நல்லகண்ணு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனம்: சமூக வலைதளங்களில் கொந்தளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள்
எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் நல்லகண்ணு குறித்து எழுதிய கருத்துகள் தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் சூழலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. நல்லகண்ணுவுக்கு இலக்கியப் பரிச்சயம் இல்லை என்றும், அவர் சசிகலாவைத் தலைமை ஏற்க அழைத்தார் என்றும் ஜெயமோகன் சாடியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் கவிதா பாரதி மற்றும் தக்கலை ஹாமீம் முஸ்தபா உள்ளிட்ட பலர் ஜெயமோகனின் வரலாற்றுப் புரிதலையும் வன்மத்தையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். தமிழ் இலக்கிய உலகில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என 50 ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். தொடர்ந்து தீவிரமாக எழுதி வரும் எழுத்தாளர் ஜெயமோகன், அவ்வப்போது அவர் எழுதும், பேசும் கருத்துகள் சர்ச்சையாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச் சாலை என்ற நூல் குறித்து அவருக்கு ஒரு வாசகர் எழுதிய கடிதத்தில், “நீங்கள் ஏன் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பற்றி எழுதுவதில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார். வாசகரின் இந்த கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய தளத்தில் பதிலளித்து எழுதியிருப்பதாவது: “முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை நல்லக்கண்ணு அவர்களை நாகர்கோயிலில் சந்தித்தேன். கேரளக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியமான ஆளுமையும், அப்போது கேரளத்தில் அமைச்சராகவும் இருந்த ஒருவர் அவருக்கு என்னை ‘தமிழ் எழுத்தாளர், ஜெயமோகன்’ என்று அறிமுகம் செய்தார். ஆனால் நல்லகண்ணுவுக்கோ அவருடன் இருந்த பத்துப் பதினைந்து தமிழகக் கம்யூனிஸ்டுகளுக்கோ என்னைத் தெரிந்திருக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு எழுத்தாளர் என்றால் என்ன என்றுகூட தெரிந்திருக்கவில்லை என்று தோன்றியது. எழுத்தாளர் என்றால் என்னை ஏதோ பத்திரிகை நிருபர் என்று புரிந்துகொண்டார். அவருடன் இருந்தவர் என் நிருபருக்கான அடையாள அட்டையைக் கேட்டார். நான் புன்னகையுடன் அங்கிருந்து விலகினேன். மூன்று நிமிடங்களில் அச்சந்திப்பு முடிந்தது. நல்லகண்ணுவோ அவரைப்போன்றவர்களோ எப்போதேனும் ஏதேனும் எழுத்தாளர் பற்றி தங்கள் உரையாடல்களில் எதையாவது சொல்லியிருக்கிறார்களா என்று எண்ணிப்பாருங்கள். நான் அறிந்தவர்களைப் பற்றியே எழுதமுடியும். அறிந்தவை உண்மை என்றும் எனக்கு உறுதிவேண்டும். தமிழகத்தில் அரசியல்தலைவர்கள் பற்றி பேசப்படுபவை பெரும்பாலும் பிரச்சார நோக்குடன் உருவாக்கப்படும் தொன்மங்கள் மட்டுமே. அதிலும் ஒருவர் மறைந்தபின் அவரைப்பற்றி புகழ்ந்துகொண்டாடி ஒற்றைப்படையான தொன்மம் மட்டுமே நிலைநிறுத்தப்படும். அதை மறுக்கும் உரிமை எவருக்குமில்லை, மறுத்தால் அடிவிழும். எந்த