சார், செயலாக்கம், எச்சரிக்கை” என்ற மூன்று கட்டங்களில் இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது. சென்சார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அந்த தகவல்கள் ஒரு செயலாக்க அமைப்புக்கு அனுப்பப்படுகின்றன. அதன் பிறகு டிரைவருக்கு தேவையான எச்சரிக்கை வழங்கப்படுகிறது. தசைகள் சோர்வடைவதை வைத்து தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் இன்னும் சுவாரஸ்யமானது. நாம் ஒரு வேலையை தொடர்ந்து செய்யும்போது தசைகள் சோர்வடைவது போலவே, நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போதும் முதுகு மற்றும் தோள்பட்டை தசைகளில் சோர்வு அதிகரிக்கிறது. பேராசிரியர் வெங்கடேஷ் தி இண்டியா டூடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதுபோல், ஒரு உலோகக் கம்பியை தொடர்ந்து பயன்படுத்தினாலும் அது சோர்வடையும்; ஒரு தசையையும் தொடர்ந்து பயன்படுத்தினால் அது சோர்வடையும். தசைகள் சோர்வடைவதற்கு லாக்டிக் அமிலம்தான் காரணம் என்ற பொதுவான கருத்தும் முழுமையாக சரியல்ல. லாக்டிக் அமிலம் சோர்வுடன் தொடர்புடைய ஒரு அறிகுறி மட்டுமே. தசைகள் வேலை செய்யும்போது உருவாகும் மிகச்சிறிய மின்சாரச் சமிக்ஞைகளை Surface Electromyography (sEMG) என்ற தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்ய முடியும். தசைகளின் செயல்பாட்டில் ஏற்படும் இந்த மாற்றங்களை ஆராய்ந்தால், தசைகள் எப்போது சோர்வடையத் தொடங்குகின்றன என்பதை கண்டறிய முடியும். சென்னை ஐ.ஐ.டி. குழுவின் ஆய்வுகளிலும், நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போது முதுகு மற்றும் தோள்பட்டை பகுதியில் சோர்வு அதிகரிப்பதுடன், டிரைவரின் உடல் எடை சீட்டில் அமரும் விதத்திலும் மாற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாற்றங்களைத்தான் இன்டெலிசீட் பயன்படுத்துகிறது. சோர்வு அதிகரித்தால் என்ன நடக்கும்? டிரைவர் கொஞ்சம் சோர்வாக இருப்பதற்கே உடனடியாக பெரிய எச்சரிக்கை கொடுக்கப்படாது. சோர்வு அதிகரிக்கும் அளவுக்கு ஏற்ப எச்சரிக்கையும் படிப்படியாக அதிகரிக்கும். முதலில் டாஷ்போர்டில் ஒரு சிறிய விளக்கு எரியும். இது டிரைவருக்கு சோர்வு தொடங்கிவிட்டதை நினைவூட்டும். சோர்வு மேலும் அதிகரித்தால், விளக்குடன் சேர்த்து ஒலி எச்சரிக்கையும் வழங்கப்படும். நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறினால், சீட்டே அதிரத் தொடங்கும். இந்த அதிர்வு டிரைவரின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும். அதுமட்டுமல்லாமல், கடுமையான சோர்வு கண்டறியப்பட்டால் வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஃபிளீட் மேனேஜர்-க்கும் (Fleet Manager) தகவல் செல்லும். இதன் மூலம் டிரைவரை வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஓய்வு எடுக்கச் சொல்ல முடியும். பழைய லாரி, பஸ்களிலும் பொருத்த முடியுமா? இந்த தொழில்நுட்பத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு, இதை பயன்படுத்த புதிய வாகனம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான். இன்டெலிசீட் வாகனத்தின் சொந்த கணினி அமைப்பை சார்ந்திருக்காமல் தனியாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே சாலைகளில் இயங்கி வரும் லாரிகள், பேருந்துகள் போன்ற வாகனங்களிலும் இதை பொருத்த முடியும். இக்னிஷன் இயக்கப்பட்டதும் சீட் டிரைவரை கண்காணிக்கத் தொடங்கும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் செயலி மூலம் Fleet Manager, பல டிரைவர்களின் நிலையை கண்காணிக்க முடியும். மேலும், சேகரிக்கப்படும் தகவல்கள் பின்னர் ஆய்வு செய்யவும் பயன்படும். எந்த வழித்தடங்களில் டிரைவர்கள் அதிகமாக சோர்வடைகிறார்கள், எப்போது ஓய்வு கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை Fleet நிறுவனங்கள் இதன் மூலம் கண்டறிய முடியும். இந்திய சாலைகளுக்கு இது ஏன் முக்கியம்? இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகள் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளன. குறிப்பாக நீண்ட நேரம் தொடர்ந்து வாகனம் ஓட்டும் லாரி மற்றும் பேருந்து டிரைவர்களுக்கு சோர்வு மிகப்பெரிய ஆபத்தாக மாறுகிறது. ஒரு நாளில் 10 மணி நேரத்துக்கும் மேலாக வாகனம் ஓட்ட வேண்டிய சூழல் பல தொழில்முறை டிரைவர்களுக்கு இருக்கிறது. உடல் சோர்வடைவது மட்டுமின்றி, மூளையின் கவனமும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படலாம். சோர்வான நிலையில் டிரைவர் சிறிய தவறுகளைச் செய்யத் தொடங்கலாம். அந்த சிறிய தவறுகளே சில நேரங்களில் பெரிய விபத்துகளாக மாறுகின்றன. அதனால்தான் டிரைவர் தூங்கிவிட்ட பிறகு எச்சரிப்பதைவிட, அவர் தூங்கத் தொடங்குவதற்கு முன்பே சோர்வை கண்டுபிடிப்பது முக்கியம். அந்த இடத்தில்தான் இன்டெலிசீட்-ன் முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு சாதாரண சீட் போலத் தெரிந்தாலும், அதன் உள்ளே இருக்கும் சென்சார்கள் டிரைவரின் உடல் மொழியை தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கின்றன. சோர்வு ஆபத்தான நிலையை எட்டுவதற்கு முன்பே அது டிரைவரை எச்சரிக்கிறது. இறுதியில், இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம் வெறும் ஒரு புதிய ஸ்மார்ட் சீட்டை உருவாக்குவது அல்ல. நீண்ட தூரம் பயணம் செய்யும் டிரைவர் பாதுகாப்பாக தனது இலக்கை அடைந்து, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதை உறுதி செய்வதுதான்.

நீண்ட நேரம் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தூக்கத்தினால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துகளைச் சந்திப்பதைத் தவிர்க்க, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். 'IntelliSeat' எனப் பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் கார் சீட், டிரைவரின் தூக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு நேரங்களில் நீண்ட தூரம் பயணிக்கும்போது ஏற்படும் சோர்வினால் டிரைவர்களுக்கு ஏற்படும் கவனச்சிதறல்களை இது தடுக்கிறது. விபத்துகளைத் தவிர்க்க உதவும் இந்த நவீன இருக்கை தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.