“டெட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்” - தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த தவெக அமைச்சர்!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (25-08-26) தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) 23.08.2010ஆம் நாளில் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக எந்தவித இடையூறுமின்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009இல் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால் சுமார் 3,28,701 அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும். தேர்ச்சி பெறவில்லை எனில் பணி இழப்புக்கும் ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான தீர்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கி கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித் தேர்வை எழுத வலியுறுத்துவது வற்புறுத்துவது என்பது அவர்களின் வாழ்வாதார உரிமைகளை பாதிக்கும் செயலாகும். எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலம் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் தீர்மானம் முன்மொழியப்படுகிறது. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்ட காலம் பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 23இல் உரிய சட்டத்திருத்தம் மேற்கொண்டு 23.08.2010க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் வழியாக இது தொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளில் மூலம் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணி பலன்களை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது” என்று கூறினார். அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பா.ம.க, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (25-08-26) நடைபெற்றது. இதையொட்டி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித் தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார்.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் 2010 ஆகஸ்ட் 23-ஆம் தேதியிட்ட அறிவிக்கையை மேற்கோள் காட்டி, இந்த விலக்கு கோரும் தீர்மானத்தை அமைச்சர் முன்வைத்தார். இதற்கான விரிவான காரணங்களை அவர் அவையில் விளக்கிக் கூறினார்.