எழுத்தாளனுக்கும் அரசியல்தலைவர் பற்றி அவன் அடைந்த சொந்த மனச் சித்திரத்தை முன்வைக்கும் சுதந்திரத்தை தமிழக அரசியல்சூழல் அனுமதிப்பதில்லை. ஆகவே எவரும் சொல்வதில்லை. நல்லகண்ணுவின் தியாகவரலாறு பற்றி கட்சிக்காரர்கள் ஒரு சித்திரத்தை உருவாக்குவார்கள். அதை அனைவரும் ஏற்றாகவேண்டும். அவர் சசிகலா தலைமைக்கு வரவேண்டும் என்று வீடுதேடிச் சென்று கைகூப்பி நின்று மன்றாடியவர் என்ற உண்மையோ, நாளிதழில் வெளிவந்த அந்தப் புகழ்பெற்ற புகைப்படம் பற்றிய ஞாபகமோ ஒருவருக்கு வந்தால் அவரை கட்சிக்காரர்கள் கீழ்த்தரமாக வசைபாடுவார்கள். அந்த அரசியல் சழக்குகளில் எழுத்தாளனுக்கு என்ன வேலை? இங்கே அரசியலில் இருப்பது பழங்கால நிலப்பிரபுத்துவ மனநிலைதான். ஜனநாயகம் சார்ந்த அடிப்படைகள் இன்னும் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகவில்லை. தலைமை வழிபாடுதான் இங்கே அரசியல். எல்லா தரப்பிலும் அப்படித்தான். வெறிகொண்ட பக்தர்கள், அவர்களின் உக்கிரமான நம்பிக்கைகள், அதுதான் எங்கும் ஒலிக்கின்றது. எழுத்தாளர்கள் என்பவர்களே அந்த அடிமைக்கூட்டத்தில் அங்கத்தினர் அட்டைக்காக முண்டியடிக்கிறார்கள்.” என்று எழுதியுள்ளார். ஜெயமோகன் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு குறித்த இந்த கருத்துக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக எழுத்தாளர், நடிகர் கவிதா பாரதி தனது முகநூல் பக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனைக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார். அதில், “அந்த ஊளாம்பாறை ஊளவாயர் மீண்டும் வாயால் கழிந்திருக்கிறார்.. "நல்லகண்ணுவுக்கு இலக்கியப் பரிச்சயமே இல்லை, ஒரு நிகழ்வில் எழுத்தாளர் என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள், அவருக்கு என்னை யாரென்றே தெரியவில்லை.. அவருக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.."- இது அவர் வாய் வழியே வழிந்த இலக்கியபேதி.. பேராசான் நா.வா.வோடும், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியத்தோடும் தொடர்ந்து விவாதிக்குமளவுக்கு சங்க இலக்கியம் தொட்டு நவீன இலக்கியம் வரைக்கும் அறிந்தவர் தோழர்.நல்லகண்ணு.. இப்போதிருக்கிற கடந்த தலைமுறையின் ஏறக்குறைய எல்லா இலக்கியவாதிகளுக்கும் தோழரின் இலக்கியப்பரிச்சயம் தெரியும் தோழரைப் பார்க்கச் சென்றவர்கள் அவரது புத்தக அலமாரியின் கனத்தை அறிவார்கள்.. அவர் நிறைகுடம் என்பதால் அரைவேக்காட்டுத்தனமாக உளறுவதில்லை.. உங்களுடன் உரையாட விரும்பாமல் அறியாததுபோல் இருந்திருக்கலாம்.. அவர் யாரோடும் அப்படி விலகியிருக்கமாட்டார்.. ஒருவேளை உண்மையாகவே உங்களிடம் அப்படி நடந்திருந்தால் அது உங்கள் மீதான அவரது விமர்சனம்.. காரணம் பின்தொடரும் நிழலின் குரல் படித்துவிட்டு, இது ஆர்.எஸ்.எஸ் விஷம்தோய்த்து எழுதப்பட்ட நாவல் என்று நல்லகண்ணு தோழர் சொன்னதை நானறிவேன்.. இந்த விஷக்கிருமியிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று உங்களிடமிருந்து அருவருத்து நின்றதே அவரது அரசியல் பார்வையோடு கூடிய இலக்கிய அறிவின் சாட்சி.. இதைவிட இன்னொரு பொய்யையும் சொல்லியிருக்கிறது அந்த இலக்கிய எச்.