நேபாள திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 77 பேர்: சத்குரு வீடியோ பதிவு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில், தனது ஈஷா அறக்கட்டளையை சேர்ந்த 77 பேர் சிக்கியுள்ளதாகவும், இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சத்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பீகாரில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு, உருகிய பனிநீர் போதே கோசி ஆற்றில் கலந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 384 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளின் நிலை குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவர்களில் குறைந்தது 105 பேர் இந்தியர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட நிலவர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் 291 வெளிநாட்டினரும், 93 நேபாள நாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். வெளிநாட்டினரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (NRI) என அடையாளம் காணப்பட்ட 37 பேரின் நிலையும் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திபெத் – சீனா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஈஷா அறக்கட்டளையை சேர்ந்த 77 பேர் சிக்கியுள்ளதாக சத்குரு வீடியே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், திபெத் – சீனாவின் கியாரங் (Gyirong) பகுதியில் மிகக் கொடூரமான மற்றும் துயரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் எங்களின் கைலாஷ் யாத்திரைக் குழுவைச் சேர்ந்த ஒரு குழுவினரும் சிக்கியுள்ளனர். அவர்கள் திரும்பி வரும் வழியில், வெள்ளம் ஏற்பட்டபோது குடியேற்ற அலுவலகத்தில் (Immigration Office) இருந்துள்ளனர். அந்தக் கட்டிடமும், நகரத்தின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிகிறது. எங்கள் தன்னார்வலர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தச் சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். மீட்புப் பணிகளுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். குடியேற்ற அலுவலகத்தில் இருந்தவர்களின் நிலை அல்லது அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட முடியுமா என்பதை அறிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதில் எவ்வளவு ஆபத்து இருந்தாலும், மீட்புப் பணிகளில் எங்களால் முடிந்த அளவு பங்கேற்கத் தயாராக உள்ளோம். எங்கள் கைலாஷ் யாத்திரையில் இடம்பெற்றுள்ள 21 குழுக்களில், இதுவரை 495 பேர் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். தற்போது 743 பேர் திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் உள்ளனர். மேலும், 77 பேர் குடியேற்ற மையத்தில் இருந்துள்ளனர். 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் திம்முர் (Timure) பகுதியில் உள்ளனர். எங்கள் குழுவில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும், இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானோரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிகக் கடினமான சூழ்நிலையில் நீங்கள் அனுபவிக்கும் வலியை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். எங்களால் முடிந்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் விடமாட்டோம். தற்போதைய சூழ்நிலையில் முடிந்தவரை சிறந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக, நான் தனிப்பட்ட முறையில் இப்பகுதியில் இருந்து பணிகளை ஒருங்கிணைத்து வருகிறேன் என சத்குரு தனது சமூகவலைதள பக்கத்தில் பதவிட்டுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தில் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 77 பேர் சிக்கியுள்ளதாக சத்குரு தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட தங்களது அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான பனிச்சரிவினால் பனிநீர் உருகி கோசி ஆற்றில் கலந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பீகாரில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.