கட்லேகனின் இருண்ட காடு: மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழிவை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?
எழுத்து: அஸீம் ஸ்ரீவாஸ்தவா மொழியாக்கம்: எம். கோபால் பருவமழை மேகங்கள் தாழ்ந்து வருகிறது, தலைக்கு மேல் மரங்களின் உச்சக் கிளைகள் படர்ந்து ஒரு கூரையாக மூடிக் கிடக்கிறது, அதன் காரணமாக கர்நாடகாவின் வட கனரா மாவட்டத்தின் கட்லேகன் அடர்ந்த காடு ஏறக்குறைய முழுமையான இருளில் மூழ்குகிறது. அது நண்பகல் நேரம். ஆனாலும் சில நூறு அடிகள் உள்ளே சென்றதும், வெளிச்சம் முற்றிலுமாக மங்கிவிடுகிறது; சற்று தொலைவில் சலசலக்கும் ஓடையைப் பார்ப்பதற்குக் கூட கைவிளக்கை எடுக்க நேர்கிறது. நீர் சொட்டும் அடர் புதர்களுக்குள் இருவாச்சிப் பறவைகள் கூவுகின்றன, வளைந்த மரக் கிளைகளின் கூரையின் இருளில் மலைப் புறாக்கள் முணுமுணுக்கின்றன, கழுகு ஆந்தைகள் தங்கள் தாழ்ந்த கூவலைப் மிகப் பழமையான அடிமரங்களின் இடையில் எதிரொலிக்கச் செய்கின்றன. இங்கே, இந்த உயிரோட்டமுள்ள இருளில், "புதிய இந்தியாவில்" காடுகளாகக் கருதப்படும் வறண்ட, துண்டு துண்டான மரக்காடுகள், ரவீந்திரநாத் தாகூர் போன்ற கவிஞர்களுக்கு உத்வேகம் அளித்த ஆரண்யத்தின் அற்பமான நிழல்களாகத் தங்களை வெளிப்படுத்துகின்றன — இன்றும் சுவாசித்து, தன்னைத்தானே ஆளும் ஒரு ஆதி உலகம், உண்மையான வனம் இந்தியாவில் வெறுமனே உயிர்வாழவில்லை; அது ஈரமான காற்றிலும் இருளிலும் செழித்து வளர்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நாம் அதை அனுமதிப்போமானால். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் வன மேலாண்மை குறித்து எனது முனைவர் பட்ட ஆய்வை முடித்து, நான்கு கண்டங்களில் உள்ள காடுகளைப் பார்த்திருந்ததால், காடுகள் என்றால் எல்லாமே எனக்குத் தெரியும் என நினைத்திருந்தேன். ஆனால், நான் நினைத்தது தவறு. கட்லேகனின் இருள் என்பது, அதன் காடுகள் நிறைந்த சரிவுகளுக்கு அப்பால் வெகுதூரம் பரவியுள்ள ஒரு மலைத்தொடரின் மிகவும் அந்தரங்கமான ஒரு முகமாகும். இந்தியத் தீபகற்பத்தின் ஓரமாக 1,600 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், இந்தியாவின் உயிருள்ள இந்த சுற்றுப்புறச் சூழலின் ஒரு முதுகெலும்பாகத் திகழ்கின்றன. உலகின் எட்டு மிக முக்கியமான பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மலைகள், அசாதாரணமான உயிரினங்களுக்கு அடைக்கலம் அளிக்கின்றன — இந்தியாவின் பூக்கும் தாவர இனங்களில் கிட்டத்தட்ட பாதி, முதுகெலும்புள்ள விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு, மற்றும் உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள 300-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இங்கு தஞ்சம் அடைந்திருக்கின்றன. கட்லேகன் சதுப்புநிலக் கொட்டை மற்றும் குண்ட் டே கெக்கோ (பகலில் வேட்டையாடும் ஒரு வகைப் பல்லி இனம்) போன்ற பல இனங்கள், நான் பார்த்த இந்தக் காடுகளுக்கு மட்டுமே உரியவை. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியத்துவம் உயிரினங்களின் எண்ணிக்கையை விடவும் முக்கியமானது. அவை தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தை உள்வாங்கி, அதை தக்காணத்தின் உயிர்நாடியாக வெளியிடுகின்றன: கோதாவரி, கிருஷ்ணா, காவேரி மற்றும் துங்கபத்ரா ஆறுகள் இங்கு உருவாகி, ஆறு மாநிலங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைகின்றன. அவற்றின் அடர்ந்த காடுகள் பிராந்திய காலநிலையைச் சீராக்கி, கார்பனை ஈர்த்து, மண்ணை நிலைநிறுத்தி, கீழ்நிலைச் சமவெளிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் நீரோட்டம் மற்றும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கின்றன. ஆகவே, இந்த மழைக்காடுகளை “இந்தியாவின் அமேசான்” என்று அழைப்பது மிகையல்ல. தென் அமெரிக்க கூட்டாளியான அமேசானைப் போலவே, மேற்கு தொடர்ச்சி மலையும் ஒரு மாபெரும் உயிருள்ள உயிரினமாகச் செயல்படுகிறது — கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து, ஆக்சிஜனை