ராஜா," ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவை அ.தி.மு.க.வின் தலைமையேற்கச் சொல்லி மன்றாடினாராம் தோழர்.நல்லகண்ணு.. ஒரு மனிதர் மறைந்தபிறகு இதுபோன்ற புளித்த பேச்சைப் பேசும் இந்தப்பிணந்தின்னி எப்போதுதான் இதை நிறுத்துவாரென்று தெரியவில்லை.. குழந்தை பிறந்தவுடன் நாக்கில் சேனைத்தண்ணி தொட்டு வைப்பார்கள்.. இந்த மனிதருக்கு மட்டும் யாரோ நாப்பீயைத் தொட்டு வைத்திருக்கிறார்கள்.. ஊசவாடையோடு ஊளையிட்டுக்கொண்டே இருக்கிறது.. பின்னூட்டத்தில் அந்தக்கருமத்தைப் போட்டிருக்கிறேன்.. முடிஞ்சா மூக்கைப் புடிச்சுட்டுப் படிச்சிருங்க” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். நல்லக்கண்ணு குறித்து உண்மைக்கு புறம்பாக எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு தக்கலை ஹாமீம் முஸ்தபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயமோகனுக்கு கண்டனங்கள், கம்யூனிசம் குறித்தும் கம்யூனிஸ்ட் ஆளுமைகள் குறித்தும்பேசாமலும் எழுதாமலும் இருப்பதே ஜெய மோகன் அந்த ஆளுமைகளுக்குக் கொடுக்கும் குறைந்த பட்ச மரியாதையாக இருக்கும். . ஜெயமோகன் தன்னுடைய வலைதளத்தில் (2026,ஆகஸ்டு - 5) கேள்விக் கான பதிலாக ஒரு குறிப் பினை தந்திருக்கிறார். ‘தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீங்கள் ஏன் எழுதுவதில்லை’ இதுதான் ஜெயமோகனிடம் கேட்கப்பட்ட கேள்வியின் சாரம். இந்தக் கேள்வி அவராக எழுப்பிக்கொண்ட கேள்வி யாகக் கூட இருக்கலாம். இதற்கு பதிலளிக்க முற்பட்ட ஜெயமோகன் தன்னை பற்றிய வழக்கமான புகழுரை களை முன்னுரையாக வழங்கிவிட்டு தமிழ்நாட்டுக்குள் வந்தவர் தோழர் ஆர் .நல்லகண்ணுவிடம் வந்து நிலை கொள்கிறார் . “நல்லகண்ணுவுக்கு எழுத்தாளர் என்றால் என்ன என்று கூட தெரிந்திருக்கவில்லை என்று தோன்றியது. எழுத் தாளர் என்றால் என்னை ஏதோ பத்திரிகை நிருபர் என்று புரிந்துகொண்டார்.” இது தோழர் நல்லகண்ணு குறித்த ஜெயமோகனின் மதிப்பீடு. கம்யூனிசம், கம்யூனிஸ்ட்கள் குறித்து எவ்வித அடிப் படை புரிதலோ அறிவோ ஜெயமோகனுக்கு இல்லை என்பதை அவரின் ‘பின் தொடரும் நிழலின் குரல்' நாவலை வாசித்தாலே புரிந்துவிடும்’. P&T தொழிற் சங்கத்திற்கும் ரப்பர் தோட்டத் தொழிலாளர் சங்கத் திற்கும் இடையிலான வேறுபாடுகள்கூட அவருக்குத் தெரியவில்லை என்பதனால் ஏற்பட்ட அபத்தம்தான் அந்த நாவல். கம்யூனிசத்தின் மீதான .கம்யூனிஸ்ட்கள் மீது ஜெயமோகனுக்கு இருக்கும் அதீத வன்மம் தான் அந்த நாவல். ஜெயமோகன் பணிபுரிந்த அதே அரசுத்துறை நிறுவ னத்தில் பணியாற்றிய தோழர் டி.ஞானையா போன்ற ஆளுமைகளை அவர் நெருங்கி இருந்தாலே கம்யூனிசம் குறித்தும். கம்யூனிஸ்ட்கள் குறித்தும். எழுத்தாளர்கள் அவர்தம் எழுத்துகள் குறித்தும் கம்யூனிஸ்ட் தலை மைகள் கொண்டிருந்த மதிப்புகள் குறித்தும் குறைந்த பட்ச புரிதலாவதுஜெயமோகனுக்கு ஏற்பட்டிருக்கும் . ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுடன் இணைந்த வரலாறு தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு. அவற் றோடு இணைந்த வரலாறுதான் தமிழில் எழுத்து இயக்கத்தின் வரலாறு .எதார்த்தவாத இலக்கியம் அதன் அடுத்த நகர்வில் சோசலிச எதார்த்தவாதம் என்னும் சொல்லாடல் எல்லாம் கம்யூனச இலக்கியத்தின் அல்லது கம்யூனிஸ்ட்கள் பழகிவந்த நீண்ட எழுத்து மரபின் பங்களிப்புகள் இந்தியாவின் தொன்மக்கதைகளை இன்றுள்ள இந்துத்துவ அரசியல் தேவைக்காக ஜெயமோகன் மீள எழுதிக்குவிக்கும் நிலையில் அம்பதுகளில் அறுபது களில் பாரதியை ,கம்பனை , தமிழின் பாரிய இலக்கி யங்களை மனித மேன்மைகளின் நோக்கில் வாசித்த மரபொன்று கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு . தலைமறைவு இலக்கியங்கள் என்னும் இலக்கிய வகை மை குறித்து பேசுகிறோம் .காலனிய ஆட்சியில் மேற்கு நாடுகளில் இருந்து கம்யூனிஸ எழுத்துக்களை .எழுதப் பட்ட நூல்களை தமிழ் நிலப்பரப்புக்குள் கொண்டு வந்து சேர்த்த இன்னொருவகை தலைமறைவு இலக்கிய வரலாறில் இருந்துதான் கம்யூனிஸ்ட்களின் இலக்கிய எழுத்து வரலாறு ஆரம்பமாகிறது.சிங்காரவேலர் தொடங்கி இன்று உருவாகி வந்திருக்கும் முனைவர் டெரன்ஸ் சாமுவேல் வரை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு செழிப்பான மரபு அவர்களுக்கு இருக்கிறது . மக்களை நோக்கி தோளில் புத்தகங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக , தெருத்தெருவாக அலைந்து திரிந்த ஒரு நெடிய மரபின் வலுவான கண்ணி தோழர் நல்லக்கண்ணு. விவசாய இயக்கம். கட்சிப்பணி இவற்றோடு எழுத்தையும் வாசிப்பையும் எழுத்தாளர் களையும் , ஆய்வாளர்களையும் நேசித்த அவர்களோடு உரையாடிய தோழமை அவர்.பெரியவர் /சிறியவர் என்னும் பேதம் எல்லாம் அவரிடம் இல்லை அறிமுக நிலையில் எழுதும் எழுத்தாளனிடம் செலுத்தும் அன்பிலும் மரியாதையிலும் ஒரு சிறிதும் உயர்விருக் காது மூத்த எழுத்தாளரிடம் அவர் செலுத்தும் அன்பிலும் மரியாதையிலும். பேராசிரியர் நா.வானமாமலையின் முன்முயற்சியில் உருவான நெல்லை ஆய்வுக்குழுவின் அரங்குகளில் தொடர்ந்து பங்கேற்பவராக . தோழர் நல்லக்கண்ணு இருந்தார் . உங்களைப்போல் நுனிப்புல் மேய்ந்து அபிப்பிராயம் சொல்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள். ஒன்றில் ஆழ்ந்து படிப்பார்கள் அல்லது படித்தவர்கள் சொல்ல காது கொடுப்பார்கள் . எழுத்தாளர்கள் மீதும் அவர்களின் எழுத்தின் மீதும் கம்யூனிஸ்ட்கள் கொண்டிருக்கும் மதிப்பிலும் மரியாதையிலும் இருந்துதான் பொன்னீலன் களால் புதியதரிசனங்கள் என்றொரு புதினத்தை உருவாக்க முடிந்தது. இதுவெல்லாம் ஜெயமோகன் உங்களால் ஒருபோதும் உள்வாங்கிக் கொள்ள முடியாது. நீங்கள் குரு சிஷ்ய பரம்பரையை ஆராதிப்பவர்கள் . கம்யூனிஸ்ட்கள் தோழர் பரம்பரைக்காரர்கள். புதுக்கவிதை என்னும் வடிவம் அறிமுகப்பட்டபோது கம்யூனிஸ்ட் தலைமை களுக்கு அது குறித்து எதிர் புரிதலே இருந்தது. அவர்கள் அந்தப் புரிதலை மீரா போன்ற படைப்பாளிகள் வழியாகவே மாற்றிக் கொண்டார்கள் . இங்கே இது ஒரு ஜனநாயகப் பண்பு கொண்ட எழுத்துச் செயல்பாடு எழுபதுகளின் மத்தியில் கொண்டுவரப்பட்ட எமர் ஜென்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. கட்சியின் அந்த நிலைபாடு