”தமிழக மக்கள் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்” - அமைச்சர் அருண்ராஜ்
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனையொட்டி, ஆளும் தவெக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பிக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அமைச்சர் அருண்ராஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ”தொகுதி மறுவரையறைக்கான மசோதா என்பது மாநில உரிமைகள் சார்ந்தது. எனவே, இந்த மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிய முக்கிய முடிவெடுக்க, இந்த அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டம் கூட்டப்படுகிறது. கடந்த காலங்களில் இது சம்பந்தமாக திமுகவே அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் தவெக வும் பங்கெடுத்துள்ளது. இந்த சமயத்தில், இது குறித்த முக்கிய முடிவெடுக்கும் வகையில் முதல்வர் சார்பில் இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரைத் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்றால் மாநிலம் சார்ந்த விவகாரங்களில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது என்பது, அவர்களின் நிலைப்பாட்டைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்று தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேகதாது விவகாரத்தைத் திசை திருப்பவே இந்த அனைத்து கட்சி எம்.பிக்களின் கூட்டம் கூட்டப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ”இதில் திசை திருப்பும் தேவை என்ன இருக்கிறது? அரசின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கிறோம். அதற்காகத் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். அப்படி இருக்கும் போது ஏன் இந்த விவகாரத்தைத் திசை திருப்பப் போகிறோம்? இந்த இரண்டு விவகாரங்களுமே நமது மாநில நலன் சார்ந்த விஷயம் தான். அதனால், இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண்கள் போன்றது. இதில், ஒன்றை முக்கியத்துவமானதாகவும் மற்றொன்றைக் குறைவாகவும் மதிப்பிட முடியாது” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க, தமிழக அரசு அனைத்துக் கட்சி எம்.பிக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், திமுக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், மாநில உரிமைகள் தொடர்பான இந்த முக்கியமான முடிவை எடுக்கவே கூட்டம் கூட்டப்படுவதாகத் தெரிவித்தார். கூட்டத்தைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை தமிழக மக்கள் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேகதாது விவகாரத்தைத் திசை திருப்பவே இக்கூட்டம் கூட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், மாநில நலன் சார்ந்த இரு விவகாரங்களுமே தங்களுக்கு முக்கியமானது என்று கூறினார்.