PulseNews
தமிழகம்

நீட் வினாத் தாள் கசிவு வழக்கு: பொய் கண்டறியும் சோதனைகள் குறித்து நீதிமன்றங்கள் சொல்வது என்ன?

எழுதியவர்: அமால் ஷேக் நீட் யுஜி 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர், தங்களது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய சிபிஐக்கு உதவவும் பாலிகிராஃப் (Lie Detector) மற்றும் மூளை வரைபட சோதனைகளை (Brain Mapping) மேற்கொள்ளத் தயார் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா, அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கில் சிபிஐ ஏற்கனவே விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டதால், இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த மனு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. ஆங்கிலத்தில் வாசிக்க அப்படியானால், ஒருவர் தானாக முன்வந்து பொய் கண்டறியும் சோதனைக்கு உட்பட விரும்பினாலும், நீதிமன்றம் அதை அனுமதிக்க வேண்டுமா? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. பொய் கண்டறியும் சோதனை குறித்து சட்டம் என்ன சொல்கிறது? 2010-ம் ஆண்டு ‘செல்வி எதிர் கர்நாடக அரசு’ வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், ஒருவரின் சம்மதம் இல்லாமல் நார்கோ அனாலிசிஸ், பாலிகிராஃப் மற்றும் மூளை மின் செயல்பாட்டு சோதனை (BEAP) போன்றவற்றை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அவ்வாறு கட்டாயப்படுத்தி சோதனை நடத்துவது, அரசியலமைப்புச் சட்டத்தின் 20(3)-வது பிரிவில் உள்ள சுய குற்றச்சாட்டுக்கு எதிரான உரிமையையும், 21-வது பிரிவில் உள்ள தனிநபர் சுதந்திரத்தையும் மீறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. சாதாரண விசாரணையில் ஒருவர் தனது பதில்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால், இந்த சோதனைகளில் ஒருவரின் உடல் அல்லது மூளையின் செயல்பாடுகளில் இருந்து பதில்களைப் பெற முயற்சிக்கப்படுகிறது. இதனால், இது ஒருவரின் “மனதின் தனியுரிமையில் தலையிடும் செயல்” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அப்படியானால் இந்த சோதனைகளுக்கு முழுமையான தடை உள்ளதா? இல்லை. ஒருவர் தனது விருப்பத்துடன் இத்தகைய சோதனைகளுக்கு உட்படலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், அதற்கும் சில பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. முக்கியமாக: *சோதனைக்கு சம்மதம் தெரிவிப்பது நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட வேண்டும். *சோதனையின் மருத்துவ, உணர்வுபூர்வ மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து அந்த நபருக்கு சட்ட ஆலோசனை பெறும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். *சோதனை முடிவுகளை மட்டும் வைத்து ஒருவரை குற்றவாளி என்று முடிவு செய்ய முடியாது. இதுதான் மிகவும் முக்கியமான வேறுபாடு. சோதனைக்கு சம்மதித்தாலும், அதன் முடிவுகள் ஆதாரமாகுமா? அவசியமில்லை. ஒருவர் சோதனைக்கு விருப்பத்துடன் சம்மதித்திருந்தாலும், அந்த சோதனையில் கிடைக்கும் முடிவுகளை மட்டும் வைத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்குக் காரணம், சோதனை நடைபெறும் போது வெளிப்படும் உடல் அல்லது மூளை சார்ந்த பதில்களை அந்த நபர் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்பதுதான். எனவே, சோதனையை நடத்த அனுமதிப்பது வேறு; அதன் முடிவை குற்றத்திற்கான நேரடி ஆதாரமாக ஏற்றுக்கொள்வது வேறு. சோதனையில் கிடைக்கும் தகவலால் குற்றம் தொடர்பான பொருள் கிடைத்தால்? பாரதிய சாட்சியச் சட்டத்தின் 23-வது பிரிவு, காவல்துறை அதிகாரியிடம் காவலில் இருக்கும் ஒருவர் அளிக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பொதுவாக குற்றச்சாட்டுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ஆனால், அந்த தகவலின் அடிப்படையில் ஒரு