திரும்ப அணியில் சேர்க்க 'ஓ.கே'... ஹர்திக் போட்ட கண்டிஷனுக்கு மட்டும் 'நோ': இடியை இறக்கிய குஜராத் டைட்டன்ஸ்
தேவேந்திர பாண்டே இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் களமாடி வரும் இவர், கடந்த 2024 ஐ.பி.எல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார். அவரது தலைமையிலான அந்த அணி அறிமுக சீசனிலே (2022-ல்) கோப்பையை வென்று அசத்தியது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இதேபோல், அடுத்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதனால் அவரை மும்பை இந்தியன்ஸ் ஆர்வமுடன் அடுத்த சீசனிலே வாங்கி, கேப்டன் பொறுப்பையும் வழங்கியது. 5 முறை கோப்பை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஓரம் கட்டப்பட்டு, ஹர்திக் கேப்டன் ஆக்கப்பட்டார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக 2024 மற்றும் 2026 சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. 2025 சீசனில் பிளே-ஆப் சுற்றில் விளையாடி வெளியேறியது. இதனால் ஏமாற்றம் அடைந்த மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகத் தக்கவைக்க விரும்பவில்லை என்றும், அணியில் அவரது பங்களிப்பு குறித்தே பரிசீலித்து வந்ததாகவும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' முன்னதாகவே செய்தி வெளியிட்டது. ஹர்திக் பாண்டியாவுக்கு 'நோ' சொன்ன குஜராத் டைட்டன்ஸ் இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கே திரும்புவது தொடர்பாக அந்த அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால், தன்னை மீண்டும் கேப்டனாக நியமித்தால் மட்டுமே வருவதாக அவர் கண்டிஷன் போட்டதால், அவரை ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் மறுத்து விட்டதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிந்துள்ளது. "ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைவதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திற்குச் சம்மதம் தான். இது பற்றி அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடனும் பேசப்பட்டது; அவரும் அவரை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், கேப்டன் பதவிக்கான நிபந்தனையை அவர் முன்வைத்தபோது, அனைவரும் அதை நிராகரித்துவிட்டனர்," என்று தகவல் அறிந்த ஒருவர் கூறியிருக்கிறார். இது குறித்து கருத்துக் கேட்க தொடர்புகொண்டபோது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி ஹர்திக் பாண்டியா தரப்பு செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "வீரர் பரிமாற்றம் அல்லது வேறு எந்த விவகாரம் தொடர்பாகவும் ஹர்திக் பாண்டியா எந்தவொரு அணியுடனும் நேரடியாகப் பேசவில்லை. அவரை அணுகும் முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவை மும்பை இந்தியன்ஸ் அணியிடமே முன்வைக்கப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, 2015 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், அந்த அணியை 2022-ல் சாம்பியன் பட்டத்தை வெல்லச் செய்ததுடன், அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தங்கள் அணியில் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தயாராக இருந்தது. இருப்பினும், ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனைகளை ஏற்க அந்த அணி மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.