PulseNews
தமிழகம்

“துரை தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” - நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில், மூன்றாவது குற்றம் சாட்டப்பட்டவராக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பெயர் சேர்க்கப்பட்டது. அதே சமயம் நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் காரணமாக இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் துரை தயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், துரை தயாநிதி தொடர்பான வழக்கு தனியாகப் பட்டியலிடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அமலாக்கத் துறை சார்பில் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைத் துரை தயாநிதி நேரில் கண்டு ரசித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அவர் வாக்களித்தது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர் தற்போது நலமுடன் இருப்பது தெரிய வருகிறது. எனவே, புதுச்சேரி ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவக் குழு மூலம் அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என வாதிட்டார். இதற்குத் துரை தயாநிதி தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மனநலக் குறைபாடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பதிவுகளை அடிப்படையாக வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது” என வாதிட்டார். இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்ற நீதிபதி சண்முகவேல், “கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியமாகும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு என்ன தடை இருக்க முடியும்?. துரை தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல்நிலையை ஆய்வு செய்யப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர், மருத்துவ உளவியலாளர் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து, துரை தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“துரை தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” - நீதிமன்றம் உத்தரவு!
PulseNews சுருக்கம்

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை சார்பில் சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கு தொடரப்பட்டது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் துரை தயாநிதிக்கு நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் சிக்கல் இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu