‘தி ரெட் சாரி’ முதல் புதிய சுயசரிதை மோதல் வரை: சோனியா காந்தியின் புத்தகச் சர்ச்சைகள்
Written by: Vikas Pathak காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக ‘பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ பதிப்பகம் அறிவித்துள்ளது. சோனியா காந்தியைச் சுற்றி புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சைகள் எழுவது இது முதல் முறையல்ல. புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியில் சில எடிட்டிங் மாற்றங்களையும், நீக்கங்களையும் செய்ய பதிப்பகம் வலியுறுத்தியதாகவும், அதற்கு நூலாசிரியர் சோனியா காந்தி உடன்படாததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, சோனியா காந்தியின் இத்தாலி நாட்டு இளமைக்கால வாழ்க்கை முதல் விவரிக்கும் ‘தி ரெட் சாரி’ (The Red Sari) என்ற புத்தகத்தின் ஆசிரியருக்கும், அதன் பதிப்பகத்திற்கும் எதிராக காங்கிரஸ் தீவிர எதிர்ப்பு காட்டியது. ஸ்பானிஷ் எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதிய இந்நூல் 2008 அக்டோபரில் ஸ்பெயினில் வெளியானது. பின்னர் இத்தாலியன், பிரெஞ்சு, டச்சு மற்றும் பீட்டர் ஹியர்ன் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இந்திரா காந்தியின் திருமணத்திற்காக நேரு நெய்ததும், பின்னர் சோனியா காந்தி தனது திருமணத்தின் போது அணிந்ததுமான சிவப்பு நிறப் புடவையைக் குறித்தே இந்தத் தலைப்பு வைக்கப்பட்டது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க தனது தலைவரின் வாழ்க்கையை நாடகபாணியில் சித்தரித்ததை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதுகுறித்து பேசிய ஆசிரியர் மோரோ, சோனியா காந்தியின் வழக்கறிஞர்களும், காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் சிங்வியும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் பதிப்பகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, புத்தகத்தை விற்பனையிலிருந்து திரும்பப் பெறக் கோரியுள்ளனர். சோனியாவின் இத்தாலிய வாழ்க்கைக் காட்சிகளைப் புத்தகத்தில் சித்தரித்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து சோனியாவின் சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட அபிஷேக் சிங்வி, உண்மைகளைத் திரித்துக் கூறுவதையும் தவறான தகவல்களைப் பரப்புவதையும் மோரோ நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த புத்தகம் அனுமதியற்றது, அவதூறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் ஒருவரின் வாழ்க்கையைக் கற்பனையாக எழுத முடியாது என்று கூறினார். 2010 ஜூன் 1 அன்று ஸ்பெயினில் இருந்து பேசிய மோரோ, "ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, தனது தாயாரின் அறிவுரைப்படி மீண்டும் இத்தாலிக்கே திரும்பிச் செல்லலாமா என்று சோனியா காந்தி யோசித்ததாகக் குறிப்பிட்ட பகுதியையும் வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். சோனியா காந்தி முழுமையாக இந்திய மயமாக்கப்பட்டவர் என்றும், அவர் இத்தாலிக்குத் திரும்புவது குறித்து ஒருபோதும் சிந்திக்க மாட்டார் என்றும் மக்கள் நம்ப வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். சோனியா தில்லியில், அதுவும் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்" என்று குற்றம்சாட்டினார். இப்புத்தகம் எழுதப்பட்ட போது அதன் வரைவுப் பிரதி சோனியாவின் சகோதரி நதியா மூலம் அவரிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் மோரோ தெரிவித்தார். 1946-ல் சோனியா எட்விகே அன்டோனியா அல்பினா மைனோவாகப் பிறந்ததில் இருந்து இந்த புத்தகம் அவரது வரலாற்றைப் பேசுகிறது. முசோலினியின் ராணுவத்தில் பணியாற்றிய சோனியாவின் தந்தை ஸ்டெபானோவிற்கு அடைக்கலம் தந்த ஒரு ரஷ்யக் குடும்பத்தின் மீதான நன்றியுணர்வாகவே அவருக்கு ‘சோனியா’ என்ற ரஷ்யப் பெயர் சூட்டப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வெளியாகாத இந்நூல், 2015-ல் நரேந்திர மோடி பிரதமரான பின்னரே இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. சோனியா காந்தியைப் பற்றியது அல்ல என்றாலும், மற்றொரு புத்தகமும் அவருக்குக் கடுமையான சிக்கல்களை உருவாக்கியது. 2001-ஆம் ஆண்டு, கேத்தரின் ஃபிராங்க் எழுதி ஹார்பர்காலின்ஸ் வெளியிட்ட ‘இந்திரா: தி லைஃப் ஆஃப் இந்திரா காந்தி’ என்ற புத்தகத்தில், தன் மீதும் மறைந்த தனது கணவர் சஞ்சய் காந்தி மீதும் அவதூறான கருத்துகள் உள்ளதாகக் கூறி மேனகா காந்தி வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றார். அப்போது வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த மேனகா காந்தி, இந்த நூலாசிரியருக்கு சோனியா காந்திதான் பின்புலமாக இருந்ததாகக் குற்றம்சாட்டினார். எழுத்தாளர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய மேனகா, நேரு-காந்தி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தி தனது நற்பெயரை உயர்த்த சோனியா முயல்வதாகக் கூறினார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இதற்குப் பதிலடி கொடுத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் சிறிய சட்டப் போராட்டத்தில் வென்று ஒரு பத்தியை நீக்கிய மேனகா, யாரோ ஒருவரின் தூண்டுதலால் எழுதப்பட்ட முழு புத்தகத்தையுமே முடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்கிறார். எதிர்க்கட்சித் தலைவரை இணை அமைச்சர் விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறும் மேனகா, இந்திரா காந்தி உயிருடன் இருந்தபோதே அவரை விட்டு விலகி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்; மேலும் அதிகாரத்திற்காக காங்கிரஸ் மற்றும் அதன் குடும்பத்தின் எதிரியான பாஜகவில் இணைந்தவர் என்று சாடினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் அறிவித்துள்ளது. புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் சில மாற்றங்களையும் நீக்கங்களையும் செய்ய பதிப்பகம் வலியுறுத்தியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி தொடர்பான புத்தகங்கள் சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்ற பல்வேறு புத்தக சர்ச்சைகள் அவர் மீது எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த புதிய புத்தக வெளியீடு தொடர்பான சிக்கலும் விவாதமாகியுள்ளது.