கோவை அப்துல் கலாம் சிறப்புப் பள்ளிக்கு நிதி நெருக்கடி: 87 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோவையின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளியில் பயிலும் 87 சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் சிகிச்சை தடையின்றி தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 87 சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி தொடரக் கோரித் தமிழக அரசுக்கும் ஆட்சியருக்கும் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. போதிய நிதி ஆதரவு இல்லாததால் 87 சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் சிகிச்சைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதற்குத் தீர்வுகாண வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி' (DADSS) நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள கோரிக்கை அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட 'தார்டோ' (DARDO - Differently Abled Research & Development Organisation) அமைப்பின் சார்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி' (DADSS) இயங்கி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 87 சிறப்புத் தேவையுடைய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குக் கல்வி, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள், உணவு, போக்குவரத்து மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய மற்றும் தொடர்ச்சியான நிதி ஆதரவு இல்லாத காரணத்தால், தற்போது பள்ளியை நடத்துவதில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களாகப் பள்ளி ஆசிரியர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் சிகிச்சையாளர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எனவே, மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் இந்த இலவசச் சிறப்புப் பள்ளியைத் தடையின்றித் தொடர்ந்து நடத்தத் தமிழக அரசு நேரடியாக நிதி உதவி வழங்க வேண்டும்; அல்லது, நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Funds) தொடர்ச்சியாகக் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய வழிகாட்டுதலும் ஒருங்கிணைப்பும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வியும் எதிர்காலமும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் அமைதிவழி கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இது வெறும் நிதியுதவி கோரிக்கை மட்டுமல்ல; ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் ஆகும். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்களும் மனிதநேயத்துடன் பரிசீலித்து உடனடித் தீர்வு வழங்க வேண்டும் எனப் பள்ளி நிர்வாகத்தினர் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு உள்ளனர். செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

கோவையில் செயல்பட்டு வரும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அப்பள்ளியில் பயிலும் 87 குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வி மற்றும் சிகிச்சை தடையின்றி தொடரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.