மண்ணச்சநல்லூர் அருகே குரங்குகள் அட்டகாசம்: ஊரை விட்டே வெளியேற கிராம மக்கள் முடிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள 94 கரியமாணிக்கம் கிராமத்தில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொல்லை

94 கரியமாணிக்கம் கிராமத்தை ஒட்டி சிறுகனூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் குரங்குகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உணவு மற்றும் நீரைத் தேடி அருகில் உள்ள சணமங்கலம், பெரகம்பி, சமயபுரம், எதுமலை மற்றும் 94 கரியமாணிக்கம் ஆகிய கிராமங்களுக்குள் படை எடுக்கின்றன.

இதில் குறிப்பாக, 94 கரியமாணிக்கம் கிராமத்திற்குள் தினமும் 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களைத் தின்று நாசம் செய்வதும், கதவு, ஜன்னல் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், வேறு வழியின்றி கிராமத்தை விட்டே வெளியேறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்

குரங்குகளின் தொல்லையால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி, விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமத்தைச் சுற்றிலும் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடிகள், பூக்கள் மற்றும் காய்களைக் கடித்துக் குதறி குரங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவ - மாணவிகள் கைகளில் எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களைப் பிடுங்குவதுடன், அவர்களைக் கடிக்க விரட்டுவதாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். துணிகளைக் காயப்போடக்கூட முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், "நாங்கள் ஏற்கனவே குரங்குகளைப் பிடித்துவிட்டோம். இனிமேல் பிடிக்க வேண்டும் என்றால் ஒரு குரங்குக்கு ரூ. 100 தர வேண்டும்" எனக் கூறி பேரம் பேசுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, வனத்துறையும் திருச்சி மாவட்ட நிர்வாகமும், தமிழக முதலமைச்சரும் உடனடியாகத் தலையிட்டு, 94 கரியமாணிக்கம் கிராம மக்களை அச்சுறுத்தும் குரங்குகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் அப்புறப்படுத்தத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், ஒன்று இரண்டு வந்தாலே சமாளிக்க முடியாது. போருக்கு செல்லும் வீரர்கள் போல் கூட்டம், கூட்டமாக வருகிறது. முக்கியமாக சமையல் அறை ஜன்னல்களை ஆட்டி, ஆட்டி உடைத்தே விடுகின்றன. பருப்பு, சர்க்கரை, காய்கறிகள் என்று எது கிடைக்கிறதோ அதை அள்ளிக் கொண்டும், மற்றவற்றை தள்ளி உடைத்து விட்டு செல்கின்றன. விரட்டினால் ஆக்ரோஷமாக தாக்க வருகின்றன. அதுவும் கூட்டமாக வருவதால் சமாளிக்க முடிவதில்லை. முக்கியமான பெண்கள் இதனால் அச்சமடைந்துள்ளனர். சமையல் செய்யும் போது வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. காலை நேரத்திலேயே வீட்டின் கதவுகளை அடைத்து கொண்டு இருட்டில் இருக்கும் நிலை உள்ளது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள 94 கரியமாணிக்கம் கிராமத்தில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குரங்குகளின் இந்தத் தொடர் தொல்லை காரணமாக, கிராமத்தை விட்டே வெளியேற மக்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.