“தனித் தொகுதி என்ற சொல் தண்டனை மாதிரி இருக்கு” - பேரவையில் தவெக எம்.எல்.ஏ சிந்து!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது குடியாத்தம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ சிந்து பேசும் போது, தனித் தொகுதி என்ற சொல்லை நீக்குமாறு கோரிக்கை வைத்தார். இது குறித்து அவர் பேசியதாவது, “எனக்கு வருகிற கடிதங்களில் கூட பிராக்கெட்டில் (Bracket) தனித் தொகுதி என்ற சொல் வருகிறது. தனி என்ற சொல் புழக்கத்தில் பிரிவினை அல்லது தண்டனை மாதிரி ஏதோ ஒரு வகையில் குறிக்கிறது. உதாரணத்திற்கு அந்த பெண்ணை தனியாக வையுங்கள், அவனை தனிமைப்படுத்துங்கள், அவனை சிறையில் வைங்க என்று சொல்வது போல் இருக்கிறது. இடஒதுக்கீடு என்பதற்கு நேரடியான அர்த்தம் ‘தனி’ கிடையாது. சட்டப்பிரிவு 332இல் பட்டியலின மக்களுக்கான சிறப்பு உரிமை வழங்கப்பட்டிருப்பதால், தனி என்ற சொல்லை நீக்கி சிறப்பு அல்லது உரிமை மாற்றிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தமிழில் ஒரு சொல் வெல்லு, ஒரு சொல் கொல்லும்” என்று கோரிக்கை வைத்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “எம்.எல்.ஏ சொன்ன அந்த யோசனை கூட முதல்வரின் கவனத்துக்கும் அரசினுடைய கவனத்துக்கும் கொண்டு செல்லலாம், நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்ட் 27, 2026) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய குடியாத்தம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சிந்து, 'தனித் தொகுதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தண்டனை வழங்குவது போல இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தச் சொற்பிரயோகம் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'தனித் தொகுதி' என்ற வார்த்தையை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.