வெளியிட்டு, பருவமழையைத் தக்கவைப்பதற்காக ஈரப்பதத்தை மீண்டும் வளிமண்டலத்திற்குள் சுழற்சி செய்கின்றன. அவற்றின் உச்சி மரக் கிளைகளின் கூடாரங்கள் போன்ற அடுக்குகள் ஒட்டுண்ணித் தாவரங்களால் நிரம்பி வழிகின்றன; இருவாச்சிப் பறவைகள் மற்றும் சிங்கவால் குரங்குகளின் கூவல்கள் எங்கும் எதிரொலிக்கின்றன. இவை, தீபகற்பம் முழுவதின் காலநிலையையும் நீரையும் நிலைநிறுத்தும் ஒரு சுய-புதுப்பிக்கும் உயிர்ப் பின்னலை உருவாக்குகின்றன. அமேசான் படுகை தென் அமெரிக்காவின் நுரையீரலாக இருப்பது போலவே, மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் நுரையீரலாகவும் ஊற்று நீராகவும் இருக்கின்றன. மாதவ் கட்கில் போன்ற சூழலியலாளர்கள் நீண்ட காலமாகக் குறிப்பிடுவது போல, அவை தொடர்ச்சியாக முழுமையாக இருப்பதென்பது அதன் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது மட்டுமல்ல; அது ஒரு நாகரிக சூழலியல் உயிர்வாழ்வது என்பதாகும். ‘வளர்ச்சி’ என்பதை நோக்கிய பயணத்தில் இதற்கிடையில், கட்லேகன் பகுதியில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஷிமோகா மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களில் முன்மொழியப்பட்ட ரூ.10,000 கோடி மதிப்பிலான, 2,000 மெகாவாட் திறன் கொண்ட ஷராவதி நீரேற்று நீர்த்தேக்கத் திட்டத்திற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மறு உத்தரவுகள் வரும் வரை பணிகள் முடக்கப்பட்டுள்ளன. அதிக நீர்மின்சக்தி அணைகளைக் கொண்ட ஷராவதி ஆற்றின் மீதுள்ள தலக்கலாலே மற்றும் கெருசோப்பா நீர்த்தேக்கங்களை, பிரம்மாண்டமான நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் இணைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், தேவை குறைவாக உள்ள நேரங்களில் நீரை மேட்டுப்பகுதிக்கு இறைத்து, தேவை அதிகமாக உள்ள நேரங்களில் மின்சாரம் உற்பத்தி செய்ய அதனைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுதும் ஷராவதி பள்ளத்தாக்கு சிங்கவால் குரங்கு வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது. வனவிலங்குச் சட்டத்தின் கீழ் மிக உயர்ந்த பாதுகாப்பு நிலைகளில் ஒன்றைப் பெறும் இப்பகுதிக்கு, இதுபோன்ற உள்கட்டமைப்புகள் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு, மீளமுடியாத சூழலியல் பாதிப்பைக் காரணம் காட்டியும், அதன் தொழில்நுட்ப நியாயத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தியும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்தத் திட்டம் மின் கட்டமைப்புக்கு எந்தப் புதிய நிகர ஆற்றலையும் அளிக்காது என்றும், மாறாக நீரேற்றும் தேவைகள் காரணமாக சுமார் 500 மெகாவாட் நிகர இழப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இதில் உள்ள அபாயங்களும் மிக அதிகம். இந்தத் திட்டத்திற்காக 50 ஹெக்டேருக்கும் அதிகமான அடர்ந்த பசுமைமாறா முதன்மைக் காடுகளை அழிக்க வேண்டியுள்ளது. இது அன்ஷி-தண்டேலி மற்றும் பத்ரா-குதிரேமுக் நிலப்பரப்புகளுக்கு இடையேயான முக்கியமான வனவிலங்கு வழித்தடங்களைத் துண்டாக்கி விடும். புவியியல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய இந்தப் பகுதியில், சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் போன்ற நிலத்தடி கட்டமைப்புகளுக்காக கனரகத் தொழிற்சாலை வெடிபொருட்களைக் கொண்டு வெடிப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், கடுமையான நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 20.23 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைக் கொண்டுள்ள கர்நாடகாவிற்கு, அந்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இடைப்பட்ட பற்றாக்குறைகளைச் சமாளிக்க, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், நீரேற்றுச் சேமிப்பு, அழுத்தப்பட்ட காற்று ஆற்றல் சேமிப்பு மற்றும் புவியீர்ப்பு ஆற்றல் சேமிப்பு போன்ற பல்வகைப்பட்ட தீர்வுகளை நாட வேண்டும். இந்தத் தேவையை