12,000 பேருக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி: திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்
திருச்சி தென்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி எம்.பி துரை வைகோ, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை தயாரித்து வழங்குமாறு ஒன்றிய அரசு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒன்றிய அரசை தாம் வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சர்பானந்தா சோனாவால், பியூஸ் கோயல் உள்ளிட்டோரை அவ்வப்போது சந்தித்துப் பேசியதாகவும் அவர் கூறினார். இந்தச் சந்திப்புகளின் போது, நிர்மலா சீதாராமன் திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது மிகவும் நல்ல முடிவு எனத் தெரிவித்தபோதிலும், தமிழ்நாடு அரசிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு இது தொடர்பாக எந்தவொரு திட்ட முன்மொழிவும் வரவில்லை என அதிகாரிகளும் அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர். மேலும், தமிழ்நாடு முக்கிய துறைமுகங்களுக்கு நெருக்கமாக இருப்பதால் 'ரெட் ஜோன்' என வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் புதிய உலர் துறைமுகம் அமைக்க அனுமதிப்பது கடினம் என்றும், சிறப்பு வழக்காகக் கருதப்பட்டால் மட்டுமே அதனை முன்னெடுக்க முடியும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் மூலம் ஏற்படும் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியையும் துரை வைகோ எடுத்துரைத்தார். இதன் விளைவாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாக உறுதி அளித்தார். இக்கோரிக்கை குறித்து முதலமைச்சரையும் சந்தித்துப் பேசியதாக துரை வைகோ கூறினார். தற்போது ஒன்றிய நிதியமைச்சகத்திடம் இருந்து கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கான உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து இத்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு விரைந்து இதற்கான நிலத்தை அடையாளம் கண்டு ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால் திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் தொழில் மற்றும் ஏற்றுமதித் துறையில் மிகப்பெரிய பயனடையும் என்பதோடு, தொழில் முதலீடுகளையும் அதிக அளவில் ஈர்க்க முடியும். இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 2,000 வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக 10,000 வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். மேலும், கூடுதல் தொழிற்சாலைகள் உருவாகி வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதால், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே திருப்பூரில் சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் உலர் துறைமுகம் இயங்கி வரும் நிலையில், திருச்சியிலும் அதுபோன்ற ஒரு உலர் துறைமுகத்தை அமைக்க முடியும். அதேவேளையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை மையப்படுத்தி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உலர் துறைமுகம் அமைப்பது சிறப்பாக இருக்கும் என்றும், அதற்காக அடையாளம் காணப்பட்ட சில இடங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்த துரை வைகோ, திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க 100 சதவீதம் சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். உலர் துறைமுகம் (Dry Port) என்பது கடலில் இருந்து வெகு தொலைவில், உள்நாட்டில் அமைக்கப்படும் ஒரு சரக்கு போக்குவரத்து மற்றும் சுங்க அனுமதி நிலையமாகும். இதன் முக்கியப் பணிகளாக, கடல் துறைமுகத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே சரக்குகளுக்கான சுங்கச் சோதனைகள் மற்றும் அனுமதிகள் இங்கேயே வழங்கப்படுகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்கள் (Containers) இங்கு பாதுகாப்பாக சேமிக்கப்படுவதோடு, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இது நேரடியாக கடல் துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி: க.சண்முகவடிவேல்

திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்து வழங்க, தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஓராண்டாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சர்பானந்தா சோனாவால் மற்றும் பியூஸ் கோயல் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த உலர் துறைமுகம் அமைவதன் மூலம் திருச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது குறித்த தகவல்களை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் பகிர்ந்து கொண்டார்.