மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 படிவம்; மாற்றுத்திறனாளிகளுக்கு 21 பிரிவுகள் சேர்க்க அமைப்புகள் வலியுறுத்தல்
எழுதியவர்: நிகில் கனேகர் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக 9 வகையான குறைபாடுகள் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: லடாக், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் சுயக் கணக்கெடுப்பு நடைமுறையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட படிவங்களின் அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளது. பனிப்பொழிவு பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து, அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான சுயக் கணக்கெடுப்பு வசதி ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான 2016-ம் ஆண்டு சட்டத்தின் (RPwD Act) கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்களையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்று உரிமைக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தேசிய மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தளம் (NPRD) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு செயற்பாட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் அக்கறையுள்ள பொதுமக்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் 21 வகையான மாற்றுத்திறன்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படும் என்று கூறியிருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இலக்கு சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு இந்தக் கணக்கெடுப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அரசியல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மன்றம் பகிர்ந்த தகவல்களை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கையில், கணக்கெடுப்பில் 9 வகையான மாற்றுத்திறன்கள் மட்டுமே பதிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பார்வைக் குறைபாடு, கேட்கும் திறன் குறைபாடு, பேச்சுக் குறைபாடு, இயக்கத் திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மனநோய், ஆசிட் தாக்குதலால் ஏற்பட்ட மாற்றுத்திறன், நாள்பட்ட நரம்பியல் நோயால் ஏற்பட்ட மாற்றுத்திறன் மற்றும் ரத்தக் கோளாறு ஆகியவையாகும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த 9 வகைகளில் 6 வகைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அந்தக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகப் பதிவானது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதமாகும். 9 வகையான மாற்றுத்திறன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள 9 வகைகளும் பரந்த பிரிவுகளாகும். அவற்றுக்குள் மேலும் குறிப்பிட்ட பல்வேறு மாற்றுத்திறன்கள் அடங்குகின்றன. மேலும், ஒருவருக்கு அதிகபட்சம் மூன்று மாற்றுத்திறன்கள் இருந்தால், அவற்றின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறன்களை பதிவு செய்வதற்கான வசதியும் கேள்வித்தாளில் வழங்கப்பட்டுள்ளது என்றார். கணக்கெடுப்பு வகைகளை இறுதி செய்வதற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய 3 நாள் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், வெவ்வேறு வகையான மாற்றுத்திறன்களை தொழில்நுட்ப ரீதியாக மதிப்பிடவோ உறுதிப்படுத்தவோ களப்பணியாளர்கள் தகுதி பெற்றவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, 2027-ம் ஆண்டு கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறன்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் அந்த அதிகாரி கூறினார். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இயக்கம் அல்லது உடல் இயக்கக் குறைபாடு, கேட்கும் திறன் குறைபாடு மற்றும் பார்வை தொடர்பான குறைபாடு ஆகிய மூன்று வகைகள் நாட்டின் மொத்த மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்தன. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள், குள்ளத்தன்மை, தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் செவித்திறன்-பார்வைத்திறன் இரண்டையும் இழந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறன்கள் தனித்தனி பிரிவுகளாக தெளிவாக குறிப்பிடப்படாதது வருத்தமளிப்பதாக அந்த உரிமைக் குழு தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய கணக்கெடுப்பு முறையில் தலசீமியா, ஹீமோபிலியா மற்றும் சிக்கிள்-செல் நோய் போன்ற தனித்தனி பாதிப்புகள் அனைத்தும் ஒரே “ரத்தக் கோளாறு” என்ற பிரிவுக்குள் கொண்டு வரப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான அரசியல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மன்றத்தின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞரான சஷாங்க் பாண்டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், பரந்த பிரிவுகள் மட்டுமே வழங்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவின் கீழும் உள்ள குறிப்பிட்ட மாற்றுத்திறன்களைப் புரிந்துகொள்ள கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முறை முறையாக அறிவிக்கப்படவில்லை என்றால், அது மாற்றுத்திறனாளிகளுக்கு இரட்டை பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். தங்களுக்குள்ள சரியான மாற்றுத்திறனைத் தெரிவிக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிலை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். சிக்கிள்-செல் அனீமியா, தலசீமியா போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு தனித்தனி தரவுகள் சேகரிக்கப்படாதது முரண்பாடாக உள்ளது என்றும் அவர் கூறினார். குறிப்பிட்ட நோய்களுக்காக அரசு தேசிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அவற்றுக்கான தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த முறை புதிதாக மூன்று பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை ஆசிட் தாக்குதலால் ஏற்பட்ட மாற்றுத்திறன், நாள்பட்ட நரம்பியல் நோயால் ஏற்பட்ட மாற்றுத்திறன் மற்றும் ரத்தக் கோளாறு ஆகியவையாகும். 2016-ம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 1995-ம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் சட்டத்துக்குப் பதிலாக கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் மாற்றுத்திறன் என்பது காலப்போக்கில் மாறக்கூடிய மற்றும் வளர்ச்சியடையும் தன்மை கொண்டது என்பதை அங்கீகரித்து, மாற்றுத்திறன்களின் எண்ணிக்கையை ஏழிலிருந்து 21 ஆக அதிகரித்தது. பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ளிட்ட சில பிரிவுகள் முதன்முறையாக இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. உரிமைக் குழுக்களின் கூற்றுப்படி, தற்போதைய கணக்கெடுப்பு நடைமுறை துல்லியமற்ற தரவுகளை உருவாக்குவதுடன், மாற்றுத்திறனாளிகளில் சில முழுக் குழுக்களையே அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் “கண்ணுக்குத் தெரியாதவர்களாக” மாற்றிவிடும். இதன் தாக்கம் அரசின் கொள்கை உருவாக்கம், திட்ட வடிவமைப்பு, பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் அரசின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிலும் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதிபலிக்க வேண்டும்; காலாவதியான மற்றும் போதுமானதாக இல்லாத வகைப்பாடுகளைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில், மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்த 9 வகையான குறைபாடுகள் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. லடாக், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் நடத்தப்படும் சுயக் கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் இந்த கவலை எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், மாற்றுத்திறனாளிகளைச் சரியாகக் கண்டறியும் வகையில், தற்போதைய படிவத்தில் 21 வகையான குறைபாடுகளைச் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.