“எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே தெரியவில்லை” - உதயநிதி பேட்டி!
4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று (17.08.2026) கூடியது. அப்போது திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, “கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம், திருவொற்றியூர் கொலை சம்பவம், கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை, சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, தேனி மேகமலை விவகாரம் என 5 விவகாரங்கள் குறித்து சிறப்பு கவன ஈர்பு தீர்மானம் அளித்தார். அதோடு இவற்றை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார். இதனையடுத்து இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் உரையாற்றினார். அதன் பின்னர் கோவை, திருவொற்றியூர் மாணவர்கள் கொலை தொடர்பாக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் முறையாக இல்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 19 வயது மாணவர் அமுதன், போதைப்பொருள் கடத்தும் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சரியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். போதைப்பொருளை பறிமுதல் செய்திருக்க வேண்டும். அமுதன் யார் மீது புகார் கொடுத்தாரோ, யார் போதைப்பொருள் கடத்துகிறார்கள், யார் சப்ளை செய்கிறார்கள் என்று தெரிவித்தாரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலை அழைத்து, ‘இந்த அமுதன்தான் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால், அந்த போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பல், கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து அமுதனைத் தாக்கி, ஐந்து நாட்களுக்கு முன்பு படுகொலை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நேற்று முன்தினம் திருவொற்றியூரில் இதேபோல் போதைப்பொருள் விவகாரத்தில் தனுஷ் என்ற ஒரு இளைஞரும், சுமார் 20 பேர் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்கு பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நான் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சட்டப்பேரவையில் அரசின் கவனத்தை ஈர்த்து பேசியிருக்கிறோம். ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக, எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ‘உங்களுடைய அரசு என்ன செய்தது?’ என்று ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்காமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடும் வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்ல, நான் பலமுறை கடந்த மூன்று மாதங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், ஏதோ ஒரு காலத்தில் அமைச்சர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது. அரசு குறித்து எந்த ஒரு விளக்கத்தைக் கேட்டாலும் எழுந்து நின்று பதில் சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த அரசில் அந்தந்த துறை அமைச்சர்கள், அந்தந்த துறைக்கான பதிலை சொல்ல மறுக்கிறார்கள். இன்றைக்கு உதாரணத்திற்கு, சட்டம் - ஒழுங்கு குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். போதைப்பொருள் விவகாரம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவில்லை. இதையெல்லாம் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம். மீண்டும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (17.08.2026) தமிழக சட்டப்பேரவை கூடியது. அப்போது, கோவை மாணவர் அமுதன் கொலை, திருவொற்றியூர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு மற்றும் தேனி மேகமலை விவகாரம் என ஐந்து முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திமுக கொறடா எ.வ.வேலு இந்த கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பது கூட தெரியவில்லை என உதயநிதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.