அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை!
சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் பொது மக்கள் வலியுறுத்தினார்கள். மருத்துவமனைக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மருத்துவமனை சாலையை அகலப்படுத்துவது, நோயாளிகளின் உதவியாளர்கள் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அறை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு பகுதியில் நோயாளிகளுடன் தங்கியிருந்த உதவியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மருத்துவமனையில் கழிப்பிட வசதி மிகவும் மோசமாக உள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர். மேலும், குடிநீர் வசதி இல்லை வெளியில் காசுக்கு வாங்கி குடிக்கிறோம், வார்டுகளில் சரியான மின்விசிறி வசதி இல்லாததால் பலர் வீடுகளில் இருந்து மின்விசிறிகளை கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம் என்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர், மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையிலேயே தற்போது நேரில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளதாகவும், குறைகளை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, அடிப்படை வசதிகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன், நிலைய மருத்துவ அலுவலர் அசோக் பாஸ்கர், துணை முதல்வர் பாலாஜி, மருத்துவர் பாரி, குழந்தைகள் நல மருத்துவர் ராமநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மருத்துவமனை சாலையை அகலப்படுத்துதல், உதவியாளர்களுக்குப் பாதுகாப்பு அறை அமைத்தல் மற்றும் கழிப்பறை, குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளைச் சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த ஆட்சியர், நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அவர், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இக்கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.