'மொபைல் போன் மிஸ் ஆயிடுச்சா? உடனே இந்த போர்ட்டலில் பிளாக் பண்ணுங்க': கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் அட்வைஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள் கிழமை (ஆக. 10) நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்டாலின், பொதுமக்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் வழங்கினார். அவர் பேசியதாவது; ”கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் காணாமல் போனதாகப் பெறப்பட்ட மனுக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது மொத்தமாக 260 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.46 லட்சமாகும். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக ஏறத்தாழ 580 செல்போன்கள் மீட்கப்பட்டு, ரூ.1 கோடி மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செல்போன் காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும்? செல்போன் காணாமல் போனால் பொதுமக்கள் யாரும் எந்தவிதமான பதட்டமும் அடையாமல், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு மனு அளிக்க வேண்டும். காவல் நிலையம் செல்ல இயலாதவர்கள் 'தமிழ்நாடு சிட்டிசன் போர்டல்' (Tamil Nadu Citizen Portal) மூலமாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம். மத்திய அரசின் 'சி.இ.ஐ.ஆர்.' (Central Equipment Identity Register) போர்டலுக்குச் சென்று, உங்களது செல்போனின் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணைக் கொடுத்து பிளாக் செய்வதன் மூலம் மொபைல்போன் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். அதேசமயம், காணாமல் போன மொபைலை மீட்கவும் இது பெரிதும் உதவும். பெரும்பாலான செல்போன்கள் பேருந்துகளிலோ அல்லது ரயில்வே நிலையங்களிலோ பயணிகளின் கவனக்குறைவால் தவறவிடப்படுகின்றன. அவ்வாறு தவறவிடப்படும் செல்போன்களை மூன்றாம் நபர் எடுத்து வைக்கும்போது, CEIR போர்டல் மூலமாகத் தொடர்பு கொண்டு லொகேஷன் அடிப்படையில் அவற்றை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகிறோம். மாறாக, செல்போன்களைத் திருடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இதுவரை திருட்டு தொடர்பாகப் பெறப்பட்ட 36 புகார்களில், ஏறத்தாழ 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சி.இ.ஐ.ஆர். போர்டல் மூலம் செல்போனை பிளாக் செய்வது மற்றும் மீட்கும் வழிமுறைகள் குறித்த 'ஃப்ளோ சார்ட்' (Flow Chart) அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது” என்றார். வீடியோ: புதிய தலைமுறை ”செல்போன் காணாம போச்சுனா பதற்றப்படாதீங்க.. இதை மட்டும் கண்டிப்பா செய்யுங்க..” - பறிதமுதல் செய்யப்பட்ட 260 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் பேச்சு #Kanniyakumari | #SPStalin | #MobilePhones | #Puthiyathalaimurai pic.twitter.com/IkXXPKwbCf — PttvOnlinenews (@PttvNewsX) August 11, 2026 நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்தும் பேசிய எஸ்.பி. ஸ்டாலின், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது ஏன் அவசியமானது என்பதை விளக்கினார்: "தக்கலை வேர்கிளம்பி பகுதியில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் கணவர் ஹெல்மெட் அணிந்திருந்தார், மனைவி ஹெல்மெட் அணியவில்லை. சிறிய விபத்து ஏற்பட்டு கீழே விழுந்ததிலேயே தலையில் பலத்த அடிபட்டு அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். எனவே, முன்னால் உட்கார்ந்திருப்பவர்கள் மட்டும் ஹெல்மெட் போட்டால் போதாது; பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பொதுமக்கள் நலனுக்காகவும், விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காகவுமே காவல்துறை இதனைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கக் கோருகிறது" என்று எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 260 செல்போன்கள் மீட்கப்பட்டு, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், செல்போன் தொலைந்தால் உடனடியாக அரசு இணையதளத்தில் அதனை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த காலங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி இந்த செல்போன்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொலைந்த செல்போன்களைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கினார்.