PulseNews
தமிழகம்

எண்ணூர் முகத்துவாரத்தில் டன் கணக்கில் செத்து மிதங்கும் மீன்கள்: உடனே தீர்வு காண பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரப் பகுதியில் தொழிற்சாலைக் கழிவுகளால் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் நீரில் கலந்ததன் காரணமாகவே மீன்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வடசென்னை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றைச் சுற்றி 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ள நிலையில், இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மாசுபாடுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் ஏராளமான மீன்கள் உயிரிழந்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீனவர்கள் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் மீன்கள் அதிகளவில் உயிரிழக்கத் தொடங்கி, காலை நேரத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாழங்குப்பம் பகுதி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஒருபுறம் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். மறுபுறம், தங்களது வாழ்வாதாரத்தை வழங்கும் கடல் மற்றும் நீர்நிலைகள் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டு, மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் இந்த சம்பவத்திற்கு முழுமையான பொறுப்பேற்று, நீரில் கலந்துள்ள ரசாயனக் கழிவுகளை உடனடியாக அகற்றி, பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும். மேலும், மீன்கள் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நீர் மற்றும் மீன்களின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றத்தை தமிழக அரசு கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் மற்றும் நீர்நிலைகளின் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கியப் பொறுப்பாகும். எனவே, எண்ணூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.” என்று பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எண்ணூர் முகத்துவாரத்தில் டன் கணக்கில் செத்து மிதங்கும் மீன்கள்: உடனே தீர்வு காண பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
PulseNews சுருக்கம்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரப் பகுதியில், தொழிற்சாலைக் கழிவுகளால் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்து மிதக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu