“ஊராட்சித் தலைவர்களுக்கு கார் கொடுக்க வேண்டும்” - மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!
மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனமும், வாகனப் படியாக ரூ.75,000யும், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என நேற்று முன் தினம் தமிழக முதல்வர் விஜய் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இருப்பினும் இந்த அறிவிப்பு திமுக, தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஊராட்சி தலைவர்களுக்கு கார் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இன்று (21-08-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் சரியாக பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை தவறு செய்ய சொல்கிறீர்கள் என்று அர்த்தம். லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்கிறோம். அவர்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் நிதி நெருக்கடி இருக்கிறது என்றால் எப்படி ஒரு நல்ல பிரதிநிதியை உருவாக்க முடியும்? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகளை குறை சொல்வது நியாமில்லை. என்னை பொறுத்தவரைக்கும் எம்.எல்.ஏக்களுக்கு தருவது போல் ஊராட்சி மன்ற தலைவர்கள் வரைக்கும் கார் உள்ளிட்ட வசதியை செய்து கொடுக்க வேண்டும். தவறு செய்யாமல் ஒருவனால் இருக்க முடியாது என்ற கூற்று இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு வசதிகளை கொடுத்தால் தானே கேள்வி கேட்க முடியும். எம்.பிக்களுக்கு ஆண்டுக்கு 36 விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எம்.பிக்கள் ரயிலில் போனால் என்ன என்று கேட்பார்கள்? ரயிலில் போனால் எப்போது சேர முடியும்? முறையான ஊதியம், வசதிகள் செய்து கொடுக்காமல் தவறு செய்ய தூண்டக் கூடாது. முன்னேறிய தமிழ்நாடு என்கிறோம், எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுப்பதை கேள்வி கேட்பது நியாயமா?” என ஆவேசமாகப் பேசினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம், மாதம் ரூ.75,000 வாகனப்படி மற்றும் உதவியாளரை நியமிக்க மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு தவெக, காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், திமுக, தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல ஊராட்சித் தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.