PulseNews
தமிழகம்

ரயில் நிலையக் குடிநீரில் ஈ கோலி பாக்டீரியா கண்டுபிடிப்‌பு; 20,000 இடங்களில் வடிகட்டுதல் பொருத்த ரயில்வே உத்தரவு

எழுதியவர்: தீரஜ் மிஸ்ரா ரயில் நிலையங்களில் குடிநீரின் தரம் மோசமாக இருப்பதாகக் இந்திய தலைமைத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) சுட்டிக்காட்டிய நிலையிலும், தன் சோதனைகளின் போது ஈ. கோலி (E. coli) பாக்டீரியா உட்பட 'டோட்டல் கோலிஃபார்ம்' பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்த நிலையிலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை சில உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் விநியோக இயந்திரங்கள் உட்பட சுமார் 20,000 இடங்களில் புதிய 'டேங்க் டு டேப்' (தொட்டியிலிருந்து குழாய் வரை) நீர் சுத்திகரிப்பு/வடிகட்டுதல் அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. ஆங்கிலத்தில் படிக்க: மூல ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகப் புள்ளிகளில் வழக்கமான நீர் பரிசோதனைகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். "இனிமேல், ரயில் நிலையங்களின் குடிநீர் தரம் ரயில்வே வாரிய அளவில் கண்காணிக்கப்படும். சேமிப்புத் தொட்டிகளைத் திட்டமிட்டுச் சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் வழக்கமாக நடைபெறும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகப் முன்னேற்ற அறிக்கை மற்றும் குடிநீர் தர அறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படும். தலைமைத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி) அனைத்துக் அவதானிப்புகளுக்கும் தீர்வு கண்டு, ஒட்டுமொத்தப் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையின் பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'இந்திய ரயில்வேயின் புறநகர் அல்லாத ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சுகாதாரம்' என்ற தலைப்பிலான தனது சமீபத்திய அறிக்கையில், 49 ரயில் நிலையங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் 8 ரயில் நிலையங்களின் குழாய் நீரில் ஈ. கோலி (E. coli) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக CAG கூறியுள்ளது. கோவை, பாலக்காடு, ஹைதராபாத், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா மற்றும் மதுபூர் ஆகிய நிலையங்களே அவை ஆகும். குடிநீரில் ஈ. கோலை பாக்டீரியா இருப்பது, கழிவுநீர் அல்லது விலங்கு அல்லது மனிதக் கழிவு மாசு நீரில் கலந்திருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும். "குடிநீர் விநியோக அமைப்புகளின் ஆய்வு, பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியின்படி மேற்கொள்ளப்படவில்லை. எஞ்சிய குளோரின், பாக்டீரியாவியல் பகுப்பாய்வு மற்றும் வேதியியல் பகுப்பாய்வு ஆகியவற்றிற்காகக் குடிநீரைப் பரிசோதிப்பதில் குறைபாடு இருந்தது" என்று தேசியத் தணிக்கையாளர் தெரிவித்துள்ளார். ரயில் நிலைய வசதிகள் குறித்தான புகார்கள் அதிகரிப்பு ஆய்வு செய்யப்பட்ட 512 ரயில் நிலையங்களில், 458 நிலையங்கள் அல்லது 89%-க்கும் அதிகமான நிலையங்களில் குடிநீர், இருக்கை வசதி, கழிப்பறைகள், நடைமேடை கூரைகள், மின்விசிறிகள், வாட்டர் கூலர்கள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள் உள்ளிட்ட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதை சி.ஏ.ஜி கண்டறிந்துள்ளது. அதிக வருவாய் மற்றும் அதிக பயணிகள் புழக்கம் கொண்ட பெரிய நிலையங்களில் கூட கணிசமான குறைபாடுகள் காணப்பட்டன. இந்தத் தணிக்கை 2019-20 முதல் 2023-24 வரையிலான காலத்திற்கு நடத்தப்பட்டது. சுகாதார உள்கட்டமைப்பும் குறைபாடுகளுடன் காணப்பட்டது. செயல்படாத கழிப்பறைகள், கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் கழிப்பறைகளில் போதிய வசதியின்மை மற்றும் தூய்மை மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் அனுமதிக்கப்படாத நுழைவுப் புள்ளிகள் தொடர்ந்து இருப்பது ஆகியவற்றுடன் இது குறிக்கப்பட்டது என்று தணிக்கையாளர் தெரிவித்தார். "2019-20 முதல் 2023-24 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 395 அடிப்படை வசதிப் பணிகளை மதிப்பாய்வு செய்ததில், 59% பணிகள் தாமதமானதும், இந்தத் தாமதங்கள் ஒரு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததும், 41% பணிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பயணிகளுக்கு அத்தியாவசிய வசதிகள் சரியான நேரத்தில் கிடைப்பதைப் பறித்தது. தவறான திட்டமிடல், பொருட்கள்/திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமை மற்றும் ஒப்பந்ததாரர்களின் தவறுகள் காரணமாகப் பல பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அசாதாரண தாமதத்தைச் சந்தித்தன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், குடிநீர் வசதி, மருத்துவ உதவி மற்றும் மின்சார வசதிகள் தொடர்பாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் புகார்களுக்குத் தீர்வு காண்பதில் பயணிகளிடையே அதிக மற்றும் அதிகரித்து வரும் அதிருப்தி நிலவுவதாகவும் தேசியத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு அதிக நிதி செலவிடப்பட்ட போதிலும் குறைபாடுகள் நீடிப்பதாக அது கூறியுள்ளது. "ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள வசதிகளைப் பராமரிப்பதில் குறைபாடுகள் உள்ளன. செயல்படாத கழிப்பறைகள் மற்றும் கழிப்பறைகள்/சிறுநீர் கழிப்பிடங்களின் சுகாதாரமற்ற நிலைமைகள் அவதானிக்கப்பட்டன. ரயில் நிலைய வளாகங்களில் குப்பை மேலாண்மை மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் உள்ள குறைபாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன" என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரயில் நிலையக் குடிநீரில் ஈ கோலி பாக்டீரியா கண்டுபிடிப்‌பு; 20,000 இடங்களில் வடிகட்டுதல் பொருத்த ரயில்வே உத்தரவு
PulseNews சுருக்கம்

ரயில் நிலையங்களில் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய தலைமைத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ரயில்வே நடத்திய ஆய்வுகளில், குடிநீரில் ஈ-கோலி மற்றும் டோட்டல் கோலிஃபார்ம் வகை பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் விநியோக இயந்திரங்கள் உட்பட சுமார் 20,000 இடங்களில் புதிய வடிகட்டிகளைப் பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu