அரசு பஸ்–சரக்கு ஆட்டோ உரசல்... வாக்குவாதத்தால் தஞ்சையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

தஞ்சாவூர்: தஞ்சை ரெயில் நிலையம் அருகே அரசு பஸ்சும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராத விதமாக உரசியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சாலையில் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதுடன், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் மேரீஸ்கார்னர் கீழ்பாலம் வழியாக ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அதே பகுதியில் சரக்கு ஆட்டோ ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோவும், அரசு பஸ்சும் ஒன்றுடன் ஒன்று உரசியதாக கூறப்படுகிறது. இதில் அரசு பஸ்சின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் சரக்கு ஆட்டோ டிரைவர் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் காரணமாக இரு வாகனங்களும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அரசு பஸ் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. ஏற்கனவே ரெயில் நிலையம் அருகே வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், பஸ் சாலையில் நின்றதால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதில் மேலும் சிரமம் ஏற்பட்டது.

இதனால் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் தங்களது பயணத்தை தொடர முடியாமல் தவித்தனர். பின்னர் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி, வேறு பஸ் மூலம் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன

அரசு பஸ் சாலையில் நிறுத்தப்பட்டதால் ரெயில் நிலையம் பகுதியில் இருந்து கீழ்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனங்களை தலைமை தபால் நிலையம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

இதன் காரணமாக ரெயில் நிலையம் அருகே வாகனங்கள் நீண்ட வரிசையில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் சிரமத்துடன் கடந்து சென்றன. குறிப்பாக அரசு பஸ் நின்றிருந்த பகுதியை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

தஞ்சை ரெயில் நிலையம், மேரீஸ்கார்னர் மற்றும் கீழ்பாலம் பகுதிகள் நகரின் முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களாக இருப்பதால், அங்கு சிறிது நேரம் ஏற்படும் போக்குவரத்து தடையும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் அரசு பஸ் சாலையில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

அரைமணி நேரம் பரபரப்பு

இந்த சம்பவத்தால் தஞ்சை ரெயில் நிலையம் அருகே சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே அரசு பஸ் மற்றும் சரக்கு ஆட்டோ தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலும் நிலவியது. பின்னர் சாலையில் நின்றிருந்த அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

அரசு பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டதும், தடுப்புகள் நீக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து வழக்கமான நிலைக்கு திரும்பியது. இதையடுத்து ரெயில் நிலையம் மற்றும் கீழ்பாலம் பகுதிகளில் போக்குவரத்து சீரானது.

தஞ்சை நகரின் முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ரெயில் நிலையம் அருகே வாகனங்கள் உரசிக் கொள்வது போன்ற சிறிய சம்பவங்கள்கூட சில நேரங்களில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து, நெரிசல் மிகுந்த பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே அரசு பேருந்தும் சரக்கு ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பேருந்து சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியைக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.