கர்நாடகா துப்பாக்கிச்சூடு சர்ச்சை: வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வு அதிகாரிகள் ஆதரவு; நேர்மையான விசாரணைக்கு கோரிக்கை
By: Express News Service கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஹனூர் வனப்பகுதியில் கடந்த ஆக.15 அன்று வேட்டையாட வந்ததாகக் கூறி 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக மாநில ஓய்வுபெற்ற வன அதிகாரிகள் சங்கம் முதல்வர் டி.கே. சிவக்குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளது. பெங்களூரு சுதந்திர பூங்காவில் வனத்துறை ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் டி.ஏ. வெங்கடேஷ், விசாரணை முடியும் வரை வனத்துறை ஊழியர்களை குற்றவாளிகளாகச் சித்தரிப்பதைத் தடுக்க அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், வனப்பணியாளர்களின் இந்நடவடிக்கை மாநிலத்தின் காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை பாதுகாப்பதற்காக, தங்களின் சட்டப்பூர்வ கடமையை நேர்மையுடன் ஆற்றியபோது எடுக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஹனூர் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த அந்தோனி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (43) மற்றும் செபாஸ்டியன் டேவிட் குமார் (35) ஆகிய மூவர் வேட்டையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, ஆக.15 அதிகாலையில் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடன் இருந்ததாகக் கூறப்படும் ஜோசப் மஹிமா தாஸ் என்ற பெஞ்சமின் (45) என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், காணாமல்போன கால்நடைகளைத் தேடிச் சென்று காட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது வனத்துறையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சிஐடி (CID) விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் காடுகள் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள அடர்ந்த மலைப்பகுதியாகும். இத்தகைய பகுதிகளில் இரவும் பகலும் ரோந்துசெல்வது, வனவிலங்கு குற்றங்களைத் தடுப்பது, சட்டவிரோத ஆயுதங்களுடன் வரும் வேட்டையாளர்களை எதிர்கொள்வது போன்றவை களப்பணியாளர்களுக்கு மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான பணிகள் என்று முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இரவு நேரத்தில் அங்கு கும்மிருட்டாக இருக்கும்; ஏரிகள் மற்றும் பாறைகளுக்கு அருகில் எதையும் பார்க்க முடியாது. ஆக.15 அன்று அத்தகைய சூழலில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்தேகத்திற்குரிய நபர்கள் சுட்டதால் வனத்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. திட்டமிட்டு ஆட்களைக் கொன்ற வரலாறு வனத்துறைக்குக் கிடையாது என்று வெங்கடேஷ் கூறினார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க மேலும், வனத்துறை பல தருணங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களை குற்றவாளிகளாக்குவது வனவிலங்குப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பதால் அரசு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் பணியாளர்கள் அச்சமின்றிப் பணியாற்ற பாடி கேமராக்கள் (body cameras), நவீன ஆயுதங்கள், குண்டு துளைக்காத ஆடைகள், ஹெல்மெட்டுகள், இரவு நேரக் கண்காணிப்புக் கண்ணாடிகள் (night-vision goggles), ஜிபிஎஸ் (GPS), ட்ரோன்கள் மற்றும் நவீன வயர்லெஸ் கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறும் சங்கம் கோரியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தூரம் தொடர்பாக வனத்துறையினரின் கூற்றுக்கும் உடற்கூறாய்வு அறிக்கைக்கும் முரண்பாடுகள் எழுந்ததை அடுத்தே, ஆகஸ்ட் 25 அன்று இந்த வழக்கை சிஐடி விசாரணைக்குக் கர்நாடக காவல்துறை மாற்றியது. மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, செபாஸ்டியன் டேவிட் குமாரின் உடலில் 2 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது நெஞ்சின் இடதுபுறத்தில் பாய்ந்த குண்டு காயத்தைச் சுற்றித் தீக்காயம்/கருகிய அடையாளங்களும், நெஞ்சு முடி கருகியதும் பதிவாகியுள்ளது. இது மிக நெருக்கமான தூரத்திலிருந்து சுடப்பட்டதைக் (very close-range gunshot) காட்டுகிறது. அவரது வலது தொடையிலும் இத்தகைய கருகிய அடையாளங்களுடன் குண்டுக் காயம் உள்ளது. ஜான் ரோஸ் பீட்டரின் கழுத்துப் பகுதியிலும், அந்தோனி சாமியின் விலா எலும்புப் பகுதியிலும் மிக நெருக்கமான தூரத்திலிருந்து சுடப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உள்ளன. ஆக.17 அன்று இதுகுறித்து பேசிய கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சம்பவத்தின்போது கரடிகல்லு பாறைப் பகுதியில் வேட்டைக்காரர்கள் வனத்துறையினரை விட உயரமான இடத்தில் நின்றிருந்தனர். அவர்கள் தெளிவாகத் தெரியாத நிலையில் வனத்துறையினர் தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்தினர்; இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார். ஆக.14 இரவு 8 மணியளவில் வேட்டையாளர்கள் காட்டுக்குள் நுழைந்ததாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இரவு நேரத் தேடுதல் வேட்டையின் போதே இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது. தேடுதலின்போது வேட்டையாடும் நோக்கத்துடன் வந்தவர்களை எதிர்கொண்டோம். நாங்கள் எச்சரித்தும் அவர்கள் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது எங்க ஆட்கள் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர்; இல்லையெனில் எங்கள் ஊழியர்களே பலியாகியிருப்பார்கள் என்று ஹனூர் உதவி வனப் பாதுகாவலர் (ACF) மாரிசுவாமி தெரிவித்தார். சுடப்பட்ட இடத்திற்குச் சற்று தொலைவில் அவர்களால் வேட்டையாடப்பட்ட 34 கிலோ மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல், சாமராஜநகர் மாவட்ட தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் மாலதி பிரியாவும், வேட்டையாளர்கள் என்றும் தற்காப்புக்காகவே வனத்துறையினர் சுட்டனர் என்றும் உறுதிப்படுத்தி உள்ளார். பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா பேசுகையில், நிபுணர்களின் கருத்துப்படி இது நீண்ட தூரத்திலிருந்து சுடப்பட்டதாகத் தெரியவில்லை; மிக நெருக்கமான தூரத்திலிருந்து சுடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையும் குறிப்பிடுகிறது என்றார். கர்நாடகாவில் அரசு சொத்துக்களையும் உயிரையும் பாதுகாக்க வனப் பணியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது, அவர்களுக்குப் சட்டப்பாதுகாப்பு (immunity) வழங்கும் 1991 செப்டம்பர் 20 தேதியிட்ட அரசாணை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் ஹனூர் வனப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வேட்டையாட வந்ததாகக் கூறப்படும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கர்நாடக மாநில ஓய்வுபெற்ற வன அதிகாரிகள் சங்கம் முதல்வர் டி.கே. சிவக்குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடைபெற்ற ஆதரவு நிகழ்வில் பேசிய சங்கத்தின் தலைவர் டி.ஏ. வெங்கடேஷ், வனத்துறை ஊழியர்களுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.