விமர்சகர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். இருப்பினும், மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பை நியாயமாகப் பெற்றுள்ள, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சரவணி சிங்கவால் குரங்கு வனவிலங்கு சரணாலயம் போன்ற, கார்பனைச் சேமிக்கும் சூழலியல் முதுகெலும்பை நிரந்தரமாக அழிப்பதன் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதை நியாயப்படுத்த முடியாதது. பண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் புத்துருவாக்கத்தை நோக்கி ஈடுசெய்ய இயலாத மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது என்பது, இயற்கையுடன் நமது பிணைப்பைப் புதுப்பிப்பதாகும். 'நிலையான வளர்ச்சி' என்பது போன்ற புளித்துப் போன தீர்வுகளைக் காரணம் காட்ட முடியாது. நமது திட்டமிட்ட, நன்கு மறைக்கப்பட்ட பேராசையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், இயற்கையிடமிருந்து நாம் தொடர்ந்து எதையெல்லாம் எடுத்துக்கொண்டே இருக்க முடியும் என்பதே இப்போது நிலைத்தன்மை என்று உள்ளது. சூழலியல் புத்துருவாக்கமும் பரஸ்பரப் பரிமாற்றமும், நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற நிலையான, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை நாம் மதிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்மய நவீனத்துவம் இயற்கையைப் பிளவுபடுத்தத் தொடங்கும் போது இயற்கையுடன் நீண்ட காலமாக ஒருங்கிணைந்திருந்த ஒரு பண்பாட்டை நாம் ஆக்கப்பூர்வமாகப் புதுப்பிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். நமக்கு அளிக்கப்பட்டதை நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கிறோம். நமது முன்னோர்கள் நம்மிடம் நடந்துகொண்டதைப் போலவே, நாம் வருங்கால சந்ததியினருக்காகச் செயல்படுவோம். பிரபஞ்சத்திற்கே உரிய மரியாதையுடன், மரங்கள் மற்றும் விலங்குகள், மலைகள் மற்றும் காடுகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவற்றுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும். சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு, சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள், அணைகள், விமான நிலையங்கள், மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் பெருநிறுவன-நுகர்வோர் நாகரிகம் வழக்கமாக ஈடுபடும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இதன் பொருள். சுற்றுச்சூழல் மானியம் பெறும் நகரங்களுக்காக ஆரண்யம் பலியிடப்படுவதை அனுமதிக்காமல் இருப்பதே அதன் பொருள். இந்தியாவின் அமேசானைப் பாதுகாப்பது என்பது, அதை அமேசான் இந்தியாவிடமிருந்து பாதுகாப்பது என்பதாகும் — அதாவது, பெருநகர மக்களின் மீது தங்கள் பிடியை இறுக்கி, இயற்கை உலகைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் சூறையாட நம்மைத் தூண்டும் உலகளாவிய சந்தையின் கரங்களிலிருந்து பாதுகாப்பதாகும். ஸ்ரீவாஸ்தவா ஒரு எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் சிந்தனையாளர். அவர் 'பேராசையின் இலக்கணம்: ஒரு கொடிய சூழலியல் பற்றிய பிரதிபலிப்புகள்' (The Grammar of Greed: Reflections on a Fatal Ecology) என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.

கர்நாடகாவின் வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கட்லேகன் காடு, அடர்ந்த மரங்களின் கிளைகளால் மூடப்பட்டு பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பருவமழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், காட்டின் உட்பகுதிகளில் வெளிச்சம் குறைந்து கைவிளக்குகளின் உதவியுடன் மட்டுமே ஓடைகளைக் காண வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இத்தகைய அடர்ந்த காடுகளின் அழிவை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது குறித்து அஸீம் ஸ்ரீவாஸ்தவா எழுதிய கட்டுரையை எம். கோபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இயற்கையின் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.