PulseNews
தமிழகம்

காதல் ரசம் சொட்ட வைத்ததா? - ‘ஒன்ஸ் மோர்’ விமர்சனம்!

எப்பொழுதும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்கள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் இந்த முறை அதையெல்லாம் விட்டுவிட்டு சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் நடித்திருக்கிறார். இவரின் இந்த திடீர் கதாபாத்திர மாற்றம் எந்த அளவு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது? காதல் தோல்வியால் மிகுந்த விரக்தியில் இருக்கும் அர்ஜுன் தாஸ் எப்பொழுதும் இறுக்கமாகவே காணப்படுகிறார். அவரை தனது கல்லூரி கால ஜூனியரான அதிதி ஷங்கர் துரத்தி துரத்தி காதலிக்கிறார். அர்ஜுன் தாஸோ அந்த காதலுக்கு பாராமுகம் காட்டுகிறார். இருந்தும் அர்ஜுன் தாஸை விடாமல் துரத்தும் அதிதி பல்வேறு காதல் யுக்திகளை பயன்படுத்தி அர்ஜுன் தாஸை சம்மதிக்க வைத்துவிடுகிறார். பின்பு இருவருக்கும் உடனடியாக திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த நேரம் பார்த்து அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி திடீரென தோன்றுகிறார். அர்ஜுன் தாஸ் மனதுக்குள் குழப்பம் ஏற்பட இறுதியில் அர்ஜுன் தாஸ் அதிதி ஷங்கர் திருமணம் நடந்ததா, இல்லையா? அர்ஜுன் தாஸின் முன்னாள் காதல் என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை. இன்றைய சமூகத்தில் நடக்கும் மிகவும் ரிலவண்டான ஒரு காதல் கதை. கதையாக ஒரு நல்ல கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை இந்த காலத்திற்கு ஏற்ப கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். அதேபோல் ராதா மோகன், கௌதம் மேனன் படங்கள் பாணியில் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் அவர் ஒவ்வொரு காட்சியையும் காதல் ரசம் சொட்ட சொட்ட பார்ப்பவர்களை உருக செய்திருக்கிறார். அதற்கு ஏற்றார் போல் திரைக்கதையையும் அமைத்து ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு கப்பலில் பயணிப்பது போல் மெல்ல மெல்ல அழகாக அப்படியே கடந்து செல்ல வைக்கிறார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் காதலுடன் நகர்ந்து இரண்டாம் பாதி சற்றே வேகத்தடைகளுடன் ஆங்காங்கே அயர்ச்சியுடன் தொடர்ந்து இறுதி கட்டத்தில் நிறைவான ஒரு முடிவை நோக்கி சென்றுள்ளது. என்னதான் இது ஒரு முழுக்க முழுக்க காதல் படமாக காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்திருந்தாலும் படத்தில் சில பல இடங்களில் காதல் படங்களுக்கே உரித்தான எக்ஸ் ஃபேக்டர் மிஸ்ஸாகி இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக காதல் படங்கள் என்றாலே முக்கியமாக பாடல்கள் சிறப்பாக அமைந்தால் மட்டுமே அந்த படம் காலம் தாண்டி நிற்கும். அதேபோல் காதல் காட்சிகளும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அமைந்திருக்கும். இவை அனைத்தும் நன்றாக ரசிக்கப்படும். திரைக்கதையும் மிகவும் சுவாரஸ்யமாகவும் ரொமான்டிக்காகவும் இருக்கும் பட்சத்தில் அது இன்னமும் கூடுதல் சிறப்பாக அமைந்து பிளாக்பஸ்டர் ஆக மாறும். இது எல்லாம் இந்த திரைப்படத்தில் மிஸ்ஸாவது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. அதுவே படத்தை கரை சேர்க்க தட்டு தடுமாறி இருக்கிறது. குறிப்பாக முதல் காதல் தோல்விக்கான காரணம் இன்னமும் வலிமையாக இருந்திருக்கலாம். அர்ஜுன் தாஸ் முதல்முறையாக சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பு கொடுத்திருக்கிறார். கல்லூரி பருவ காதலி இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாட்தியை மட்டும் இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். அதிதி ஷங்கர் கலகலப்பான நாயகியாக வந்து கலங்கடிக்கிறார். முதல் பாதி முழுவதும் தன் தோள் மேல் சிங்கள ஆளாக சுமந்து கொண்டு படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் ஓவர் ஆக்டிங் போல் தோன்றினாலும் போகப்போக அந்த கதாபாத்திரம் நமக்குள் ஊடுருவி இந்த கதாபாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என நம்மையே கன்வின்ஸ் செய்யும் அளவிற்கு சிறப்பான பங்களிப்பு கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவரின் கதாபாத்திரமே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் சோனா ஒலிக்கல் கேரளத்து பெண்குட்டியாக மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சர்ச் ஃபாதராக வரும் ஜென்சன் திவாகர் மனதில் பதிகிறார். டாக்டராக வரும் தேவதர்ஷினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகனின் மாமாவாக வரும் பரிதாபங்கள் டிராவிட் நல்ல பங்களிப்பு கொடுத்திருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய இன்னொரு பிளஸ் என்னவென்றால் அது ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு பிரேமையும் மிக மிக அழகாக செதுக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். ஒவ்வொரு காட்சியும் கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் மிகவும் கூலாகவும் காதல் படங்களுக்கே உரித்தான ஒரு ஃபீலை தன் கேமரா மூலம் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக லைட்டிங் விஷயத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் கண்ணம்மா பாடல் மிகப்பெரிய ஹிட். அதேபோல் சில சோகப் பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காதல் படங்களுக்கு ஏற்றார் போல் அழகாக வருடும்படி கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். மலையாளத்தில் இவர் பெரிய இசையமைப்பாளராக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறார். இருந்தும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் இவர் குறிப்பாக காதல் படத்துக்கு ஒரு ஆல்பம் ஹிட்டோடு நுழைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காதல் படங்களுக்கு இசை மிக மிக முக்கியம் குறிப்பாக பாடல்கள் அதைவிட இன்னமும் முக்கியம். அதை மனதில் வைத்து இனிவரும் காலகட்டத்தில் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க வேண்டும். காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல் திரைக்கதை, பாடல்கள், அதை உருவாக்கிய விதம், ரொமான்ஸ் காட்சிகள், காதல் வசனம் போன்றவற்றிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் இப்படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸாகி இருப்பதை சரி செய்திருந்தால் மிகப்பெரிய ஹிட் ஆக மாறியிருக்கும். இருந்தும் கிளைமாக்ஸில் நாயகன் எடுக்கும் முடிவு படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறது. ஒன்ஸ்மோர் - கேட்க முயன்றிருக்கிறது!

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காதல் ரசம் சொட்ட வைத்ததா? - ‘ஒன்ஸ் மோர்’ விமர்சனம்!
PulseNews சுருக்கம்

வழக்கமாக அதிரடி மற்றும் கேங்ஸ்டர் வேடங்களில் நடித்து வந்த நடிகர் அர்ஜுன் தாஸ், இந்த முறை ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞனாக அவர் இந்தப் படத்தில் தோன்றியுள்ளார்.

அவரது கல்லூரி கால ஜூனியரான அதிதி ஷங்கர், அவரை காதலித்து துரத்தும் விதமாக கதைக்களம் அமைந்துள்ளது. அர்ஜுன் தாஸின் இந்த திடீர் கதாபாத்திர மாற்றம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பதே இப்படத்தின் மையமாக உள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu