“விமான நிலையமும் வேண்டும், விவசாயமும் வேண்டும்” - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்போவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பரந்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கிடையில், பரந்தூரில் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால் கையகப்படுத்த நிலங்களின் விவசாயிகள் கவலையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (26-08-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த திட்டம் கைவிட்டது தான் முதல் படி, இன்னும் ஒவ்வொரு படியாக ஏறி போக வேண்டும். ஒரு விவசாயியிடம் இருந்து நிலத்தை பிடுங்குவது ஒரு குழந்தையிடம் இருந்து தாயை பிடுங்குவதற்கு சமம். தாய்க்கு வேதனை இருந்தால் இன்னொரு குழந்தையை எடுத்துவிடுவார். ஆனால் ஒரு குழந்தை அம்மாவை தவறவிட்டால் எப்படி இருக்கும்? அது மாதிரி ஒரு விவசாயியிடம் இருந்து நிலத்தை பிடுங்குவது. இந்த உலகத்தில் நடந்த அனைத்து பெரிய வன்முறைகளும் ஆரம்பமான முதல் வார்த்தை வளர்ச்சி தான். நமக்கு விமான நிலையமும் வேண்டும், விவசாய நிலமும் வேண்டும். அதற்கான இந்த பயணத்தில் முதல்வர் சொன்னதை செய்தார், இது முதல்படி தான். அந்த இடத்தில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி இருக்கிற தொல்லியல் பொக்கிஷம் கம்பன் கால்வாய் இருக்கிறது. அங்கிருந்துதான் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் வரும். இது தொல்லியல் மட்டும் கிடையாது, இது சுற்றுச்சூழல் சங்கிலி. இவ்வளவையும் தாண்டி ஆயிரம் நாட்களாக அந்த மக்கள் போராடி இருக்கிறார்கள். ஆதார் கார்டு காட்டாமல் யாரும் உள்ளே போக முடியாது, வெளியே வர முடியாது அந்த மாதிரி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழல் இப்போது மாறி இருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்வது என சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து சுமூக முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை பரந்தூர் பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் வரவேற்றுள்ளனர். விமான நிலையமும் அவசியம், அதேநேரம் விவசாயமும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.