செப்.1 முதல் நோ ஷூட்டிங், நோ ரிலீஸ்... ; தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அதிரடி முடிவு!
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் புதிய படங்கள் வெளியானால் அதிலிருந்து 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது அதிரடியான முடிவை எடுத்துள்ளனர். அதாவது செப்டம்பர் 1 முதல் தங்களது கோரிக்கையை ஏற்று கடிதம் கொடுத்தால் மட்டுமே படங்களை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவிற்கு தற்போது தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இரு சங்கங்களின் கூட்டம் இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தியைரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு குறித்து பேசப்பட்டது. அவர்களின் முடிவு, தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடைமுறையில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறையை தன்னிச்சையாக புகுத்துவது கண்டிக்கதக்க ஒன்றாகும். இவ்வாறான முடிவினை எடுக்கும்போது தயாரிப்பாளர்களை அழைத்து பேசி யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவண்ணம் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆனால், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அப்படி தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை தெரிவிக்கிறோம். மேலும், வருடத்திற்கு 250-திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவு கூட வராமல், ரூ.700 கோடிக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு பெரும் இழப்பினை சந்தித்தும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே, விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினை கண்டித்து வருகிற (1.9.2026) செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழ்த் திரையுலகில் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மேற்படி பிரச்சனையை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் எடுத்துரைத்து தமிழ்நாடு அரசு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை ஏற்கும் தயாரிப்பாளர்கள் வழங்கும் கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் படங்களை திரையிடப் போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இந்த புதிய நிபந்தனைக்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இதனால் படப்பிடிப்பு மற்றும் புதிய படங்களின் வெளியீடு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.