PulseNews
தமிழகம்

கோவையில் ரயில் மோதி தூய்மை பணியாளர்கள் இருவர் மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் அருகே ரயில்வே தண்டாவளத்தை கடந்த இரு பெண்கள் ரயில் மோதி பலியான சம்பவம் குறித்து இரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், நேற்று மாலை ரயில்வே தண்டவாளத்தில், கிடந்த குப்பைகளை தனியார் நிறுவனத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களான இருவர் தண்டவாளத்தில் போடபடும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களான கவிதா, யசோதா ஆகிய இருவர் பணியை முடித்து விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். மேலும் அந்த பகுதி சற்று வளைவான பகுதி என்பதால் அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இருவரும், உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த இரயில்வே காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் முன்பு இரயில்வே கேட் இருந்தது. இதனால் இந்த கேட் மூட ரயில் வரும் பொழுது, ரயில்வே நிர்வாகம் ஒலி எழுப்புவார்கள், மேலும் இந்த வளைவு பகுதியில் வரும் ரயிலும் ஒலி எழுப்பியவாறு இந்த பகுதியை கடந்து செல்லும், ஆனால் ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டிய பின்னர் இத்தகைய ஒலி எழுப்பும் கருவிகளை இரயில்வே நிர்வாகம் நீக்கி விட்டது. இதனால் பணியாளர்கள் பணியை முடித்து விட்டு, திரும்பும் பொழுது ரயிலும் அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தனர். நேற்று அதிகாலை தமிழக கேரள எல்லையில் இரு யானைகள் ரயில் மோதி உயிரிழந்த நிலையில் மாலையில் இரு பெண்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் கோவையில் மீண்டும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இப் பெண்களின் உயிரிழப்புக்கு ரயில்வே நிர்வாகமும், இவர்களைப் பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரரும் தான் முழுக்க முழுக்க காரணம் என குற்றம் சாட்டியதுடன், ரயில்வே காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் இழப்புக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் அவர்களது குடும்பத்திற்கு மத்திய அரசால் 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து சமூக நீதி கட்சி தொழிற்சங்க தலைவரும், வழக்கறிஞருமான பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது. கோவை ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை, புறப்பட்ட ரயிலானது, சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் புறப்பட்டு சென்றுள்ளது. அதுவே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனவும், ரயில்வே தண்டவாள பாதையில் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் ரயில்வே பைலட்டுகளுக்கு ரயில்வே நிர்வாகம் முறையாக அறிவித்திருக்க வேண்டும், ஆனால் அதனை செய்யவில்லை. ரயில்வே பணியாளர்கள் பணியின் பொழுது அவர்களுக்கு உடலில் ஒளிரும் பட்டை உள்ள ஆடை வழங்கியிருக்க வேண்டும், அவற்றையும் ரயில்வே நிர்வாகம் வழங்கவில்லை, இவ்வாறு எந்தவித பணி பாதுகாப்பு உபகரணங்களையும் ரயில்வே நிர்வாகமும், இரயில்வே ஒப்பந்ததாரரும் முன்னெடுக்கவில்லை, எனவே இவர்கள்தான் இந்த இரு உயிர் இழப்புக்கு காரணம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் இவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார். ரயில் மோதி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவையில் ரயில் மோதி தூய்மை பணியாளர்கள் இருவர் மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
PulseNews சுருக்கம்

கோவை ஆவாரம்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கவிதா மற்றும் யசோதா ஆகிய இரு பெண் தூய்மைப் பணியாளர்கள், பணி முடிந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கள் உறவினர்களின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு, அவர்களது உடல்களைப் பெற்றுக்கொள்ள மறுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu