“ரிஸ்க் எடுப்பதை சூரி பேலன்ஸ் பண்ணனும்... கை, கால் பாதிப்பதை பார்க்கும் போது...” - வெற்றிமாறன் பேச்சு
செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் பல மாதங்களாக நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல்களை பொறுத்தவரை கடந்த ஜூலையில் வெளியான ‘மண்டாடி மண்டாடி’ முதல் பாடல் சூரி நடனம் கவனம் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘உசுரே நீதான் புள்ள...’ பாடல் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், “எனக்கு இந்த படம் ஸ்பெஷலானது. ஏன்னு கேட்டா இந்த படத்துடைய டைரக்டர் மதி. எனக்கு வெற்றிமாறன்னு பேர் வச்சது மதிமாறனுடைய அப்பா. அவரு எங்க மாமா. நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும் போது மதி என்கிட்ட கேட்டான், நீங்க சினிமால என்ன பன்றீங்களோ அது மாதிரி நானும் பண்ணலாமான்னு. அதுக்கப்புறம் இன்ஜீனியரிங் முடிச்சுட்டு என்கிட்ட வந்து அசிஸ்டண்ட் டைரக்டரா வரப்போறன்னு சொன்னான். நானும் சரி ஓகேன்னு சொல்லிட்டேன். ஆனா காலேஜ்ல நிறைய அறியர்ஸ் வச்சிருந்தான். அதெல்லாம் முடிச்சிட்டா சினிமாவுக்கு போலாம்னு அவங்க அம்மா சொன்னாங்க, அதனால ஒரே செமஸ்டர்ல முடிச்சிட்டான். அதுக்கப்புறம் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்துட்டு என்கிட்ட வந்தான். எனக்கு தகுதி இருந்தால் மட்டுமே அந்த இடத்தை கொடுங்க.. அப்டின்னு நேர்மையா கேட்குற மனுஷன் அவன். மண்டாடி மாதிரி ஒரு படத்தை உருவாக்க எல்ரெட் சார் மாதிரியான ஆளால் மட்டும் தான் முடியும். தயாரிப்பாளர் என்பதை தாண்டி ஒரு சினிமா மாணவனாவே அவர் மாறிடுவார். நான் இப்பதான் படம் பார்த்தேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரு ஸ்போர்ஸ் மட்டும் இல்லாம இன்னும் விறுவிறுப்பா இருக்கு. அதுல சூரி பன்றதையெல்லாம் பார்க்கும் போது... எவ்வளவு கஷ்டமான விஷயம்னாலும் அதை செய்யுறதுக்கு ரெடியா இருக்காரேன்னு நினைச்சேன். சில சமயங்கள்ல மன ரீதியா பண்ணனும்னு இருக்கும், ஆனா உடல் ரீதியா பண்ணமுடியாது. சில சமயம் உடல் ரீதியா ஃபிட்டா இருந்தாலும் மன ரீதியா சில தடைகள் இருக்கும். ஆனா உடல் ரீதியாவும் மன ரீதியாவும் பண்ணனும்னு நினைச்சா அதை பண்ணக்கூடிய ஆள் சூரி. படத்தால அவருக்கு கை கால் பாதிக்குறதை பார்க்கும் போது அதை கொஞ்சம் குறைச்சிக்க வேணும்னு நினைக்கிறேன். சூரி அவருடைய வளர்ச்சியை மதிக்குறாரு. அந்த மதிப்பு தான் ஒரு டைரக்டர் கேட்டா, நாம பண்ணி கொடுக்கனும்ங்கிற எண்ணத்தை கொடுத்திருக்கு. அது இருக்குற வரைக்கும் அவர் இன்னும் ஸ்ட்ராங்கா இதுமாதிரி ஒர்க் பண்ணுவாரு. இந்த மாதிரி அவர் சவாலான ரோல் பண்ணனும், அதே சமயம் ரிஸ்கை பேலன்ஸ் பண்ணனும். படத்துல நடிச்ச எல்லாருமே சூப்பரா பண்ணிருந்தாங்க. அந்த படகு போட்டி வரும் போது நம்மலும் அந்த கடலுக்குள்ள இருக்குற மாதிரியே இருக்கு. இந்த படம் எல்லாருக்கும் அவங்க விரும்புனதை கொடுக்கணும்ங்கிறது என்னுடைய விருப்பம். அப்படி கொடுக்கக்கூடிய படமா இருக்கும்ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆடுகளம் படமும் ஒரு ஸ்போர்ட்ஸ் படம். அந்த படத்துல ஜிவி-யுடைய இசை ரொம்ப பெரிய ரோல் ப்ளே பண்ணுச்சு. அதே மாதிரி இந்த படத்துலையும் பெரிய ரோல் பண்ணிருக்கு. குறிப்பா பின்னணி இசை ரொம்ப ஸ்பெஷலா இருக்கு. இந்த படம் சிலருக்கு வாழ்க்கையில் ஒரு முறை வரும் வாய்ப்பு. அதுக்காக படத்துல ஒர்க பண்ண எல்லாரும் அர்பணிச்சிருக்காங்க” என்றார்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் 'மண்டாடி'. வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராகப் பணியாற்றும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
கடலில் நடக்கும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பின் போது சூரியின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் சவாலான காட்சிகளைக் குறிப்பிடும் வெற்றிமாறன், அவர் ரிஸ்க் எடுப்பதைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.