பொருள், இடம் அல்லது ஆவணம் போன்ற குறிப்பிட்ட உண்மை கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கண்டுபிடிப்பு சில சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம். எனினும், அத்தகைய கண்டுபிடிப்பு தனியாக குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரமாக இல்லாமல், வழக்கில் உள்ள பிற ஆதாரங்களுக்கு துணை ஆதாரமாகவே செயல்படும். குற்றம்சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து சோதனை கேட்க முடியுமா? இதற்கும் உச்ச நீதிமன்றம் முழுமையான உரிமை வழங்கவில்லை. 2025-ம் ஆண்டு அம்லேஷ் குமார் எதிர் பீகார் அரசு வழக்கில், வரதட்சணைத் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்த அனுமதித்த பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமீன் வழங்குவது தொடர்பான நிலையில், வழக்கின் தன்மை, குற்றச்சாட்டுகள், குற்றம்சாட்டப்பட்டவர் காவலில் இருந்த காலம், சாட்சிகளை அவர் பாதிக்க வாய்ப்புள்ளதா உள்ளிட்ட அம்சங்களைத்தான் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அந்த நிலையில், இதுபோன்ற விரிவான விசாரணையை மேற்கொள்வதும் அல்லது கட்டாயமான விசாரணை முறைகளை அனுமதிப்பதும் தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. விருப்பத்துடன் சோதனை கேட்பது மட்டும் போதாது ஒருவர் “நான் தானாக முன்வந்து சோதனைக்கு உட்படுகிறேன்” என்று கூறினாலும், நீதிமன்றம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அம்லேஷ் குமார் வழக்கில், ஒருவர் விருப்பத்துடன் நார்கோ சோதனை கேட்பது மட்டும் போதுமான காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. வழக்கின் சரியான கட்டத்தில், குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர் தனது தரப்பு ஆதாரங்களை முன்வைக்கும் நிலையில், இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படலாம். அப்போதும் அனுமதி தானாக கிடைக்காது. நீதிமன்றம் சம்மதம் உண்மையில் சுதந்திரமாக வழங்கப்பட்டதா, தேவையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, அந்த வழக்கின் உண்மைகளைப் பொறுத்தவரை சோதனை உண்மையில் தேவையா என்பதையெல்லாம் பரிசீலிக்க வேண்டும். நீட் வழக்கில் இதன் முக்கியத்துவம் என்ன? நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் தாங்களாக முன்வந்து பாலிகிராஃப் மற்றும் மூளை வரைபட சோதனைகளை கேட்டு இருந்தாலும், அந்த விருப்பம் மட்டும் நீதிமன்ற அனுமதியைப் பெற போதுமானதாக இல்லை என்பதையே தற்போதைய நீதிமன்ற உத்தரவு காட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் கூறுவது தெளிவானது: மனிதனின் மனதிற்குள் நுழையும் வகையிலான சோதனைகளில் தனிநபரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சோதனைக்கு சம்மதம் இருந்தாலும், அதன் முடிவுகளை நேரடியாக குற்றத்திற்கான ஆதாரமாக பயன்படுத்த முடியாது. அதனால், ஒவ்வொரு வழக்கிலும் சோதனை நடத்துவதன் அவசியம், சம்மதத்தின் தன்மை, சட்டப் பாதுகாப்புகள் மற்றும் வழக்கின் நிலை ஆகியவற்றை நீதிமன்றமே தனித்தனியாக மதிப்பிட்டு முடிவு செய்யும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நீட் வினாத் தாள் கசிவு வழக்கு: பொய் கண்டறியும் சோதனைகள் குறித்து நீதிமன்றங்கள் சொல்வது என்ன?
PulseNews சுருக்கம்

நீட் யுஜி வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர், தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் பாலிகிராஃப் மற்றும் மூளை வரைபட சோதனைகளை மேற்கொள்ளத் தயார் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே விசாரணையை நிறைவு செய்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதால், இந்த கோரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா ஆகஸ்ட் 10-ம் தேதியன்று நிராகரித்தார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu