ரத்தக் கசிவு காரணமாக மரணம்: கோவை கல்லூரி மாணவன் கொலையில் ஷாக் தகவல்
கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கென்னடி. இவருடைய மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். அந்த அறையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமன் (19) உள்பட 4 பேர் தங்கி இருந்தனர். இந்நிலையில், அமுதன், ஸ்ரீமன் ஆகியோர் கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறைக்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு செல்ல மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதே கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் அந்த 2 பேரையும் மிரட்டி தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதையடுத்து, நீங்கள் தானே நேற்று எங்கள் அறைக்கு வந்து தாக்கிவிட்டு செல்போனை பறித்தது என்று கேட்டனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தி, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் அமுதனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மரணம் இதையடுத்து 2 பேர், அமுதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி விடுதியில் அவரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரை கத்தி, அரிவாளை மாற்றி பிடித்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமுதன் மயங்கி கிடந்தார். மதியம் 1.30 மணிக்கு சாப்பிட வந்த மாணவர்கள் அறையில் அமுதன் அசைவற்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அமுதனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவர்கள் ஆராமுதன், அரவிந்த், சிவரோகித், மணி பாலு, 17 வயது சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதனின் நண்பர்கள் பலர் ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டியில் அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்களின் அறைக்கு அமுதன் அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு 3-ம் ஆண்டு படிக்கும் 9 மாணவர்கள் கடந்த 9-ந் தேதி காலை முகமூடி அணிந்து சென்று உள்ளனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன்களை பறித்துள்ளனர். அவர்களுடன் அமுதனும் சென்றதாக தெரிகிறது. அப்போது, அமுதன் முகத்தில் அணிந்து இருந்த முகமூடி விலகியதால் அவரை மற்ற மாணவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதன் காரணமாக அமுதனை தாக்கி உள்ளனர். அதில் அமுதன் உயிரிழந்து உள்ளார். மேலும் 4-ம் ஆண்டு மாணவர்களிடம் செல்போன்களை பறித்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டு - கல்லூரி நிர்வாகம் விளக்கம் இதனிடையே, கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டினர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் பேசிய நிர்வாகிகள், "சமையலரை தாக்கிய விவகாரத்தில் அமுதன் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்; ஆகஸ்ட் 11ஆம் தேதி கல்லூரிக்கு வருமாறு சொல்லி இருந்தநிலையில் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. எங்கள் கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் இல்லை; அமுதன் கொலை தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பட்டியலை காவல் துறையினர் வாங்கி இருக்கின்றனர்" விளக்கம் அளித்தனர். மருத்துவ அறிக்கை வெளியீடு இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு உடலில் காயங்களுடன் தூங்கச் சென்ற அமுதனுக்கு, தலையில் ஏற்பட்ட காயத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டது; மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த நிலையில், சக மாணவர்களான ஸ்ரீமன் உள்ளிட்டோருடன் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள நண்பர்களின் அறைக்குச் சென்று தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கல்லூரிக்குச் சென்ற அமுதன், ரத்தக் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.