PulseNews
தமிழகம்

எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயர்’ ஏன் கூடாது? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

எழுதியவர்: வினித் பல்லா எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயர்’ முறையை கொண்டுவரக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த சமூகங்கள் எதிர்கொண்ட வரலாற்று ரீதியான பாகுபாடுகளை வெறும் பொருளாதார பின்தங்கிய நிலையுடன் ஒப்பிட முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. என்ன பிரச்சினை? எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் வசதியான நிலையில் உள்ள குடும்பங்களே தொடர்ந்து இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதாகவும், இதனால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு கிடைப்பது பாதிக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட வருமான வரம்புக்கு மேல் உள்ள குடும்பங்களை இடஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து விலக்க வேண்டும் என்பதே ‘க்ரீமி லேயர்’ முறையின் அடிப்படையான கோரிக்கையாகும். இதற்காக, 2024 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மனுதாரர் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளிலும் க்ரீமி லேயர் கொள்கையைப் பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். ஆங்கிலத்தில் வாசிக்க எஸ்.சி., எஸ்.டி. - ஓ.பி.சி. இடையே என்ன வித்தியாசம்? இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பின்தங்கிய நிலையும், ஓபிசி பிரிவினரின் பின்தங்கிய நிலையும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளது. எஸ்சி சமூகத்தினர் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட தீண்டாமை உள்ளிட்ட வரலாற்று ரீதியான சமூக பாகுபாடுகளை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், எஸ்டி சமூகத்தினர் அவர்களின் தனித்துவமான கலாசாரம், புவியியல் ரீதியான தனிமை மற்றும் பின்தங்கிய நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால், ஓபிசி பிரிவினரின் பின்தங்கிய நிலையை நிர்ணயிக்க சமூக, கல்வி மற்றும் பொருளாதார காரணிகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன என்று மத்திய அரசு கூறியுள்ளது. ‘பொருளாதார நிலை மட்டும் காரணமல்ல’ ”எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கம் வெறும் பொருளாதார உதவி வழங்குவது அல்ல. வரலாற்று ரீதியாக ஏற்பட்ட பாகுபாட்டை நீக்கி, சமூக சமத்துவம் மற்றும் சமூக நீதியை ஏற்படுத்துவதும், பொது வாழ்க்கையில் அனைவருக்கும் சமமான பங்கேற்பை உறுதி செய்வதுமே இதன் நோக்கம். மேலும், இந்த சமூகங்களுக்கு எதிரான பாகுபாடு அவர்களின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டது அல்ல” என்றும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய மத்திய அரசு 1992-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திரா சாவ்னி வழக்குத் தீர்ப்பை மத்திய அரசு மேற்கோள் காட்டியுள்ளது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ஆதரவளித்த இந்தத் தீர்ப்பில்தான் ஓ.பி.சி. பிரிவினருக்கான ‘க்ரீமி லேயர்’ முறை முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அந்த தீர்ப்பில் க்ரீமி லேயர் கொள்கை ஓ.பி.சி. பிரிவினருக்கே பொருந்தும் என்றும், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு அது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2008-ம் ஆண்டு அசோக் குமார் தாக்கூர் வழக்கிலும், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு க்ரீமி லேயர் கொள்கை பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 2005-ம் ஆண்டு ஈ.வி. சின்னையா வழக்கில், எதிர்காலத்தில் எஸ்.சி. பிரிவில் க்ரீமி லேயரை நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இடஒதுக்கீட்டு கொள்கையை நீதிமன்றம் மாற்ற முடியுமா? எஸ்.சி, எஸ்.டி. பட்டியலில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் நீக்கப்பட வேண்டும் என்பதற்கான அதிகாரம் அரசியல் சாசனத்தின் 341 மற்றும் 342-வது பிரிவுகளின்படி நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ”இந்த பட்டியல்களை மாநில அரசுகள், நீதிமன்றங்கள் அல்லது வேறு எந்த அமைப்பும் தன்னிச்சையாக மாற்ற முடியாது. மேலும், இடஒதுக்கீட்டில் புதிய விதிமுறைகளை உருவாக்குவது என்பது வெறும் நீதிமன்ற உத்தரவால் செய்யக்கூடிய விஷயம் அல்ல. அதற்கு விரிவான ஆய்வு, புள்ளிவிவரங்கள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கை தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும், மனுதாரர் கோரியுள்ள நடவடிக்கை தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அரசியல் சாசனத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. இதனால், எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயர்’ முறையை அறிமுகப்படுத்தக் கோரும் மனுவை தவறான புரிதலின் அடிப்படையிலானது என்றும், தகுதியற்றது என்றும் கூறி தள்ளுபடி செய்ய வேண்டும்” என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயர்’ ஏன் கூடாது? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
PulseNews சுருக்கம்

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயர்’ முறையைக் கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு, வரலாற்று ரீதியான பாகுபாடுகளை வெறும் பொருளாதார அளவுகோல்களுடன் ஒப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. 1992-ம் ஆண்டின் இந்திரா சாவ்னி மற்றும் 2008-ம் ஆண்டின் அசோக் குமார் தாக்கூர் உள்ளிட்ட பழைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, க்ரீமி லேயர் கொள்கை ஓ.பி.சி. பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் என்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரின் சமூகப் பின்தங்கிய நிலைக்கும், ஓ.பி.சி. பிரிவினரின் பொருளாதார அடிப்படையிலான பின்தங்கிய நிலைக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு என்பது சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக வழங்கப்படுவதாகும். அரசியல் சாசனத்தின் 341 மற்றும் 342-வது பிரிவுகளின்படி, இடஒதுக்கீடு தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்றும், எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu