‘ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு ஆஜராவேன்’ - நீதிமன்றத்தில் மரிய வில்சன் உறுதி!
தமிழக நிதியமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் மரிய வில்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் நடைபெற்று வரும் சூழலில், வழக்கு விசாரணைக்காகப் பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மரிய வில்சனுக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்று (28-08-26) காலை சென்னை நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு வந்த போது, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மரிய வில்சன் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்று கூற முடியாது என்றும், நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்றும் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது கூட நீதிமன்றாத்தில் ஆஜராகி இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகியே வேண்டும், இது தொடர்பாக உரிய தேதியை பிற்பகல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது மரிய வில்சன் தரப்பில், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் மரிய வில்சன் ஆஜராகவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் எனவும் மரிய வில்சன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று நீதிபதி, மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, தனது சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் உள்ள அவர்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு நேரில் ஆஜராவதாக மரிய வில்சன் உறுதியளித்துள்ளார்.