“பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது” - தவெக அரசுக்கு எதிராக இபிஎஸ் அறிவிப்பு!
தவெக அரசு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்றும் காவிரி நீரை பெற்று தர முயற்சி எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்து தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, “2026, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது. மேற்கண்டவாறு, பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும், அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அதிமுக= சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது மற்றும் காவிரி விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவது ஆகியவற்றுக்காக தவெக கூட்டணி அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை அரசு வஞ்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை தடுக்கத் தவறியதைக் கண்டித்து, வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க உள்ளார்.