குறித்த விமர்சனம்தான் அந்த நாவல். இத்தகையதொரு நெருக்கம் கம்யூ னிஸ்ட் கட்சியில் தலைமைக்கும் படைப்பாளிகளுக்கும் உண்டு. தலித்தியம், பெண்ணியம் , புலம்பெயர் இலக்கியம் என்றெல்லாம் தமிழ் இலக்கியப் படைப்பு வெளி ஏற்பட்டபோது அந்த இலக்கியங்கள் அவற்றை எழுதிய படைப்பளிகள் குறித்த நேர்மறையான அணுகு முறை யே தோழர்களிடம் இருந்தது. இத்தனைக்கும் கட்சிகள் சார்ந்து இந்தப் போக்குகளில் பெரிய நிலைபாடு மாற்றங்கள் கூட அப்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டி ருக்கவில்லை.அண்ணல் அம்பேத்கர் எழுத்துக் களை தமிழில் கொண்டு சேர்த்ததில் சென்ற முப்பது ஆண்டு களில் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது . சென்ற நூற்றாண்டின் பின் ஐம்பதுகளை ஒட்டி உருவான இலக்கியப் போக்குகளில் முற்போக்கு /பிற் போக்கு என்னும் சொல்லாடல் தமிழில் உண்டு . ஓர் ஆழமான படைப்பிலக்கியம் தொழிற்படும் சூழல் ஒன்றிலிருந்துதான் இதுபோன்ற சொல்லாடல் ஒன்று உருவாக முடியும் . கம்யூனிஸ்ட் தலைவர்கள் தாங்கள் அறியாதவற்றை அறிந்துகொள்ள முயல் வார்கள் .இந்தப் போக்கு இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் உண்டு. சென்ற முப்பதாண்டுகளில் குறிப்பாக சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவாகி வந்துள்ள தத்துவப்போக்குகள் குறித்து அறிந்துகொள்ள தலைமைகள் மேற்கொண்ட முயற்சிகள் உங்களால் எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாதது .பின்னை என்னும் முன்னொட்டுடன் இங்கே பேசப்பட்டவைகுறித்து அவர்கள் அறிந்து கொள்ள முயன்றார்கள் . அந்தத் துறை சார்ந்தவர்களை பேசவைத்து அதனை உள்வாங்கிக் கொண்டார்கள் . உங்களை இந்துத்துவ அமைப்புகளுடன் எல்லாம் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் .அது உண்மையா பொய்யா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது .ஆனால் முஸ்லிம் வெறுப்பு, கிறித்தவ வெறுப்பு, கம்யூனிச வெறுப்பு என்னும் அந்த அமைப்புகளின் அஜெண் டாவை நீங்கள் அப்படியே பின்பற்றுகிறீர்கள் உங்கள் எழுத்திலும் பேச்சிலும் . உங்களின் வாழ்வனுபவமும் வாசிப்பு அனுபவமும் தோழர் நல்லகண்ணு வின் அனுபவங்களின் முன் ஒன்று மில்லை .ஒருவரை பற்றி மதிப்பீடு செய்வதற்கு முன் குறைந்த பட்சம் அவரை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் ஜெயமோகன்” என்று தக்கலை ஹாமீம் முஸ்தபா பதிவிட்டுள்ளார்.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் வெளியிட்ட கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நல்லகண்ணுவுக்கு இலக்கியத் தொடர்பு இல்லை என்றும், சசிகலாவைத் தலைவராக வருமாறு அவர் அழைத்தார் என்றும் ஜெயமோகன் விமர்சித்திருந்தார்.
ஜெயமோகனின் இந்தக் கருத்துகளுக்கு எதிராக நடிகர் கவிதா பாரதி மற்றும் தக்கலை ஹமீம் முஸ்தபா உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயமோகனின் வரலாற்றுப் புரிதல் மற்றும் அவர் வெளிப்படுத்திய வன்மத்தை விமர்சித்து, வாசகர்களும் எழுத்தாளர்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.