புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதற்காக போலி குடியிருப்பு சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்திருந்த 15 மாணவர்கள், புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டிற்கும் விண்ணப்பித்திருப்பது சென்டாக் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு 'ஷோகாஸ் நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்டாக் அமைப்பு மூலம் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் போலியான குடியிருப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து, புதுச்சேரி மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற முயற்சிப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் புகார்கள் எழுந்தன.

இந்த புகார் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சென்டாக் நிர்வாகம் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்களை சென்டாக் அதிகாரிகள் பெற்று ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தமிழகம் மற்றும் கேரள மாநில மருத்துவ தரவரிசைப் பட்டியல்களில் இடம்பெற்றிருந்த 15 மாணவர்கள், புதுச்சேரியிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொறுத்தவரை, மாணவர் ஒருவர் தாம் தகுதி பெறும் குடியிருப்பு விதிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்திருப்பது, மாணவர்கள் சமர்ப்பித்துள்ள குடியிருப்பு சான்றிதழ்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 15 மாணவர்களுக்கும் சென்டாக் நிர்வாகம் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் வரும் 24ம் தேதி சென்டாக் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, இரண்டு மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்ததற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்டாக் அதிகாரிகள் கூறுகையில், “சம்பந்தப்பட்ட மாணவர்கள் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகம் மற்றும் கேரளாவிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும் 24ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களது விளக்கம் மற்றும் ஆவணங்கள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில், விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்,” என்றனர்.

மேலும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைத் தொடர்ந்து, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்களையும் சென்டாக் அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களைப் பெறுவதற்காக போலி குடியிருப்பு சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால், இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்டாக் மேற்கொண்டு வரும் தீவிர ஆய்வில் மேலும் பல மாணவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதற்காகப் போலி குடியிருப்பு சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்டாக் (CENTAC) அமைப்பின் ஆய்வில் ஒரு முக்கிய தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த 15 மாணவர்கள், அதே சமயத்தில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டிற்கும் விண்ணப்பித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த 15 மாணவர்களுக்கு சென்டாக் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.