மதுரை- செங்கோட்டை இடையே 2 புதிய ரயில் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்: 70 கிராமங்கள் ஹேப்பி
மதுரை–செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய இடங்களில் இரண்டு புதிய ரயில் நிலையங்கள் அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவர் அனந்தன் அய்யாசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தி! மதுரை–செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரத்தில் இரண்டு புதிய ரயில் நிலையங்கள் அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது! இக்கோரிக்கையை ஏற்கனவே 2025 மார்ச் 22-ல் மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் அளித்திருந்தேன். அதனை நினைவூட்டி, கடந்த ஆகஸ்ட் 11 அன்று மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மீண்டும் நேரில் சந்தித்து, இரு ரயில் நிலையங்களையும் விரைவாக அமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி மனு அளித்திருந்தேன். தற்போது, கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய இரு புதிய ரயில் நிலையங்களின் கட்டுமானத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! இந்த இரு நிலையங்களும் பயன்பாட்டுக்கு வரும்போது சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட 70-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைப்பதுடன், மதுரை–செங்கோட்டை வழித்தடத்தின் ரயில் இயக்கத் திறனும் மேம்படும். மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு செவிசாய்த்து ஒப்புதல் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் -க்கும் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றி! மக்களின் தேவையை வலியுறுத்துவோம்... வளர்ச்சியை வென்றெடுப்போம்!" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மதுரை–செங்கோட்டை ரயில் பாதையில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய இரு இடங்களில் புதிய ரயில் நிலையங்களை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராம மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்திய பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவர் அனந்தன் அய்யாசாமி, இது குறித்து சமூக வலைத்தளத்தில் தகவலைப் பகிர்ந்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் எழுந்துள்ளது.