PulseNews
தமிழகம்

பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்: செப்.1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்து, சென்னையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக அனைத்து விவசாய சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரபிக் மினி ஹாலில் இன்று நடைபெற்றது. விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது, ஆட்சிக்கு வந்தவுடன் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் முழு பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, முதலாவது அறிவிப்பில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட வரையறைகளின்படி தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாகவும், இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இரண்டாவது முறையாக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும், ஆனால் 110 விதியின் கீழும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், அரசிடம் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகேசன், “விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாததை வன்மையாகக் கண்டிக்கிறோம். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி கடன்களை தள்ளுபடி செய்யாமல், பிச்சை போடுவது போல் கடன் தள்ளுபடி செய்வது கண்டனத்திற்குரியது” என்றார். மேலும், தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார். “எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்க நிதி இருக்கிறது. விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டால் மட்டும் நிதி இல்லை என்கிறார்கள். விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து 8 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர். எங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என நம்பினோம். ஆனால், ஏமாற்றிவிட்டார்கள்” என்றும் ஈசன் முருகேசன் குற்றம்சாட்டினார். இந்தக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தினமும் 2,000 முதல் 3,000 விவசாயிகள் வரை கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். போராட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும் என நம்புவதாகவும், அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெறுவோம் என்றும், அரசு அனுமதிக்காவிட்டாலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஈசன் முருகேசன் கூறினார். செய்தி: க.சண்முகவடிவேல்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்: செப்.1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு
PulseNews சுருக்கம்

பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யாத அரசைக் கண்டித்து, செப்டம்பர் 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம், திருச்சியில் உள்ள ரபிக் மினி ஹாலில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் முடிவை உறுதி செய்தனர். கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டத்தை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu