‘கோயில் உண்டியலை திருடுவோம், பிடிக்க வந்தால் கடிப்போம்’ - அமாவாசை திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோயில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. அதனால் தொடர்ச்சியாக உண்டியல் திருட்டுகள் நடக்கிறது. கடந்த 10 நாட்களில் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிராமத்தில் அமாவாசை நாளில் மழைமாரியம்மன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என ஒரே இரவில் 2 கோயில்களிலும் 3 உண்டியல்கள் திருடப்பட்டிருந்தது. இதே போல கடந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் கொடிக்கரம்பையில் ஒரு கோயிலில் திருட முயன்ற போது கிராம மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள் சற்று தூரத்தில் ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடிச் சென்றுவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் 2 கோயில்கள், ஆவுடையார்கோயிலில் ஒரு கோயில் என பல கோயில்களில் உண்டியல் திருட்டுகள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேற்பனைக்காடு கோயில்களில் உண்டியல் உடைத்தவர்களை கண்டுபிடிக்க ஆலங்குடி டிஎஸ்பி தனிப்படை போலிசாரை நியமித்துள்ளனர். முதல்கட்டமாக அமாவாசை நாளில் நாள் குறிக்கும் திருட்டு கும்பல் பற்றிய விபரங்களை சேகரித்து பழைய வழக்குகளில் உள்ளவர்களின் கைரேகை பதிவுகளை வைத்து பார்த்த போது சில கை ரேகைகள் ஒத்துப்போனது. அதன் பிறகு அறந்தாங்கி அருகே நாகுடி வேதியன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸை, சில்லரை காசு மூட்டையை தலைக்கு வைத்து படுத்திருந்த போது தனிப்படை போலீசார் தேடிச் சென்று கைது செய்தனர். காளிதாஸிடம் விசாரித்த போது, ‘நான் சிறையில் இருந்த போது அறந்தாங்கியில் உள்ள திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா களசங்காடு ஆடு திருடன் கோவிந்தராஜ் மகன் நாகராஜ் ஆகியோர் பழக்கமானார்கள். வெளியே வந்ததும் இன்ஸ்டாவில் பேசிக்கொள்வோம். அடிக்கடி அறந்தாங்கியில் சந்திப்போம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் பார்த்துட்டு பைக்குகள் கிடைத்தால் திருடுவோம். இரவில் உண்டியல்கள் உடைச்சு திருடி பங்கு வச்சு செலவு செய்வோம். நல்லா சரக்கடிப்போம் சாப்பிடுவோம். போன மாதம் கொடிக்கரம்பையில் உண்டியல் உடைக்கும் போது ஆளுங்க வந்ததால பைக், செல்போன் போட்டுட்டு ஓடி போய் ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடி தப்பித்துவிட்டோம். அப்பவே எங்களை புடிச்சுடுவீங்கனு நினைச்சோம், ஆனா புடிக்கல. அதுக்கு பிறகு பல பைக்குகள் உண்டியல்கள் திருட்டிடோம்’ என்று கூறியுள்ளார். நாகராஜை பிடிக்கும் போது ஜாக்கிரதையா இருங்க சார் யாராவது பிடிக்க வந்தா கடிச்சுட்டு தப்பிடுவான் என்றும் கூறியுள்ளான். அதே போல பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் பிடிக்கும் போது 2 பேரை கடித்துவிட்டு தப்பிக்க முயல, கடிபட்ட வலியோடு போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதே போல திருநாளூர் விஜயையும் கைது செய்து, அமாவாசை உண்டியல் திருடர்கள் 3 பேரையும் டிஎஸ்பி தனிப்படை போலீசார் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி விசாரனை செய்து அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை கைப்பற்றியதோடு உண்டியல் திருடர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி உள்ளார். துரிதமாக செயல்பட்டு உண்டியல் திருடர்களை பிடித்த ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன் மற்றும் கீரமங்கலம் போலீசார், தனிப்படை போலீசாருக்கு மேற்பனைக்காடு கிராம மக்கள் நன்றி கூறியுள்ளனர். மேலும், இந்த திருடர்களை கஸ்டடி எடுத்து அவர்கள் திருடி விற்ற பைக்குகளையும் மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல கடந்த ஆண்டு பைக் திருடியவர்களை சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் இன்னும் திருடிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் பைக்குகளை பறிகொடுத்தவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தொடர்ந்து உண்டியல் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கீரமங்கலம் காவல் சரகம், மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள மழையம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில்களில் அமாவாசை அன்று ஒரே இரவில் மூன்று உண்டியல்கள் திருடப்பட்டன.
முன்னதாக, கடந்த மாதம் அமாவாசை அன்று கொடிக்கரம்பையில் உள்ள ஒரு கோயிலில் திருட முயன்றபோது, கிராம மக்கள் ஒன்று திரண்டதால் திருடர்கள் பைக்கை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பிடிபட்டால் கடித்து வைப்போம் என மிரட்டும் வகையில் திருடர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.